
எவ்வாறு இயேசு வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்?
24-07-2025
எவ்வாறு இயேசு உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்?
31-07-2025இயேசு எப்படி “மெய்யான திராட்சச்செடி” யாக இருக்கிறார்?

சி.என். வில்போர்ன்
(How Is Jesus the “True Vine”?)
யோவான் சுவிசேஷத்தில் இயேசுவின் “நானே” என்ற கூற்றுகளில் ஏழாவதும் கடைசியுமான, “நானே மெய்யான திராட்சச்செடி” (யோவான் 15:1) என்னும் கூற்று எல்லாவற்றிலும் மிகவும் நூதனமான ஒன்றாக (ஒருவேளை இதை வாசிக்கும் புற ஜாதி மக்களுக்கு) இருக்கலாம். இதை வாசிக்கிற பலருக்கும் (மற்றும் பிரசங்கிகளுக்கும்) இந்தக் கூற்றை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஒரு கிறிஸ்தவர்களாக நாம் எப்படி ஆவிக்குரிய வாழ்வில் செழித்தோங்கி, நல்ல கனிகளை கொடுக்க முடியும் என்பதற்கான ஒரு உவமையாக மட்டுமே பார்க்கும்படியாக உந்தப்படுகிறார்கள். ஆனால் இயேசு இந்தக் கூற்றை சொல்லும்போது, அதை அங்கேயிருந்து நேரடியாக கேட்ட யூதர்கள் இவ்விதமாக புரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தக் கூற்றினுடைய முழுசாரமும், யூதர்களின் மனதை அவர்களுடைய எபிரேய பழைய ஏற்பாடு வேதாகமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும். தேவன் பழைய ஏற்பாட்டு காலங்களில் இஸ்ரவேல் ஜனங்களோடு கொண்டிருந்த மீட்பின் வரலாற்றில் இந்த திராட்சை செடி உருவகம் படர்ந்து காணப்படுகிறது. எனவே, இயேசுவினுடைய இந்த வார்த்தைகளின் சாரம், அங்கே இருந்த யூதர்களின் காதுகளில் ஒலிக்க தொடங்கினபோது, அவர் தன்னை முன்னிறுத்தி பழைய ஏற்பாட்டினுடைய திராட்சைச் செடி உவமைகளின் நிறைவேறுதலாக அவர் தன்னை பற்றி பேசியவைகளை, எண்ணி அவர்கள் வியப்படைந்திருப்பார்கள்.
சங்கீத புத்தகத்தில், சங்கீதக்காரன் இஸ்ரவேல் ஒரு தேசமாக எப்படி உருவானது என்பதைப் பற்றிப் பேசுகிறார்:
“நீர் (தேவனே) எகிப்திலிருந்து ஒரு திராட்சச்செடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.” (சங்கீதம் 80:8)
தீர்க்கதரிசியாகிய ஏசாயா, இஸ்ரவேலுக்கு அவர்களின் ஆவிக்குரிய பின்தங்கிய நிலையைப் பற்றி எச்சரிக்கும்போது, தேவனாலே நாட்டப்பட்டு, பராமரிக்கப்பட்ட ஒரு திராட்சத்தோட்டத்தைப் பற்றிய உருவகத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அது தரிசு நிலமாக மாறி, பலனில்லாமல் போயிற்று (ஏசாயா 5:1-6) மற்றும் எரேமியாவும் அதே விதமான பதத்தை பயன்படுத்துகிறார் (எரேமியா 2:21). இது ஒரு அழகான மற்றும் வேதனையான உருவகமாக காணப்படுகிறது.
தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலின் முழு வரலாறும் தேவனுடைய அன்பினாலும், அக்கறையினாலும் நிறைந்த பல சான்றுகளால் பின்னிபிணைந்திருக்கிறது. அவர் அவர்களை நித்தியத்திலிருந்து தேர்ந்தெடுத்து, அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து, வனாந்தரத்தின் வழியாக அவர்களை வழிநடத்தினார். அவர்களுக்குச் சொந்தமான ஒரு தேசத்தையும் கொடுத்தார். அவர்கள் ஒரு தேசமாக ஒருமித்து, ஆவிக்குரிய ரீதியாகச் செழித்து வளர்வதற்கு மட்டுமல்லாமல், உலகிலுள்ள எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதத்தின் கருவியாக இருக்கவும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் கொடுத்தார் (ஆதியாகமம் 12:3). ஆனால் அவர்கள் அவர் அளித்த ஈவுகளை வீணடித்து, தேசங்களை சுதந்தரிக்க காரணமாயிருந்த தேவனை விட்டு விலகிச் சென்றனர்.
இயேசு திராட்சச்செடியைப் பற்றிய உவமையை தன்னோடு இணைத்துப் பேசியபோது, இவைகலெல்லாம் அவருடைய சீஷர்களுக்குத் தெரிந்திருக்கும். திரள் கூட்டமான இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளம் அவர்களை விடுதலையாக்கின தேவனில் வேரூன்றியிருந்தது மல்லாமல், கர்த்தரும், இரட்சகருமான அவருடனான ஐக்கியத்தினாலே, அவர்களின் ஆவிக்குரிய நிலைப்புத் தன்மையும் அதனுடைய பலாபலன்களும் காணப்பட்டது. அதைப்போலவே இப்போது, இன்னும் மகிமையான வழியில், தேவன் செய்த வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள் நிறைவேறுகின்றன.
இன்று பல கிறிஸ்தவர்களின் மனநிலை பெரும்பாலும் தனிமனித ஞானோதயம் (post-Enlightenment individualism) என்பதை இலக்காக வைத்து அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களை பிரதானப்படுத்தி, தங்கள் சொந்த வாழ்வின் கதையே முதன்மையானது என்றும் கருதுகிறார்கள். ஆனால் இவ்விதமான மனநிலை வேதாகமத்தின் போதனைக்கு முற்றிலும் முரணானது. ஆனால் வேதாகமம் நாம் தனிப்பட்ட முறையில் என்னவாக இருக்கிறோம் என்பதை மட்டும் வலியுறுத்தாமல், ஒரு புதிய சிருஷ்டியாக தேவனுடைய இரட்சிப்பில் நாம் ஒன்றாக இணைந்தும், சமூக ரீதியாகவும் என்னவாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்துகிறது. இயேசு திராட்சச்செடி மற்றும் கிளைகளின் உவமையை பயன்படுத்தி, அவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கிறார். அவருடைய சீஷர்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தனர். அதிலும் குறிப்பாக தவிர்க்க முடியாத அவருடனான ஐக்கியத்தின் மூலமாகவே ஆவிக்குரிய கனிகளை கொடுக்க முடியும் என்பதையும் அறிந்திருந்தனர்.
இந்த மெய்யான திராட்சைசெடியின் உவமை நமக்கு முதலாவது கற்றுத்தருகிற நடைமுறை சத்தியம் என்னவென்றால், அநேகர் இயேசுவை பின்பற்றுகிறவர்களைப்போல காணப்பட்டாலும், உண்மையில் அப்படி இராதவர்களை இனம் கண்டு கொள்வதைப் பற்றி எச்சரிக்கிறது. “என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் [பிதாவாகிய தேவன்] அறுத்துப்போடுகிறார்” (யோவான் 15:2). அவர் இங்கே, சபையில் காணப்படும் வெளிப்பிரகாரமான நடவடிக்கைகளின் மூலமாக கிறிஸ்தவர்களைப் போல தோற்றமளித்தாலும், தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிடுவதில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் காணப்படுவதில்லை என்கிறார். இதையே தான் அப்போஸ்தலனாகிய பவுல் “ஆவியின் கனி” (கலாத்தியர் 5:22-23) என்று அழைக்கும் காரியங்களும் அவர்களிடத்தில் காணப்படாது என்று கலாத்தியர் நிருபத்தில் கூறுகிறார்.
“நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவான் 15:3) என்று இயேசு, தொடர்ந்து மெய்யான திராட்சைசெடியாகிய அவருடன் ஜனங்கள் எப்படி இணைக்கப்பட முடியும் என்பதை பற்றியும் பேசுகிறார். சுவிசேஷத்தில் பேசப்பட்ட அவருடைய வார்த்தைகள், முதலாவதாக, ஒரு அறிவிப்பாகும் (declarative). அது நீதிமானாக்கும் அவருடைய கிருபையின் மூலமாக விசுவாசிப்பவர்களுக்கு மன்னிப்பை மட்டுமல்லாமல், பரிசுத்த சுத்திகரிப்பையும் உண்டு பண்ணுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக தேவனோடுள்ள ஒரு புதிய உடன்படிக்கையின் நிலைப்பாட்டையும் கொண்டு வருகிறது.
இருப்பினும், வேத இறையியலாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுவது போல, “விசுவாசம் மட்டுமே நீதிமானாக்குகிறது, ஆனால் நீதிமானாக்கும் விசுவாசம் தனித்திருப்பதில்லை .” விசுவாசம் பரிசுத்தமாக்கும் கிருபையுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது. அவர் நம்மை மன்னித்து ஏற்றுக் கொண்டதன் மூலமாக அவருடைய மன்னிப்பு மற்றும் அங்கீகாரம் மூலம் தேவனுக்கு முன்பாக நாம்பெறும் புதிய சட்டப்பூர்வ நிலை, நம் வாழ்வில் அவருடைய மாற்றும் கிருபையின் பரிசுத்த சான்றில் தன்னை வெளிப்படுத்த வேண்டும். அவர் நம்மைப் படிப்படியாக அவருடைய குமாரனும் நம்முடைய இரட்சகரான இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார்.
ஆனால் பெரும்பாலும், வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் எதிரொலிப்பது போல, நம்முடைய இந்த புதிய கனி கொடுக்கிற வாழ்க்கையும் அதனுடைய வளர்ச்சியும் கிரயத்தினாலே வருகிறது. பிதா கிளைகளை இன்னும் அதிக கனி கொடுக்கும்படி “சுத்தம் பண்ணுகிறார்” (John 15:2). தேவனுடைய பராமரிப்பின் சோதனைகள் மூலமாகவும், வாழ்க்கையின் போராட்டங்கள் மூலமாகவும், தேவன் நம்மை சுய-சார்பிலிருந்து விலக்கி, அவருடைய குமாரனில் இன்னும் முழுமையாக “நிலைத்திருக்கும் படியாய்” (abide) நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
இயேசு, தன்னில் “நிலைத்திருத்தல்” என்பது நடைமுறையில் என்ன அர்த்தப்படுத்துகிறார் என்பதற்கான முக்கிய திறவுகோலை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது : நாம் அவரிலும், அவருடைய வார்த்தைகள் நம்மிலும் நிலைத்திருக்க வேண்டும் (யோவான் 15:7). இதன் நடைமுறை சான்று நம் ஜெப வாழ்க்கையில் காணப்படும், நாம் நம் தேவைகளை தேவனுக்கு முன் வைத்து, நம் ஜெபங்களுக்கு அவருடைய பதிலைப் எதிர்பார்ப்போம்.
நானே திராட்சைசெடி என்பது சுருக்கமாக, நாம் கிறிஸ்துவின் சீஷர்களாக அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும் (யோவான் 15:9). இந்த சத்தியம் பவுலின் மனசாட்சியில் ஆழமாக பதிந்தது, ஆதலால் கலாத்தியர்களுக்கு அவர் அளித்த சுவிசேஷ அறிவிப்பில் இப்படியாக கூறுகிறார் : “அவர் [கிறிஸ்து] என்னை நேசித்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 2:20)என்று. கிறிஸ்துவுடைய அன்புதான் அடிப்படையாக பவுலுடைய கிறிஸ்துவுவின் மீதான அன்பாக செழித்து வளரச்செயகிறதாக இருந்தது. மெய்யான திராட்சச்செடியாகிய கிறிஸ்துவுடன் இணைந்திருக்கும் நம் அனைவருக்கும் இப்படியே ஆகும்படி தேவன் நமக்கும் கிருபை செய்வாராக.
இந்தக் கட்டுரை “இயேசுவின் ‘நானே’ கூற்றுகள்” என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
ஆசிரியரைப் பற்றி: போதகர் மார்க் ஜி. ஜான்ஸ்டன் அவர்கள் வடக்கு அயர்லாந்தில் உள்ள திரித்துவ EPC, ரிச்ஹில் (Trinity EPC, Richhill) திருச்சபையை நிறுவி, அதன் வளர்ச்சியில் பத்து ஆண்டுகள் செலவிட்டார். அவர் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளிலும் போதகராகப் பணியாற்றியுள்ளார். தற்போது வடக்கு அயர்லாந்தில் உள்ள குரூம்ஸ்போர்ட் ஈ.பி.சி. (Groomsport EPC) சபையின் போதகராகச் சேவையாற்றி வருகிறார்.
அவர் “பானர் ஆஃப் ட்ரூத் ட்ரஸ்ட்” (Banner of Truth Trust) என்ற அமைப்பின் வாரிய உறுப்பினராகவும், பல புத்தகங்களின் ஆசிரியராகவும் உள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: “இந்த உலகம் என் வீடு அல்ல: பாதையில் உள்ள யாத்திரிகர்களுக்கான சிந்தனைகள்” (This World Is Not My Home: Reflections for Pilgrims on the Way) மற்றும் Let’s Study தொடரில் யோவான், கொலோசெயர் மற்றும் பிலேமோன், 2 பேதுரு மற்றும் யூதா ஆகிய நூல்களுக்கான விளக்கவுரைகளும் அடங்கும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.