
எவ்வாறு இயேசு உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்?
31-07-2025
இளைஞர்களுக்கு இறையியலைக் கற்பிப்பதற்கான மூன்று வழிகள்.
07-08-2025ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்?

ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்? ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம் என்ற கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Shorter Catechism) ஜெபம் ஒரு கிருபையின் சாதனம் என்று எளிமையாகக் கூறுகிறது: “வெளிப்பிரகாரமான மற்றும் சாதாரண சாதனங்கள் மூலமாக ஆண்டவராகிய கிறிஸ்து நமக்கு மீட்பின் நன்மைகளை கொடுக்கும்படியாய் அவருடைய நியமங்களை வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவருடைய ஜீவனுள்ள வார்த்தைகள், திரு நியமங்கள் மற்றும் ஜெபம் ஆகியவைகளே; இவை அனைத்தும் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் இரட்சிப்பிற்கு பயனுள்ளதாக காணப்படுகின்றன” (கேள்வி-பதில் 88). ஆனால் நாம் ஏன் இந்தக் கேள்விக்கு ஒரு உண்மையான பதிலைக் கொடுக்க, முற்படுகிறோம். “கிருபையின் சாதனம்” என்பதன் பொருள் என்ன என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தேவன் தம்முடைய கிருபையை நம்முடைய இருதயங்களில் செயல்படுத்துவதற்காக இந்த கிருபையின் சாதனங்களையே (media gratia) பயன்படுத்துகிறார் என்று இறையியலாளர்கள் வரையறுக்கிறார்கள். உங்கள் வீட்டின் குழாய்களுக்கு உள்ளூர் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை விநியோகிக்கும் குழாய்களைப் போல, தேவன் இந்த “வெளிப்படையான மற்றும் சாதாரண சாதனங்களை” பயன்படுத்தி நமக்கு இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை கொடுக்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. தேவன் இவ்விதமான சாதனங்களைப் பயன்படுத்துவதை நாம் வேதத்தில் மிகத் தெளிவாகக் காணலாம். விசுவாச அறிக்கை குறிப்பிடும் முதல் இரண்டு சாதனங்களான தேவனுடைய வார்த்தை மற்றும் திருநியமங்களை சிந்திப்பதன் மூலமாக நமக்கு எழும் கேள்விகளுக்கான பதிலையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
கிருபையின் சாதனமாகிய தேவனுடைய வார்த்தை;
தேவனுடைய வார்த்தையை பிரசங்கிப்பதன் மூலமாக தேவன் பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்கிறார் அதோடு அவருடைய ஆவியானவர் அந்த வார்த்தைகளை கேட்டு விசுவாசிக்கும்படியாக விசுவாசத்தையும் கொடுக்கிறார் (ரோமர் 10:17). இன்னும் அதிகமாக அவர் தம்முடைய வார்த்தைகளை பயன்படுத்தி தம்முடைய மக்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். பவுல் எபேசு மூப்பர்களுக்குச் சொன்னது போல: “இப்பொழுதும் சகோதரரே நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு சுதந்தரத்தை கொடுக்கவும் வல்லவராய் இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்” (அப்போஸ்தலர் 20:32).
திருநியமங்களின் மூலம் கிருபை:
அதேபோல, ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய பந்தி ஆகிய திரு நியமங்களும் கர்த்தர் தம்முடைய மக்களுக்கு இரட்சிப்பின் முழு நன்மைகளை அளிக்கப் பயன்படுத்தும் கருவிகளாகும். ரோமன் கத்தோலிக்க திருச்சபை கற்பிப்பது போல, திருநியமங்களில் பங்கேற்பதன் மூலம் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வதை பற்றி நாம் இங்கே பேசவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விசுவாசம் மற்றும் ஏற்கெனவே பெறப்பட்ட நீதிமானாக்குதலின் மூலம், கர்த்தர் இரட்சிப்பின் முழு நன்மைகளை திருநியமங்களின் மூலமாக நமக்கு வழங்குகிறார். நம்முடைய ஞானஸ்நானம், நம்முடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்கான ஒரு அடையாளம் மற்றும் முத்திரையாகும் (அப்போஸ்தலர் 2:38). நாம் பங்குபெறும் கர்த்தருடைய பந்தி ஒரு “ஆசீர்வாதத்தின் பாத்திரம்” ஆகும், அது நமக்கு “கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கடைவதையும்” மற்றும் “நாம் பிட்கிற அப்பம்” “கிறிஸ்துவின் சரீரத்தில் பங்கடைவதையும்” குறிக்கிறது (1 கொரிந்தியர் 10:16). நம்மை பரிசுத்தமாக்கி, பலப்படுத்தும் இந்த கிருபையை திரு நியமங்கள் மூலமாகவே நாம் பெற்றுக் கொள்கிறோம்.
ஜெபம் ஏன் கிருபையின் சாதனம்?
இப்போது ஜெபத்திற்கு வருவோம், பரலோகத்திலிருக்கும் நம் பிதா நம்மை ஆசீர்வதிக்கும் ஒரு வழியாக ஜெபம் இருப்பதை வேதத்தில் நாம் காண்கிறோம். சங்கீதக்காரன் இவ்விதமாக சொல்கிறார்:
“கர்த்தாவே, என் ஜெபத்துக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.” (சங்கீதம் 86:6)
மேலே நாம் சிந்தித்த விசுவாச அறிக்கையின் பதிலைப் போலவே, சங்கீதக்காரனுடைய இந்த எளிமையான மற்றும் ஆழமான
இருதயக் கூக்குரலானது ஜெபமும் கிருபையைத் தேடுவதற்கான ஒரு வழி என்பதை வெளிப்படுத்துகிறது. ஆயினும், ஜெபம் ஏன் கிருபையின் ஒரு சாதனம்? என்ற கேள்விக்கு சற்று திரும்புவோம். கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்காக பரிதபிக்ககூடிய நம்முடைய பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து பரலோகத்தில் வீற்றிருப்பதால், நாம் அவரிடத்தில் ஜெபிக்கும் போதெல்லாம் அவர் நம்முடைய தேவைகளை சரியான நேரத்தில் சந்தித்து நமக்கு தேவையான கிருபையை தர வல்லவரானதால், தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேர வேண்டும் (எபிரேயர் 4:15-16). எபேசுவிலுள்ள திருச்சபை, பலமடைந்து தேவனுடைய அளவற்ற அன்பை அறிய வேண்டும் என்று பவுல் அவர்களுக்காக ஜெபித்ததை பார்க்கலாம் (எபேசியர் 3:14-19). ஜெபிப்பதன் மூலமாக பரிசுத்தவான்கள் ஒரு ஆவிக்குரிய சமூகமாக வளர முடியும் (அப்போஸ்தலர் 2:42). அவிசுவாசிகளுக்காகவும் ஜெபங்களை ஏறெடுப்பதினால், அவர்களும் கிறிஸ்துவினுடைய இரட்சிக்கும் கிருபையை பெற்று கொள்ள முடியும் (ரோமர் 10:1).
ஜெபம் தேவனுடைய வார்த்தைக்கு உட்பட்டதுதான். தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுவதைக் கேட்பதன் மூலமாகவோ அல்லது அதன் அற்புதமான சத்தியங்களை வாசிப்பதன் மூலமாகவோ, நாம் தேவனுடைய ஆவியால் நிரப்பப்படுகிறோம். பின்னர், நாம் ஜெபிக்கும்போது, ஆவியானவரின் வார்த்தைகளையும்,தேவனுடைய சித்தத்தையும் மீண்டுமாக தேவனிடத்தில் தெரியப்படுத்துகிறோம். ஆகவே ஜெபம் நமக்கு தேவனுடைய கிருபையை அனுபவிப்பதற்கான ஒரு அற்புதமான சாதனமாகும்.
ஆசிரியரைப் பற்றி:
கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை உள்ளது.
Dr. Barry J. York – டாக்டர். பேரி ஜே. யார்க், பிட்ஸ்பர்க்கில் உள்ள சீர்திருத்தப்பட்ட பிரஸ்பைடேரியன் இறையியல் கல்லூரியின் தலைவர் மற்றும் போதக இறையியல், பிரசங்கம் ஆகியவற்றின் பேராசிரியர் ஆவார். அவர் “Hitting the Marks” என்ற நூலின் ஆசிரியருமாவார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.