How-Can-I-Grow-in-My-Faith
நான் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்?
12-08-2025
Why-Is-the-Lords-Supper-a-Means-of-Grace
ஏன் கர்த்தருடைய பந்தி ஓர் கிருபையின் சாதனம்?
19-08-2025
How-Can-I-Grow-in-My-Faith
நான் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்?
12-08-2025
Why-Is-the-Lords-Supper-a-Means-of-Grace
ஏன் கர்த்தருடைய பந்தி ஓர் கிருபையின் சாதனம்?
19-08-2025

குடும்பத்தில் சீஷத்துவம்

Discipleship-in-the-Family

Dr.ஸ்காட்டி ஆண்டர்சன்

Discipleship in the Family – Scotty Anderson

சீஷத்துவத்தைப் பற்றிப் பேசும் எந்த ஒரு வேதப்பகுதியும், இயேசு உயிர்த்தெழுந்து தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த பிரதான கட்டளையைவிட (28:19-20)அதிக கவனத்தை ஈர்க்கமுடியாது. அந்த கட்டளை அவருடனிருந்த சீஷர்களுக்கு, (மத். 28:16) சீஷர்களை உருவாக்கும் (மத். 28:19-20) படியாய் கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்டது. மேலும், இயேசு, கிறிஸ்தவ ஞானஸ்நானம் மற்றும் வேதாகமப் போதனைகள் மூலமாக அதை எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை ஒழுக்கத்திற்குட்படுத்துவதற்கு முன்பாக , சீஷர்களை உருவாக்குவதற்கான கிறிஸ்துவின் இந்த வழிமுறையை உற்று நோக்குவது நல்லது.  கிறிஸ்துவின் இவ்விதமான ஒழுக்கம் சார்ந்த காரியங்கள் நம் வீடுகளில் காணப்படுவது அவசியமாகும். இது பெரும்பாலும் நாம் நினைக்கும் வகையில் பிள்ளைகளை ஒழுக்கத்திற்குட்படுத்தும் விதத்தையும் உள்ளடக்கியது (நீதி. 13:24; 19:18; 22:15; 23:13-14; 29:15-17), ஆனால் இது பெற்றோரிடமிருந்து இன்னும் மேலான காரியங்களையும்  எதிர்பார்க்கிறது.

முழு வேதவாக்கியங்களின் பின்னணியை நினைவுகூர்ந்து நீதிமொழிகள் புத்தகத்தை கவனமாக  வாசிக்காவிட்டால் , நாம் (மற்றும் அநேகர்) ஒழுக்க ரீதியாக பிள்ளைகளை மாற்றுதல் (behaviorism) என்ற மதச்சார்பற்ற உளவியல் அணுகு முறையில் (psychology) விழக்கூடும். அதாவது கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமாக பிள்ளைகளை பயிற்றுவிக்க முடியும் என்ற சிந்தனை போக்காகும். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் இதைவிட மேலான காரியங்களை வைத்திருக்கிறார். ஆவிக்குரிய ரீதியாக வழிநடத்தும் இருதயத்தை நம் எல்லாருக்கும் கிறிஸ்து கொடுத்திருக்கிறார் ஏனெனில்  நம்முடைய நடத்தைகள் இருதயத்துக்குள்ளிருந்து தான் வெளிவருகிறது (நீதி. 4:23; மத். 12:33-35; 15:10-20; லூக்கா 6:43-45). மேலும், பாவத்தினால் கறை படிந்த இருதயத்தோடு நாம் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்றும் வேதாகமம் கற்பிக்கிறது (சங். 51:5; ரோமர் 5:12). எனவே குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களும் அதாவது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருவருமே இந்த பாவ இருதயத்தை கொண்டிருப்பதால் இருவரின் பிரச்சனைகளும் உள்ளிருந்துதான் தீர்க்கப்பட வேண்டும்.

இது பெற்றோர்களை மீண்டுமாக பிரதான கட்டளைக்கு நேராக வழி நடத்துகிறது. சீஷத்துவத்தின் அடிப்படை குணாதிசயம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ஒரு புதிய இருதயமே. இந்த பணியை கிறிஸ்துவால் மட்டுமே செய்ய முடியும். தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் மூலம் தேவன் இவ்விதமாக கூறுகிறார், “நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன்,… உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவேன், என் ஆவியை உங்களுக்குள் வைத்து, என் கட்டளைகளின்படி நடக்கச் செய்து, என் நியமங்களைக் கைக்கொள்ளும்படி செய்வேன்” (எசேக். 36:25-27). கிறிஸ்துவின் பிரதான கட்டளையில் ஞானஸ்நானத்துடன் உள்ள தொடர்பு வெளிப்படையாக தெரிகிறது. ஒருவர், விசுவாசியின் ஞானஸ்நானத்தை (credobaptism) அல்லது குழந்தை ஞானஸ்நானத்தை (paedobaptism) பெற்றிருந்தாலும், ஞானஸ்நானம் என்பது உங்களுக்குச் செய்யப்படும் ஒரு காரியமேயல்லாமல், நீங்கள் உங்களுக்காகச் செய்வது அல்ல என்று பொதுவாக எல்லாரும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இது பரிசுத்த ஆவியானவரின் பணியினுடைய அவசியத்தைக் குறிக்கும் ஒரு வெளிப்புற அடையாளமாகும். கிறிஸ்தவ பெற்றோர் இதை நன்கு அறிந்து  வைத்திருக்க  வேண்டும்: இருதய மாற்றம் இல்லாமல் உண்மையான சீஷத்துவம் இல்லை. நம்முடைய பிள்ளைகளுக்கான சீஷத்துவத்தின் ஆரம்பம் ஞானஸ்நானத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்.

தங்கள் பிள்ளைகளின் இருதயத்தில் கர்த்தர் செயல்பட்டு மாற்றத்தை கொண்டுவரும்படியான  எதிர்பார்ப்புடன், பெற்றோர்கள் “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி நீங்கள் அவர்களுக்குப் போதியுங்கள்” (மத். 28:20) என்ற பெரும் பணியை செய்ய வேண்டும். மீண்டும், இது சிறு  பிள்ளைகளில் வெறுமனே நடத்தையை மாற்றும் ஒரு செயல் அல்ல. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய எல்லாவிதமான அவமதிப்பு, அநீதியான வன்முறை, பாலியல் ஒழுக்கக்கேடு, திருட்டு, பொய் மற்றும் போதுமென்கிற மனதில்லாமை ஆகியவற்றிற்கு தகுதியான  விளைவுகளுடன் சரியான முறையில் ஒழுக்கத்திற்குட்படுத்த வேண்டும்; மேலும் அதில் கண்டிப்புடன் கூடிய வார்த்தைகளும் உள்ளடங்கும் (நீதி. 29:15). ஆனால் நியாயப்பிரமாணத்திற்கு தேவனை மையமாக வைத்த ஒரு வரிசை உள்ளது (முதல் நான்கு கட்டளைகள், யாத். 20:2-11).

பெற்றோர்கள் “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்” என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை பிரதானப்படுத்த வேண்டும். இதில் அசைக்க முடியாத விசுவாசம் (யோவான் 14:6; லூக்கா 10:27) மற்றும் சுய வெறுப்பு மற்றும் பிறரை நேசித்தல் (மத். 16:24; 22:39), திருச்சபையில் முக்கிய பங்கு வகிப்பது (மத். 5:3-12), உலக செல்வத்தைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை அளிப்பது (1 தீமோ. 6:17-18), மற்றும் சபையை மையமாக வைப்பது (1 பேதுரு 4:8; 1 யோவான் 4:7; 2 தீமோ. 2:22) ஆகியவை அடங்கும். மேற்கண்டவைகளின் அடிப்படையில் சீஷத்துவம் என்பது வெறுமனே சிட்சை மற்றும் கடிந்து கொள்ளுதலை மாத்திரம் உள்ளடக்கவில்லை, அவை சுயக்கட்டுப்பாட்டை வளர்ப்பது, ஞானத்தில் வளர்ப்பது, சேவை செய்யும்படியான வாய்ப்புகளைத் தேடுவது, ஆபத்தை எதிர்கொள்ள ஊக்கப்படுத்துவது, மனச்சோர்வில் ஆறுதல் அளிப்பது, தவறான வழியில் செல்லும்போது மீண்டும் திருத்துவது, மற்றும் ஓய்வு அளிப்பது போன்றவைகளும் அடங்கும். பன்னிரண்டு சீஷர்களைப் பயிற்றுவிப்பதில், மேற்கண்ட ஒவ்வொன்றையும் இயேசு தனது நோக்கமாக வைத்தே செயல்பட்டார். இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. மாறாக, அவர் எவர்களை  ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பயிற்றுவித்தாரோ அவர்களுடைய திறமைகள், பாவத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் மனமாற்றம் ஆகியவற்றின் பின்னணி மற்றும் சூழ்நிலையோடு கூட அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவைகள் பெற்றோர்களிடமிருந்து அநேகம் பொறுப்புகளை கேட்க வேண்டியுள்ள நிலையில் உள்ளது. யதார்த்தமாக சொல்லப்போனால், அவர்களால் தனியாக செய்யக்கூடியதை விட  இன்னும் அனேக காரியங்களை ஆராய வேண்டியுள்ளது. ஆனால் தேவன் அவருடைய சபையில் காணப்படும் குறைவுகளை தன்னுடைய கிருபையின் மூலமாக நிறைவாக்குகிறார். பூரணமான குடும்ப சீஷத்துவம் என்பது, கிருபையின் பொதுவான வழிமுறைகளான பிரசங்கிக்கப்பட்ட வார்த்தை ஜெபம் மற்றும் திருவிருந்து (மற்றும் சபை ஒழுக்கம்).போன்ற சபையை மையமாக கொண்ட காரியங்களையும் உள்ளடக்கியது. ஒரு தந்தை தனது குடும்பத்தின் நன்மைக்காக, சபைக்கு முன்னுரிமை அளிக்காதே போவாரானால், அவருடைய பராமரிப்பில் உள்ள குடும்ப நபர்களுக்கு  ஜீவ வார்த்தையையும், பரிசுத்தத்திற்கேதுவான ஆசீர்வாதங்களையும்

தடை செய்கிறவராக இருக்கிறார். அவர் புதிய ஏற்பாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதப்பட்ட “ஒருவருக்கொருவர்” என்கிற கட்டளைகள் அனைத்தையும் கேலி செய்கிறார் என்றே சொல்லலாம். அவர் சோம்பேறித்தனமாகவோ அல்லது மிகவும் “ஞானமாகவோ” தெய்வ பக்திக்கு ஏதுவான காரியங்களை விட்டு பின்வாங்கினதினால், அவர் தனக்கும் அல்லது தன்னுடைய குடும்பத்திற்கும் தேவையான ஆசீர்வாதங்களை  எதிர்பார்க்க அவருக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் தன்னுடைய சுய விருப்பத்தின்படி சபையை நேசித்து அதற்காகத் தம்மை  தாமே ஒப்புக்கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சீஷனாய் இருப்பதை விட குறைவான காரியங்களையே தெரிந்து கொள்கிறார்  (எபே. 5:2, 25).

நிச்சயமாக, எந்த சபையும் பூரணமானதல்ல. ஆனால் சில சபைகள் மற்ற சபைகளை விட சிறப்பாக செயல்படுகின்றன (வெளி. 2-3). கர்த்தருடைய நாளில் ஒரு சிறு கூட்டமாக  ஒரு உண்மையான நல்ல உள்ளூர் திருச்சபையோடு சேர்ந்து ஆராதிக்கும் போது, ஞானஸ்நானம் மற்றும் பிரசங்க வார்த்தைகள் போன்றவைகளை நாம் அனுபவிப்பது மட்டுமல்ல, அத்துடன் தேவனையும் பிற விசுவாசிகளையும் சேவிக்க கூடிய வாய்ப்புகளும், சுயத்திற்கு மரிப்பதற்கும், மற்றும் நாம் பல காரியங்களை மாற்றி அமைத்து முக்கியமானவைகளை பிரதானப்படுத்தும் வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கின்றன . கிறிஸ்தவ வேதகல்வியை மேலும் படிப்பதன் மூலம், முழு குடும்பமும் இன்னும் அதிகமாக , “இதுவே வழி, இதில் நடவுங்கள்” (ஏசா. 30:21)  என்று கூடுதலான சத்தியங்களையும் கற்றுக் கொள்ள முடியும். ஞாயிறு ஆராதனையில் ஐக்கியப்படுவதன் மூலம், இந்த உலகில் கிறிஸ்துவுடன் நடக்க முயற்சிப்பவர்கள் சற்று குறைவாக பைத்தியக்காரத்தனமாக உணர உதவுகிறது மற்றும் சீஷத்துவம் மிகவும் அவசியமான வழக்கமான ஒன்று என்றும் உணர உதவுகிறது. சீஷத்துவம் ஒரு சமுதாய கட்டளையாக காணப்படுகிறது, ஆகவே அது ஒரு பொதுவான சபை சமுதாயம் சார்ந்த சூழலில் சிறப்பாக நிறைவேறுகிறது. திருச்சபையோடு இணைந்து காணப்படும் வாழ்க்கையின் ஆவிக்குரிய ஒழுக்கம் குடும்ப சீஷத்துவத்தின் ஒரே பகுதி அல்ல, ஆனால் அது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இந்தக் கட்டுரை, “கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்” (The Basics of Christian Discipleship) தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

ஆசிரியரைப் பற்றி:

டாக்டர். ஸ்காட்டி ஆண்டர்சன், தெற்கு கரோலினாவின் சிம்ப்சன்வில்லில் உள்ள வுட்ரூஃப் சாலை பிரெஸ்பிடீரியன் திருச்சபையின் குடும்ப ஊழியங்களுக்கான இணை போதகராக இருக்கிறார். 

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஸ்காட்டி ஆண்டர்சன்
ஸ்காட்டி ஆண்டர்சன்
El reverendo Scotty Anderson es pastor asistente de familias y jóvenes en Woodruff Road Presbyterian Church en Simpsonville, SC