
உடன்படிக்கை இறையியல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
25-02-2025
கொலோசெயர் நிருபத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
04-03-2025நரகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும், அநேகருக்கு நரகத்தைப் பற்றி சிந்திக்க கடினமாக இருப்பதால், இந்த சத்தியத்தை நீர்த்துப்போக செய்ய பலர் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். அன்பான கடவுள் எவ்வாறு மக்களை இந்த கொடூரமான இடத்துக்கு அனுப்பமுடியும்? என அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் நரகத்தை பற்றிய சத்தியத்திலிருந்து தம்மை விடுவிக்கும்படி தேவன் யாரிடமும் கேட்கவில்லை. இது போன்ற சத்தியத்தை மென்மைபடுத்துவதையும் அவர் அனுமதிப்பதுமில்லை. அன்பான இயேசுவிடமிருந்துதான் நாம் நரகத்தை பற்றிய அதிகமான காரியங்களை அறிந்துள்ளோம், பழைய ஏற்பாட்டின் உபதேசங்களிலிருந்து நரகத்தை பற்றிய போதனைகளை கிறிஸ்து விரிவுப்படுத்துகிறார். நரகத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1.நரகம் என்பது எல்லையில்லா துயரமும், நினைவுகளும் உள்ள மெய்யான இடம்
தவறான உபதேசங்களான, நரகத்தில் மனிதன் முற்றிலும் அழிந்து இல்லாமற்போவான் (annihilationism), மற்றும் நியாயத்தீர்ப்பில் துன்மார்க்கர் யாவரும் அழிந்து போவார்கள் (Conditional immortality) போன்றவைகள் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவுகின்றன. மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் நினைவுகளை பற்றியும், நித்திய தண்டனையைப் பற்றியும் அவர்களுக்கு கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்த தவறான உபதேசங்களுக்கு முரணாக, நரகம் என்பது எல்லையில்லா வேதனையும், நினைவுகளோடு உள்ள மெய்யான இடம் என்பதை வேதம் நமக்கு போதிக்கிறது. நரகத்தின் இந்த வேதனை முடிவில்லாதது (யூதா 13, வெளி 20:10). உதாரணமாக நாம் லூக்கா 16 ம் அதிகாரத்தை வாசிக்கையில், ஐசுவரியவான் நரகத்தில் தன் நினைவுகளோடும், பரிதபமான நிலையிலும் வேதனைப்பட்டு, வேதனையில் தொடர்வதை பார்க்கிலும் தான் முற்றிலும் இல்லாமல் அழிந்து போக விரும்பும் சூழ்நிலையில் அவன் இருப்பதை பார்க்கின்றோம் (லூக்கா 16:23).
“இரண்டாவது வாய்ப்பிற்கும்” எவ்வித வேத ஆதாரமும் இல்லை. நரகத்தில் வாழும் நபர்களின் இருப்பிடம் நிலையாக அங்கேயே உறுதியாக்கப்பட்டுள்ளது. நமது நித்திய இருப்பிட விலாசத்தை ஒரு விநாடியில் மரணம் மாற்றுகிறது. எனவே நரகத்தில் மனிதன் முற்றிலும் அழிந்துபோவான் அல்லது மீண்டும் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது வேத ஆதாரமற்ற மாய நம்பிக்கையாகும்.
2. நரகம் என்பது அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமான இரண்டு இடங்களில் ஒன்றாகும்.
ஒரு மனிதன் மரிக்கையில் அவனது சரீரம் அடக்கம்பண்ணப்படும், அவனது ஆத்துமா ஒன்று பரலோகத்துக்கு செல்லும் அல்லது நரகத்துக்கு செல்லும். வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 32.1 இதை இவ்வாறு விளக்கப்படுத்துகிறது:
“மரணத்திற்கு பிறகு மனிதர்களின் சரீரங்கள் மண்ணுக்கு திரும்பி அழிவை அடைகின்றன. ஆனால் அவர்களது ஆத்துமாவோ, இறக்காமலும் தூங்காமலும், அழியாத தன்மையோடு உடனடியாக தங்களை உண்டாக்கிய தேவனிடம் செல்கிறது: நீதிமான்களின் ஆத்துமாக்கள் பரிசுத்தத்தில் பூரணமாக்கப்பட்டு பரலோகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கே வெளிச்சத்திலும் மகிமையிலும் தேவனை முகமுகமாய் தரிசித்து, தங்களின் சரீர முழு விடுதலைக்காக காத்திருக்கின்றன. துன்மார்க்கருடைய ஆத்துமாக்களோ நரகத்தில் தள்ளப்பட்டு, அங்கே வேதனையிலும், அந்தகாரத்திலும் வைக்கப்பட்டு நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு இடங்களே அல்லாமல், சரீரத்தை விட்டு ஆத்துமாக்கள் பிரிந்திருக்கும் வேறு இடங்களை வேதம் கூறவில்லை.”
கடைசி நாளிலோ, அனைத்து ஆத்துமாக்களும் தங்கள் சரீரங்களோடு இணைக்கப்படும். அந்நேரத்தில் நீதிமான்கள் தங்கள் நித்திய வாழ்க்கைக்கு திரும்புவார்கள், துன்மார்க்கரோ நித்திய வேதனைக்குள் தள்ளப்படுவார்கள். மீண்டும், இந்த இரண்டு இடங்களே அல்லாமல், உயிர்த்தெழுதலில் தங்கள் ஆத்துமாக்கள் தங்கள் சரீரங்களோடு இணைந்து வாழும் வேறொரு இடங்களை வேதம் நமக்கு கூறவில்லை.
3.நரகம் என்பது தேவகோபத்தின் இருப்பிடம்
வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 33.2 ல் நரகத்தின் நித்திய வேதனையானது, “தேவனின் பிரசன்னத்திலிருந்தும், அவரது வல்லமையின் மகிமையிலிருந்தும் விலக்கபப்ட்டு நித்திய அழிவை கொடுக்கும் தண்டனையின் இடமாக” நரகம் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. அநேக நேரங்களில், நரகமானது தேவனின் பிரசன்னதத்திலிருந்து தள்ளப்படும் நிலையை குறிக்கிறது. ஆனால் தேவனோ எங்கும் இருக்கிறார். வேதம் நரகத்தை பற்றி கூறும்பொழுது, நரகம் தேவன் இல்லாதவராத அல்ல, மாறாக தேவகோபத்தின் பிரசன்னத்தையும், அவரது முடிவில்லா வெறுப்பும் தண்டனையும் உள்ள இடமாகவே காண்பிக்கிறது. “பட்சிக்கிற அக்கினியாயிருக்கிற” (எபி 12:29) நமது தேவன் தனது “உக்கிர கோபாக்கினை” யை (ரோ 2:8) நரகத்தில் துன்மார்க்கர் மீது ஊற்றுவார்.
இது கிறிஸ்தவர்களுக்கு மோசமான ஒன்றாக தோன்றினால், தேவனுடைய பிள்ளைகளாக இவ்விதமான தேவனை நம் வாழ்வில் அனுபவித்திராததே இதற்கு காரணம். எந்த தேவ கோபத்தை துன்மார்க்கர் நரகத்தில் அனுபவிக்கிறார்களோ, அந்த தேவ கோபம் கிறிஸ்துவினால் சிலுவையிலே நிவிர்த்தியாக்கப்பட்டது. ஆனால் உண்மையென்னவென்றால், துன்மார்க்கருக்கான நரகத்தின் கொடூர தன்மை, கொடுக்கப்பட்ட உருவகங்களை காட்டிலும் மிகவும் மோசமானதாக இருக்கும். எந்த உருவகமும், அடையாளங்களும் ஓர் உண்மையை முழுமையாக காண்பிக்காது. அவ்வாறே நரகத்தின் உண்மைத்தன்மையும் பயங்கரமான ஒன்றாக இருக்கும். பரிசுத்த தேவனின் முடிவில்லா தண்டனையானது விவரிக்க முடியா துக்கமாயிருக்கிறபடியினால், நரகத்தை பற்றிய உண்மைகள் ஒருவேளை வேதத்தில் உருவகங்களாகவே உள்ளன.
4. நரகத்தின் குடிமக்கள் அங்கு இருப்பதற்கென்று அதை தெரிந்துக்கொண்டவர்கள்
ஒளியையைப் பார்க்கிலும் இருளை விரும்பினவர்களுக்கே நரகம் உள்ளது (யோவான் 3:18-19). ஒருவேளை இது ஐசுவரியவானின் வார்த்தைக்கு முரணாக தோன்றலாம், “தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் என்க்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியை தண்ணீரில் தோய்த்து, என் நாவை குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினி ஜீவாலையிலே வேதனைப்படுகிறேனே. (லூக்கா 16:24).” ஆனால் நன்றாக கவனிக்கும் போது, இந்த ஐசுவரியவான் தேவனை விரும்பவில்லை மாறாக தேவனின் தண்டனையிலிருந்து தற்காலிக விடுதலை பெறவே விரும்பினான்.
எல்லா மனிதனும் தாங்கள் தெரிந்துகொண்ட தங்கள் சுய விருப்பங்களுக்கான தீர்வை நிச்சயமாக அடைவார்கள், ஒன்று பரிசுத்த ஆவியானவர் அருளும் மறுபிறப்பினால் தேவனை ஆராதிக்க தெரிவுசெய்வது அல்லது தேவனை சபிக்க தெரிவுசெய்வது. நரகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற எவ்வித சாக்கு போக்கும் சொல்லமுடியாது, காரணம் அவர்கள் எதை தெரிவுசெய்தார்களோ, எதை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களோ அதற்கான தீர்வுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நரகத்தில் வாழும் மனிதர்கள்மீது செலுத்தப்பட்ட தேவனின் நீதியான தண்டனைக்கும், அங்கு செல்ல விரும்பின அவர்களின் சுய தெரிந்தெடுத்தலுக்கும் இடையில் எவ்வித முரண்பாட்டையும் வேதம் காண்பிக்கவில்லை. நரகம் என்பது நமது சரீர இச்சைகளின் அசுத்தங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் “மிகப்பெரிய ஒப்புக்கொடுத்தலாகும்” (ரோமர் 1:24).
5. நரகம், தேவனின் குணாதிசயத்திற்கு இசைவானது.
தேவனின் முன்குறித்தலில் நரகம் என்பது ஓர் கரும்புள்ளி அல்ல. அவரது குணாதிசயங்களுக்கு முரணானதும் அல்ல. மாறாக நரகம் என்பது குற்றங்களுக்கு சரியான விகிதத்தில் தண்டனையளிக்கும் பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனின் குணாதிசயங்களோடு ஒத்துபோகிறது. தேவனின் நீதியும் இரக்கமும் ஒன்றுக்கொன்று பரஸ்பரத்தை காட்டும் தன்மைகள் அல்ல. அவைகள் இரண்டும் ஒத்திசைவானது, பரலோகமும் நரகமும் தேவனின் பரிசுத்த நல்லிணக்கத்தின் வெளிப்பாடுகள். ஒருவேளை தேவன் நீதியுள்ளவராக இல்லையென்றால், நரகத்தைப்பற்றி மேற்சொன்ன அனைத்து தவறான கொள்கைகளும்(annihilationism, universalism) உண்மையானதாக மாறிவிடும்.
தமது குமாரனின் பணியில் தேவனின் இரக்கத்தையும் நீதியையும் பாருங்கள். நரகம் இல்லாவிட்டால் கிறிஸ்துவின் பணி வீணாகிவிடாதா? துன்மார்க்கர் நரகத்தில் அழிக்கப்பட்டோ அல்லது சிலர் பரலோகத்தில் அனுமதிக்கப்பட்டோ இருக்கையில் கிறிஸ்துவின் மரணம் தேவையற்றதாகி விடாதா? ஆம்! மெய்யாகவே, நரகத்தை நிராகரிப்பது வெறுமனே தேவனின் குணாதிசயங்களோடு முரண்படுவது மாத்திரமல்ல , தேவனின் குமாரனை காலின் கீழ் போட்டு மிதிப்பதற்கு சமமானது (எபி 10:29). தேவனின் குணாதிசயங்களான அவரது நீதியும், நன்மையும், துன்மார்க்கர் மீதான என்றென்றும் இருக்கும் முழுமையான தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்ப்பார்க்கிறது.
நரகத்தை பற்றி அநேக காரியங்கள் சொல்லப்பட்டிருக்கையில், நரகத்தை பற்றி வேதம் கூறும் அனைத்து விளக்கங்களும், நம்மை பாவத்திலிருந்து மீட்ட கிறிஸ்துவின் கிருபையை மேன்மைப்படுத்துகிறது என்பதை நினைவுகூறுவோம். மற்றும் இவ்விதமான ஆக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி மற்றவர்களையும் எச்சரித்து, விசுவாசித்து, மனந்திரும்பி கிறிஸ்துவிடம் திரும்ப அழைப்பதற்கு நமக்குள் அது வைராக்கியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.