ஏன் வேலை செய்கிறீர்கள்?
03-12-2024லேவியராகமம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
11-12-2024ஆதியாகமத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
இன்றைய பெரும்பான்மையான வாசகர்கள் ஆதியாகமத்தை கவனமாக தொகுக்கப்பட்ட ஓர் இலக்கிய புத்தகமாக பார்ப்பதில்லை. இந்த புத்தகத்தை நாம் துண்டு துண்டாக வாசிக்க பழகிவிட்டோம். கிறிஸ்தவர்களின் பொதுவான மற்றும் தனியாக வாசிக்கும் பழக்கமானது, ஆதியாகமத்தை ஓர் ஒத்திசைவான ஒரே புத்தகமாக புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திற்கு எதிராக குறைக்கிறது. இதன் விளைவாக முக்கியமான அம்சங்கள் தவறவிடப்படுகின்றன. இங்கு நான் ஆதியாகமத்தின் கவனிக்கவேண்டிய மிக முக்கிய மூன்று அம்சங்களை குறிப்பிடுகிறேன்.
1.ஆதியாகமம் தனித்துவமான ஓர் குடும்ப வரலாற்றின் வரிசையை கண்டறிய எழுதப்பட்டுள்ளது.
முதலாவது, ஒவ்வொரு தலைமுறையிலும் (ஓர் சந்ததி) ஒரு ஆண் உறுப்பினரை முன்னிலைப்படுத்தும் தனித்துவமான குடும்ப வரிசையின் வரலாற்றை கண்டறிய ஆதியாகமம் எழுதப்பட்டது. ஆதியாகமத்திற்கான கிரேக்க வார்த்தை “genealogy” (வம்சவரலாறு). இந்த சந்ததி ஆதாமில் துவங்கி மூன்றாவது மகன் வழியாக சேத், நோவாவிடம் செல்கிறது (ஆதி 5:1-32). நோவாவிடமிருந்து இந்த சந்ததி சேம் வழியாக ஆபிரகாமிடம் செல்கிறது (ஆதி 11:10-26). அதன்பிறகு, இவ்வரலாற்றின் வேகம் குறைந்தாலும் மற்றொரு தனிப்பட்ட குடும்ப வரிசையைப் பற்றிதான வரலாறு தொடர்கிறது. சாராளின் பிள்ளைப்பெறமுடியாத நிலை இந்த சந்ததியின் தொடர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்தாலும் தேவன் சாராளுக்கு ஓர் குமாரனாகிய ஈசாக்கை கொடுக்கிறார். ஈசாக்குக்கு அடுத்து இந்த சந்ததியின் வரலாறு ஏசாவின் இரட்டை சகோதரனாகிய இஸ்ரவேல் என்று அழைக்கப்படப்போகும் யாக்கோபிடம் செல்கிறது. ஏசாதான் அடுத்த சந்ததியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் ஏசா ஒரு வேளை போஜனத்துக்காக தனது சேஷ்ட புத்திரபாகத்தை தன் சகோதரனுக்கு விற்றுப்போட்டான் (ஆதி 25:29-34). யாக்கோபுக்கு அடுத்து இந்த புத்திரபாகத்தின் ஆசீர்வாதம் யோசேப்பு மற்றும் யோசேப்பின் மூத்த குமாரானாகிய மனாசேக்கு முன்பாக யாக்கோபு வைத்த யோசேப்பின் இளையகுமாரரான எப்பிராயீமுக்கும் நேராக செல்கிறது. (1 நாளாக 5:1-2, ஆதி 48:13-20). சுவாரஸ்யமாக, குடும்பத்தில் முதற்பேறானவர்கள் புத்திரபாகத்திலிருந்து ஏன் விலக்கப்பட்டார்கள் என்பதற்கான காரணங்களை ஆதியாகமம் அடிக்கடி காண்பிக்கிறது. (உதாரணமாக, ரூபன் தனது தகப்பனின் மனைவியிடத்தில் பிரவேசித்ததினால்; ஆதி 35:22).
யோசேப்பு தனது மூத்த சகோதரர்களை விட அதிகமான உரிமைகளை அனுபவிக்கும் நேரத்தில், ஆதியாகமம் இந்த சந்ததியின் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆதியாகமம் 38, யோசேப்பின் வாழ்க்கையின் கதைக்கு இடையூறாக பார்க்கப்பட்டு அடிக்கடி நிராகரிக்கப்படும் ஒரு பகுதியாகும். ஆனால் இங்கு யூதாவின் பக்கம் கவனம் திரும்புகிறது. இந்த வம்ச வரலாற்றின் நிகழ்ச்சிகளை கவனமாக வாசிக்கையில், யூதாவின் மூத்த சகோதரர்கள் தேவனால் அடிக்கப்படும் ஆபத்தில் இருக்கையில் ஆதியாகமம் 38 யூதாவின் பக்கம் திரும்புகிறது. வழக்கத்திற்கு மாறான தாமாரின் தலையீடு யூதாவின் வாழ்க்கையில் ஒரு தீவிரமான மாற்றத்தை கொண்டு வந்து இரட்டை குழந்தைகளின் பிறப்புக்கு வழிவகுத்தது. இந்த பிறப்பில் மீண்டும் முதற்பேறான புத்திரசுவிகாரமானது சேராவிடமிருந்து பாரேசுக்கு திரும்புகிறது. அதன்பிறகு, யாக்கோபு, யூதாவின் வம்சத்தில் ராஜாக்கள் பிறப்பதைக்குறித்து யூதாவை ஆசீர்வதிக்கிறார். (ஆதி 49:8-12). இந்த ஆசீர்வாதம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சாமுவேலின் காலத்தில் நிறைவேற ஆரம்பித்தது (சங்கீதம் 78:67-72).
ஏன் இந்த மரபுவழி வம்சம் மிக அவசியம்? ஆதியாகமம் 3:15 ல் ஏவாளின் வித்தாகிய ஒருவர் தேவனின் பரம எதிரியாகிய பிசாசாகிய சர்ப்பத்தின் தலையை மிதிக்கப்போகிறார் என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. ஆதியாகமத்தை நாம் வாசிக்கையில் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தானவர் பூமியில் தனது மக்களுக்கு ராஜாவாகவும், மத்தியஸ்தராகவும் இருந்து தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்பதை அறிந்துகொள்ள முடியும். எனவே இந்த எதிர்பாக்குதலுடன், ஆதியாகமம் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்குகிறது.
2.தேவன் ஆபிரகாமோடு நித்திய உடன்படிக்கையை செய்து அநேக ஜாதிகளுக்கு அவனை தகப்பனாக்குகிறார்.
இரண்டாவது, ஆதியாமகத்தில் உள்ள வம்சவழியின் மூலம் தேவன் ஆபிரகாமோடு நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்தி, அவன் அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவான் என்பதை கூறுகிறார் (ஆதி 17:4-5). ஆதியாகமத்தை வாசிக்கும் அநேக வாசகர்களும் இறையியலாளர்களும் ஆதியாகமம் 15 ல் சொல்லப்பட்ட ஆபிரகாம் இஸ்ரவேல் மக்களின் தகப்பனாவான் என்பதைப்பற்றி அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், ஆதியாகமம் 17 ன் உடன்படிக்கை மிகவும் முக்கியமானதாகவும், முந்தைய உடன்படிக்கையாகிய இஸ்ரவேல் குடும்பத்துக்கு மட்டுமல்ல அநேக ஜாதிகளுக்கும் ஆபிரகாமின் தந்தைதுவத்தை விரிவுப்படுத்துகிறதாகவும் உள்ளது. இந்த தந்தைத்துவம் சரீரப்பிரகாரமாக அல்லாமல் ஆவிக்குரிய ரீதியானது. ஆபிரகாமின் சந்ததியிலிருந்து வரப்போகும் அந்த நபரை ராஜாவாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு, அவர் ஆசிர்வாதத்தை கொண்டுவருவார் என்பதை விருத்தச்சேதனத்தின் உடன்படிக்கையானது உறுதிப்படுத்துகிறது. இந்த காரணத்திற்காகவே, வரக்கூடிய ராஜாவை சேவிப்பதைப் பற்றிய இஸ்ரவேல் நாட்டின் எதிர்ப்பார்ப்பு, ஈசாக்கு யாக்கோபுக்கு புத்திரபாக்கியத்தின் ஆசீர்வாதத்தை அளிப்பதிலும் (ஆதி 27:29), அதேபோல் யாக்கோபு யூதாவுக்கு அளித்த ஆசீர்வாதத்திலும் பிரதிபலிக்கிறது (ஆதி 49:10). நாம் புதிய ஏற்பாட்டிற்கு செல்லும்போது, அப்போஸ்தலானாகிய பேதுரு, ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை இயேசு கிறிஸ்துதான் நிறைவேற்றினார் என்பதை பிரசங்கித்தார் (அப் 3:25-26). இதேபோல், அப்போஸ்தலனாகிய பவுலும், விருத்தசேதனத்தின் உடன்படிக்கையின் அனைத்து வாக்குத்தத்தங்களும் புறஜாதியார் தேவனுடைய மக்களோடு இணைக்கப்படுவதற்காகவே கொடுக்கப்பட்டது என்பதை கூறுகிறார்
(கலா 3:15-29).
3.வம்ச வரலாற்றோடு இணைக்கப்பட்ட ஆசீர்வாதத்தின் கருப்பொருள் இறுதியாக இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு செல்கிறது.
ஆதியாகமத்தின் மூன்றாவது அம்சம், சந்ததிகளின் வரலாற்றோடு இணைக்கப்பட்ட ஆசீர்வாதம் அது வாக்குத்தத்தங்களை கிறிஸ்துவை நோக்கி கொண்டு செல்கிறது. இது அடிக்கடி அநேகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு அம்சமாகும். ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தின் விளைவாக தேவனின் சாபம் மனுக்குலத்தின் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. இந்த சாபத்திற்கு நேர் எதிர்மாறாக, ஆபிரகாமை அழைத்த தேவனின் அழைப்பு பூமியின் அனைத்து குடும்பங்களுக்கான தெய்வீக ஆசீர்வாதத்தின் சாத்தியத்தை வழங்குகிறது (ஆதி 12:1-3). பிறகு இந்த ஆசீர்வாதத்தின் கருப்பொருள் ஆபிரகாமின் சந்ததியோடு இணைக்கப்பட்டது (ஆதி 22:18). இந்த ஆசீர்வாதம் அனைத்து இஸ்ரவேல் மக்கள் மூலமாக வரும் என்று யூகிக்கப்பட்டாலும், ஆதியாகமம் இந்த ஆசீர்வாதத்தின் ஆதாரத்தை அடுத்தடுத்து வரும் ஓர் குறிப்பிட்ட வம்சத்தின் நபர்களுக்குள்ளாகவே அடக்குகிறது. இந்த ஆசீர்வாதம் (berekha) புத்திரபாக்கியத்தின் உரிமையைப் பெற்றுள்ள நபருக்கு மட்டுமே (bekorah) கொடுக்கப்படும். இதை நாம் மிக குறிப்பாக யாக்கோபு ஏசாவின் வாழ்க்கையில் பார்க்கலாம். இங்கு யாக்கோபு மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டு செல்வார் என்ற உண்மையை அவனது மாமனாகிய லாபான் அங்கீகரித்தான் (ஆதி 30:27-30). இதே முறையில், ஆதியாகமம் 39:5 ல் போத்திபார் வீட்டிற்கும், அனைத்திற்கும் யோசேப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் , அவன் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கிறான் என்பதை காண்பிக்கிறது. அதைத்தொடர்ந்து யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டாலும் பார்வோனுக்கு தகப்பனாக உயர்த்தப்படுகிறார் (ஆதி 45:8). கடுமையான பஞ்ச காலத்திலும் அநேக ஜாதிகளுக்கு ஆசீர்வாதத்தின் ஆதாரமாக யோசேப்பு இருந்தான்.
ஆதியாகமத்தின் முழுமையான வாசிப்பானது, இப்புத்தகம் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. ஓர் இலக்கிய கல்லூரியாக இருந்து பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் நபர்கள் மூலமாக நம்மெல்லாருக்கும் தெய்வீக ஆசீர்வாதத்தின் ஆதாரமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னோக்கி காண்பிக்கும் ஓர் ஒருங்கிணைந்த செய்தியை ஆதியாகமம் நமக்கு கூறுகிறது.
இந்த சிறு கட்டுரையானது Every Book of the Bible: 3 things to know என்ற தொகுப்பின் பகுதியாகும்.