
கொலோசெயர் நிருபத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
04-03-2025
நாகூம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
11-03-20252 பேதுருவிலிருந்து அறிய வேண்டிய மூன்று அடிப்படை காரியங்கள்

1. அப்போஸ்தலனாகிய பேதுரு, கள்ளப்போதனைகளின் ஆபத்துகள் மற்றும் அதனால் உண்டாகும் அவபக்தியுள்ள நடக்கைகளையும் குறித்து சபைகளை எச்சரிக்கிறார்.
பேதுரு இந்த நிருபத்தில் கள்ளப்போதகர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் 2 பேதுரு 2:1–3-ல் , அவர்கள் ஒரு காலத்தில் தங்களை விசுவாசிகள் என்று அறிக்கையிட்டு பின்பு அதை விட்டு பின்வாங்கிப்போனார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார். பேதுரு அவர்களை குறித்து சொல்லும்போது அவர்கள் கேட்டுக்கேதுவான வேதபுரட்டுகளை தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களை கிரயத்துக்கு கொண்ட ஆண்டவரை மறுதலித்து தங்களுக்கு தீவிரமான அழிவை வருவித்துக்கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார். நம்மால் தவிர்க்கயியலாத வகையில் தவறான கள்ள உபதேசம் நம்மை தவறான பாவ நடத்தைக்குள்ளாக கொண்டு செல்லுகிறது. அவர்களின் விசுவாச துரோகத்தின் காரணமாக, அவர்கள் மீதான தேவனின் நியாயத்தீர்ப்பும் நிச்சயமாக வந்து பலிக்கும்.
பேதுரு நிருபத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட பல குறிப்புகளின் அடிப்படையில், கள்ள போதனையாளர்கள் பவுலின் கடிதங்களை அவர்கள் தங்களுடைய தவறான (சட்டத்திற்கு எதிரான – antinominian) நடத்தையை நியாயப்படுத்த அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். 2 பேதுரு 2:19-ல், பேதுரு எழுதுகிறார், “தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும் அவர்களுக்கு சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்” என்றும், தொடர்ச்சியாக” 2 பேதுரு 3:15–16-ல் பவுலின் கடிதங்களில் “அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாக இருக்கிறது. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங்களை புரட்டுகிறது போல தங்களுக்கு கேடு வரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்,” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், நம்முடைய காலங்களில் நிகழ்வது போலவே அப்போஸ்தலர்களுடைய காலத்திலும் பவுலின் நிருபங்களும் தவறான விதத்தில் வேத புரட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டது.
2. பேதுரு தனது வாசகர்களுக்கு, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே தேவனுக்கு முன்பாக நாம் நீதியுள்ளவர்களாக நிற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
“நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்கள்” (2 பேதுரு 1:1) என்று பேதுரு எழுதுகிறார். விசுவாசத்தின் மூலமாக நமக்கு அளிக்கப்பட்ட இந்த உன்னதமான நிலைப்பாடானது இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்திலிருந்து நமக்கு அளிக்கப்பட்ட மிக உன்னதமான பரிசாகும். – தேவனுடைய இந்த நீதியானது – அது நமக்கு கொடுக்கப்பட்ட ஒன்றாகும் (எபே. 2:8–9). அத்தகைய விசுவாசம் தேவனால் கொடுக்கப்பட்ட அனைவரும் “நம்மைப்போல” (அப்போஸ்தலர்கள்) ஒரே விதமான விசுவாசத்தை பெற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள். விசுவாசிகள் தேவனுக்கு முன்பாக பெற்றுக்கொண்ட இந்த நீதியின் நிலைப்பாட்டிற்கு, கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்னும் கருவியே அடிப்படையாயிருக்கிறது மற்றும் அது தேவனாலே உண்டாயிற்று என்றும் பேதுரு உரைக்கிறார்.
இந்த நீதியினால் உண்டாகும் நமது நிலைபாடானது, கள்ளப்போதகர்கள் மற்றும் அவர்களை பின்பற்றுபவர்களாலும் முரண்படுவதாகவும் பேதுரு தன்னுடைய இரண்டாம் நிரூபம் முழுவதிலும் எழுதுகிறார். அவர்கள் ஒரு காலத்தில் நீதியின் வழியை அறிந்தவர்களாகவும், பேதுருவும் அப்போஸ்தலர்களும் பிரசங்கித்த சுவிசேஷத்தை விசுவாசிப்பதாகவும் கூறி, பின்னர் அதிலிருந்து பின்வாங்கிப்போயினர். நீதியின் மார்க்கத்தை ஒருபோதும் அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும் என்று பேதுரு எழுதுகிறார் (2 பேதுரு 2:21). மற்றும் இந்த கள்ள போதகர்கள் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களிலிருந்தும் முரண்படுவதாக நோவாவை மேற்கோள் காட்டி அவன் “நீதியை பிரசிங்கித்தான் ” (2 பேதுரு 2:5) என்றும் கூறுகிறார். இந்த விசுவாசத்தின் ஈவானது, நீதிமான்களையும், சத்தியத்தை விட்டு பின்வாங்கி தேவனின் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கும் கள்ளப்போதவர்களையும் எவ்வாறு வேறுபடுத்தி காட்டுகிறது என்றும், இது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்த நிருபத்தின் இரண்டாவது அதிகாரம் முழுவதுமாக பேதுரு தெளிவாக விளக்கப்படுத்தி காண்பிக்கிறார்.
3.கள்ளப்போதகர்கள் இயேசுகிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையை மறுதலிக்கிறவர்கள் என்று பேதுரு அறிவுறுத்துகிறார்.
பேதுரு ஏற்கனவே மறுரூப மலையில் இயேசுகிறிஸ்துவோடு இருக்கும்போது அவருடைய மகிமையை கண்ணார கண்டவர்கள் என்றும் (2 பேதுரு 1:16–21), இதுவே தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மீதான பேதுருவினுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பதாகவும் அவர் அறிவிக்கிறார்.
2 பேதுரு 3:3–7-ல், பேதுரு தனது நிரூபத்தை வாசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக,
“கடைசி நாட்களில் பரிகாசக்காரர் வந்து தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாய் இருக்கிறதே என்று சொல்லுவார்கள். “
“பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு தேவபக்தியில்லாதவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்றும் சொல்லுகிறார்.
நம்முடைய கர்த்தரின் வருகையைப் பற்றிய குழப்பம், நம்முடைய காலங்களில் இருப்பது போலவே, ஆதிகால திருச்சபையிலும் பொதுவாக காணப்பட்டது (பவுலின் 2 தெசலோனிக்கேயர் நிருபத்தில் கடைசிக் காலங்களைப் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்களையும் நாம் இங்கே நினைவில் கொள்வோம்). இன்றைய நவீனகால வேதாகம தீர்க்கதரிசன வல்லுநர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய பல காட்டுத்தனமான மற்றும் அவலட்சணமான விளக்கங்களையும், மதியீன சிந்தனை போக்கையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே கிறிஸ்துவை அறியாத புறஜாதி மக்களும் இவர்கள் நிமித்தம் வேதத்தினுடைய எந்தவித போதனைக்கு முக்கியத்துவமும் கொடுக்காமல். கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை, மரித்தோரின் உயிர்த்தெழுதல், முழு உலகிற்குமான நியாயத்தீர்ப்பு, புதிய வானம் -புதிய பூமி போன்ற கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை அறியாமலும், விசுவாசிக்காமலும் இருக்கிறார்கள்.
பேதுரு தனது நிருபத்தை வாசிப்பவர்களை தேற்றும் வண்ணமாக, அவர்களுக்கு இவ்விதமாக நினைப்பூட்டுகிறார்:
“தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை குறித்து தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமடவென்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்து போம்.” (2 பேதுரு 3:9–10)
எனவே பரியாசக்காரர்கள் ஆக்கினைக்குட்படும்படிக்கு, தேவனுடைய பிள்ளைகள், வரவிருக்கும் மகிமையின் மீதான நம்பிக்கையைப்பற்றிகொண்டு, “அவருடைய வாக்குத்தத்தின்படியே, நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்” (2 பேதுரு 3:13) என்று கூறி பேதுரு இறுதியாக ஊக்கப்படுத்தி முடிக்கிறதை இந்த நிருபத்தில் பார்க்கலாம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.