
அன்பின் பிணைப்பு
30-10-2025
பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்
06-11-2025கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்
(Tracing the Story of Christmas)
முனைவர் ஸ்டீபன் ஜே. நிக்கோலஸ்
கிறிஸ்துமஸ் கதையைப் புரிந்துகொள்ள, நாம் சிறிதுகாலம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். இயேசுவின் பிறப்பைக் குறித்து சிந்திக்க சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி பார்ப்பது மட்டுமல்ல, நம்முடைய முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாள் இருந்த காலத்திற்கே முழுவதுமாகப் பின்னோக்கிச் நாம் செல்ல வேண்டும்.
தேவன் அவர்களைப் பசுமையான, பரிபூரணமான ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இருந்தன. அவை பரிபூரணமாக இருந்தன. அதன்பிறகு, அவர்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்தனர். அதன் விளைவாக, தேவன் அவர்களை அங்கிருந்து வெளியே அனுப்பினார். இதனால் ஆதாமும் ஏவாளும் சாபத்தின் கீழாக வாழ வேண்டியிருந்தது. ஆனால், தேவன் வானத்திலிருந்து இடி முழக்கம் போலச் அவர்களை சபித்தபோது , ஒரு வாக்குத்தத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு ஒரு வித்து (Seed) குறித்த வாக்குத்தத்தத்தை கொடுத்தார், அதாவது ஸ்திரீயின் மூலமாகப் பிறக்கும் ஒரு வித்தை குறித்து வெளிப்படுத்தினார். அந்த வித்து தவறான எல்லாவற்றையும் சரியாக்குவார் என்றுரைத்தார். உடைந்த போன எல்லாவற்றையும் அவர் முழுமையாக்குவார் என்றும், புயலால் அலைக்கழிக்கப்படும் கடலை போன்ற கொந்தளிப்பும், துன்பமும் இருக்கும் இடத்தில், இந்த வித்து சமாதானத்தையும் ஒப்புரவாக்குதலையும் கொண்டுவரும் என்று வாக்குபண்ணினார்.
பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமத்தின் மூன்றாம் அதிகாரம், முரண்பாட்டையும், பகையையும் (Conflict and Enmity) பற்றிப் பேசுகிறது. அமைதியை மட்டுமே அறிந்திருந்த ஆதாம் மற்றும் ஏவாள், இப்போது கடுமையான பாவ போராட்டத்திற்குள் நுழைந்தனர். இதைத் தாண்டி பூமியும் அவர்களுக்கு ஒரு சவாலாக மாறிற்று. காயத்தை ஏற்படுத்தக்கூடிய முள்ளும் குறுக்கும் அவர்களுக்கு இந்த சாபத்தை எப்பொழுதும் நினைவூட்டுகிறதாய் அமைந்தது. ஒரு கவிதை வரி இப்படியாக கூறுகிறது- “இயற்கையானது பல் மற்றும் நகங்களின் இரத்தத்தால் மூழ்கியுள்ளது” அதாவது, இயற்கை என்பது ஒரு தொடர்ச்சியான போர் மற்றும் போராட்டம் நிறைந்த இடமாகவே உள்ளது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தானதும்கூட (the promised Seed) இந்தக் கொடூரமான மோதலுக்குள் நுழையும்; அப்பொழுது மாபெரும் நாசக்காரனாகிய சர்ப்பத்தோடு (Serpent) அவர் போராட வேண்டியிருக்கும். ஆனால், அந்த ஸ்திரியின் வித்தானவர் ஆதியாகமம் 3 இல் வாக்குத்தத்தம் பண்ணினபடியே சர்ப்பத்தை ஜெயித்து, இறுதியாக வெற்றிபெற்று, சமாதானத்திற் கேதுவானவைகளை நம்மேல் பொழிய பண்ணுவார் என்றும் தெரிவிக்கிறது.
ஆனாலும், இந்த ஸ்தீரியின் வித்தானவர் வருவதற்கு நீண்ட காலம் ஆனது.
ஆதாம் மற்றும் ஏவாளுக்கு காயீனும் ஆபேலும் பிறந்த போதிலும் அவர்கள் அந்த வித்து அல்ல. காயீன் ஆபேலைக் கொன்ற பிறகு, தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு சேத்தை (Seth) கொடுத்தார் – இது மிகவும் குழப்பமான சூழலில் இருந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு சிறிய கிருபையாகும். ஆனால் சேத்தும் அந்த வித்து அல்ல. அதை தொடர்ந்து அநேக சந்ததிகள் உண்டாயின. தலைமுறைகள் வருவதும் தலைமுறைகள் மறைவதுமாக அநேக வருடங்கள் கடந்துபோயின.
இதற்குப் பிறகு பூமியில் ஆபிரகாமின் வாழ்க்கையை பார்க்கலாம். மிகவும் வயதான இந்த மனிதனை, தேவன் அழைத்து, அவனையும் அவனுடைய மனைவியாகிய சாராயைக் கொண்டும் ஒரு தேசத்தை எழும்ப பண்ணினார். அந்தத் தேசம், பாவத்தினால் கெட்டுப்போன, நம்பிக்கையற்ற உலகிற்கு ஒரு பிரகாசமான ஒளியாக அமைந்தது. மீண்டும், தேவன் இந்த குடும்பத்திற்கு ஒரு வித்து, அதாவது அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்கிற வாக்குத்தத்தத்தை கொடுத்தார். அவர்கள் அந்த வித்து ஈசாக்காக இருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் ஈசாக்கும் மரணத்தை தழுவினான்.
இந்தக் கதை தலைமுறை தலைமுறையாகத் திரும்பத் திரும்ப வந்து போயின. இதனால், எல்லாவற்றையும் சீர்படுத்தி, சமாதானத்தைக் கொண்டுவரும் அந்த ஸ்தீரியின் வித்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாயிற்று. நகோமி என்ற விதவையும், அவளுடைய மருமகளான ரூத்தும் இந்த மீட்பின் சரித்திரத்திற்குள் நுழைகின்றனர். அவர்கள் மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைக்குள்ளாக இருந்தனர். ஆதி காலங்களில், இதுபோன்ற ஆதரவற்ற மக்களின் வீழ்ச்சியைத் ஆதரிக்க சமூகப் பாதுகாப்பு வலைத்தளங்கள் எதுவும் இருக்கவில்லை.
கணவன்மார்களும் மகன்களும் இல்லாத நிலையில் , இந்த விதவைகள் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களாய், ஒவ்வொருவேளை உணவுக்காகவும் அவதிப்பட்டனர். அவர்களுடைய நம்பிக்கை ஒரு நூலிழையில் காணப்பட்டது. பிறகு போவாசின் வருகையை தொடர்ந்து, ஒரு ஆணாக பெண்ணை சந்திக்கும் சுவாரஸ்யமான ஒரு கதையை இங்கே பார்க்கிறோம். போவாஸ் ரூத்தை சந்திக்கிறான் பிறகு அவர்களுடைய திருமணம் நிகழ்கிறது. விரைவிலேயே, ரூத்தின் வேதாகம சரித்திரம் முடிவடையவிருந்த நிலையில், ரூத்துக்கு ஒரு குமாரன் அதாவது ஒரு வித்து பிறந்தான். இந்தக் குமாரன் வாழ்க்கையை மீட்டெடுப்பவன் அல்லது, ஒரு மீட்பராக எண்ணப்பட்டான் (Restorer of life, a Redeemer). ஆனால், அவன் வரவிருக்கும் ஸ்தீரியின் வித்தாகிய கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நிழலாகவே இருந்தான், அவனும் மரித்தான்.
ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்த குமாரனுக்கு ஓபேத் என்று பெயரிடப்பட்டது. ஓபேத்துக்கு ஈசாய் (Jesse) என்றொரு மகன் இருந்தான். ஈசாய்க்குப் பல மகன்கள் இருந்தனர், அவர்களில் ஒருவன் மேய்ப்பன். ஒருசமயம் இந்த மேய்ப்பன் ஒரு கைப்பிடி கற்களை எடுத்து கோலியாத்தை வீழ்த்தினான். அவன் சிங்கங்களை எதிர்கொண்டான். அவன் ஒரு சிறந்த இசைக் கலைஞனாகவும் இருந்தான். அனைவருக்கும் தன் சொந்தத் தகப்பனுக்கும்கூட ஆச்சரியமளிக்கும் விதமாக, ரூத் மற்றும் போவாஸின் கொள்ளுப் பேரனும் ஈசாயின் மகனுமான இவன் இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டான்.
தாவீது சிம்மாசனத்தில் அமர்ந்த போது, தேவன் நேரடியாக அவனுக்கு மற்றொரு வாக்குறுதியைக் கொடுத்தார். இதுவும் ஒரு குமாரனைப் பற்றிய வாக்குறுதியாகும். தேவன், தாவீதின் குமாரன் என்றென்றும் ராஜாவாக இருப்பார் என்றும், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவே இராது என்றும் கூறினார். அதுவே தேவனுடைய வாக்குத்தத்தமாகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


