
குடும்பத்தில் சீஷத்துவம்
14-08-2025
கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?
21-08-2025ஏன் கர்த்தருடைய பந்தி ஓர் கிருபையின் சாதனம்?

(Why is the Lord’s supper a Means of Grace?)
ஜோன்டி ரோட்ஸ்
சமீபத்திய ஆண்டுகளில், திருச்சபை “சுவிசேஷ மையமாக” இருப்பதை ஊக்குவிக்கும் அநேக புத்தகங்களும் செய்திகளும் பெருகியுள்ளது. சுவிசேஷத்தை மையப்படுத்திய பெற்றோர்களாகவும், சுவிசேஷத்தை மையப்படுத்திய பிரசங்கத்தை ஆயத்தப்படுத்தவும், மற்றும் சுவிசேஷத்தை மையப்படுத்தும் மக்களாக வாழவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இவையனைத்தும் நன்றுதான். ஆனால் திருச்சபை எவ்வாறு சிலுவையையும், கிறிஸ்துவின் பரிகார பலியையும், ஊழியத்தின் மையமாக வைத்திருக்கிறது? மகிழ்ச்சிக்குரிய காரியம் என்னவென்றால், இதற்கான பதிலை அடைவதற்கு ஊழியர்கள் தலையை சொரிந்துக்கொண்டோ அல்லது சுற்றி உட்கார்ந்துக் கொண்டு புதிய யோசனைகளை கொண்டுவர முயற்சிக்க வேண்டிய அவசியமோ இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏற்கெனவே தெளிவான ஆலோசனைகளை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.
கிறிஸ்து கைது செய்யப்பட்டு சிலுவைக்கு கொண்டு செல்லும் முன் அந்த இராத்திரியிலே தம்முடைய சீஷர்களோடு அமர்ந்து, “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது, என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.”லூக்கா 22:19.
என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். திருச்சபையில் கர்த்தருடைய பந்தி என்பது சபையின் ஆராதனைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
இதில் ஓர் எளிமையான அப்பமும் திராட்சரசமும் கொண்டு, அவள் இரட்சகரின் மரணத்தை நினைவுகூர்ந்து, அதை கொண்டாடுகிறாள்.
கர்த்தருடைய பந்தியின் ஓர் ஆசீர்வாதத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம்: இது நமது சரீரம் நொறுக்கப்படாதபடிக்கும், நமது இரத்தம் சிந்தப்படாதபடிக்கும், கிறிஸ்துவின் சரீரம் பிட்கப்பட்டு, அவரது இரத்தம் சிந்தப்பட்டதை நமக்கு நினைவுப்படுத்துகிறது. மரணத்தின் சாபம் அவர்மீது விழுந்தது, இதன்மூலம் ஜீவனின் ஆசீர்வாதம் அவரது மக்களுக்கு அருளப்பட்டது. கர்த்தருடைய பந்தியை தொடர்ந்து அனுசரிப்பதென்பது, கொல்கதாவில் ஒரேயொரு மட்டுமே செலுத்தப்பட்ட பலியுடன் எந்தவகையிலும் கூட்டவோ அல்லது அந்த பலி தொடரவோ இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. “எல்லாம் முடிந்தது” என்ற கிறிஸ்துவின் சப்தம், பல நூற்றாண்டுகளாக ஒலித்துக்கொண்டும், கர்த்தருடைய பந்தியில் அறிவிக்கப்பட்டும் உள்ளது. அவரது இரத்தம் ஏற்கனவே சிந்தப்பட்டுவிட்டது, இனிமேல் சிந்தப்படவேண்டிய அவசியமில்லை. இந்த பலி பூரணமானது.
எனவே இந்த வழிமுறையில் திருவிருந்து என்பது கண்களால் பார்க்கப்படும் தேவனின் வார்த்தையாக இருக்கிறது. இதனால் திருவிருந்து வேதத்திலிருந்து நாம் அறியாத புதிய தகவல்களை நமக்கு கொடுக்காது. மாறாக, இது நமது கண்களுக்கும், கைகளுக்கும், உதடுகளுக்கும், வாய்களுக்கும் அதே சுவிசேஷத்தை காட்சிவடிவில் நமக்கு பிரசங்கிக்கிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் எனது மகள் விளையாடிவிட்டு என்னிடம் வந்தாள். நான் அவளை நேசிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் நான் அவளை தூக்கி, அவளை அணைத்துக்கொண்டு அவளது கன்னத்தில் முத்தமிட்டேன். அரவணைப்பும் முத்தமும் என்ன சொல்கிறது? ஒருவகையில், அவைகள் எவ்வித புதிய தகவல்களையும் சேர்க்கவில்லை, ஆனால் நான் அவளிடம் பேசின வார்த்தைகளை பெலப்படுத்தி உறுதிப்படுத்துகிறது. இதேபோல தான் கர்த்தருடைய பந்தியும். ஹைடல்பெர்க் கேள்வி பதில்களில் 75 வது கூறுகிறது, “கர்த்தருடைய அப்பம் எனக்காக பிட்கப்படுவதையும், எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பாத்திரத்தையும் நான் என் கண்களால் பார்ப்பதுபோல், நிச்சயமாக கிறிஸ்துவின் சரீரம் எனக்காக பலியிடப்பட்டும் நொறுக்கப்பட்டும், அவரது இரத்தம் எனக்காக சிலுவையில் சிந்தப்பட்டது.”
கர்த்தருடைய பந்தி, நமக்கு சிலுவையின் செய்தியை உறுதிப்படுத்தும் தேவ கிருபையின் ஓர் பரிசாகும்.
ஆனால் கர்த்தருடைய பந்தி எவ்வாறு கிருபையின் ஓர் சாதனம் என்பதை நாம் ஆராயும்பொழுது இன்னும் அநேக காரியங்களை நாம் கூறமுடியும். கர்த்தருடைய பந்தி வெறுமனே ஓர் காட்சிப்படுத்தப்பட்ட முறைமை அல்ல, போதகர் எல்லாருக்கும் முன்பு நின்று பிட்கப்பட்ட அப்பத்தையும் திராட்ச ரசத்தின் பாத்திரத்தையும் வெறுமனே கை நீட்டி நம்மிடம் காண்பிப்பதில்லை. இல்லை! அவற்றை நாம் கையில் எடுத்து தொட்டு நமது சொந்த சரீரத்தில் அவற்றை உட்கொள்ளுகிறோம். அதை வெளியிலிருந்து பார்ப்பவருக்கு ஏதோ நாம் சாதாரண உணவை உட்கொள்ளுவதுபோல தோன்றும். உண்மையில், கர்த்தருடைய பந்தியை ஓர் உணவாக பார்ப்பதென்பது அது கிருபையின் ஓர் சாதனம் என்பதற்கான இரண்டாவது காரணத்துக்கு நம்மைக் கொண்டுச் செல்கிறது: கர்த்தருடைய பந்தி ஆவிக்குரிய உணவாகும், அதில் நாம் கிறிஸ்துவை பெற்றுக் கொள்கிறோம். நாம் கிறிஸ்துவோடு மட்டுமல்ல அவரையே நமது ஆத்துமாவில் உட்கொள்கிறோம்.
அனைத்து விசுவாசிகளுக்கும் இரண்டு பகுதிகளாக சரீரமும் ஆத்துமாவும் உள்ளது. நமது சரீரத்தை தேவன் தமது பராமரிப்பினால் உணவின் மூலம் பெலப்படுத்துகிறார். இன்று நீங்கள் கொஞ்சம் அப்பத்தையும், சிறிது திராட்சை ரசத்தையும் உட்கொண்டிருக்கலாம். இவைகள் உங்கள் சரீரத்தை பெலப்படுத்தியிருக்கும். அதேபோல் நமக்கு ஆத்துமா உள்ளது. விசுவாசிகளாக நாம் கர்த்தருடைய இராப்போஜனத்தை உட்கொள்கையில் ஆத்தும ரீதியில் நமக்கு உணவளிக்குப்படுகிறது. அப்பமும் திராட்ச ரசமும் மெய்யான கிறிஸ்துவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றப்படவில்லையென்றாலும், திருப்பந்தி என்பது கிறிஸ்துவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கெடுக்கும் ஓர் செயல்பாடு என்று பவுல் கூறுகிறார். பழைய ஆங்கிலத்தில் பங்கெடுத்தல் என்ற வார்த்தைக்கு பதிலாக “ஐக்கியம்” என்று நாம் படிக்கிறோம், இது கர்த்தருடைய பந்திக்கான இரண்டாவது சொல்லாகும்: பரிசுத்த ஐக்கியம். 1 கொரிந்தியர் 10:16 இதற்கான திறவுகோல் வசனமாகும். “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? “
1 கொரிந்தியர் 10:16.
நிச்சயமாக இங்கு ஓர் இரகசியம் இருக்கிறது. ஆனால் இருப்பினும் பரிசுத்த ஆவியானவரின் இரகசியத்தின் வல்லமையின்படி, நாம் பந்தியை அனுசரிக்கையில், விசுவாசத்தினால் நாம் கிறிஸ்துவைப் பெற்று அவரோடு உள்ள ஐக்கியத்தில் பெலப்படுத்தப்படுகிறோம். இது வெறுமனே கிருபையைப் பற்றிய நினைவூட்டுதல் மட்டுமல்ல; இது கிருபையின் புதிதான பரிசு. வெறுங்கையோடு நாம் பந்தியில் பங்குபெறுகிறோம், முன்பு ஆராதனையில் பிரசங்கிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை நாம் இலவசமாக கேட்பதுபோல எந்த சபையும் அப்பத்துககும், ரசத்துக்கும் கட்டணம் வாங்குவதில்லை, மீண்டும் நாம் கிறிஸ்துவை இங்கு அடைகிறோம். இந்த புரிதல் நமது கவனத்தை நுட்பமாக மாற்ற உதவுகிறது: கர்த்தருடைய பந்தி என்பது, முதலாவதாக, நாம் பயபக்தியோடு கிறிஸ்துவை நினைவுகூற முயற்சிசெய்வதற்கு முன்பே அவர் மீண்டும் கிருபையினால் நம்மிடம் வரக்கூடிய நேரமாகும். இது பிரதானமாக பரலோகத்திலிருந்து பூமிக்கு வருவதாகும், பூமியிலிருந்து பரோகத்துக்கு செல்வது அல்ல. இது மற்றுமொரு கிருபையின் செயல்பாடாகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.