
கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்
28-08-2025ஏன் பிரசங்கம் கிருபையின் சாதனம்?

(Why Is Preaching a Means of Grace?)
பால் லேவி
“நீங்கள் என்னுடைய பேச்சைக் கேட்கவில்லையென்றால், நான் யார் என்பதை எப்படி நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்?” என்று இருவர் பேசிக் கொள்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவரை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அங்கு பேசுவதும் கேட்பதும் இருக்கவேண்டும். இவ்வாறுதான் ஒருவரோடு ஒருவரின் உரையாடல் வேலை செய்கிறது.
நாம் அறிந்துக் கொள்வதற்கு தேவன் தன்னை வெளிப்படுத்தி அவர் பேசுவதுதான் வேதத்தின் மையமாகும். இது விக்கிரங்களைப் பற்றிய மிகப்பெரிய முரண்பாடாகும்: கடவுள் பேசுகிறார். பிரான்சிஸ் ஸ்காஃபர் கூறுகிறார், “கடவுள் இருக்கிறார் அவர் அமைதியாக இல்லை.” தேவன் தன்னை படைப்பில் வெளிப்படுத்துகிறார், அவரது மகிமையையும், மகத்துவத்தையும், அழகையும் அவரது படைப்பில் நாம் பார்க்கிறோம். இந்த உலகத்தில் தடுக்கமுடியாத தமது வல்லமையை தேவன் வெளிப்படுத்தினாலும், படைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது போன்று நாம் இவற்றில் காணமுடியாது. ஒருவேளை நீங்கள் வானத்தைப் பார்த்து: “நீ யார்? நீ எப்படிப்பட்டவன்” என்று கத்தலாம், ஆனால் உங்களுக்கு எந்த பதிலும் கிடைக்காது.
இருப்பினும், வேதத்துக்கு நாம் வரும்போது தேவன் தம்மை வெளிப்படுத்தி, தம்முடைய வார்த்தையில் நம்மிடம் பேசுவதை நாம் காண்கிறோம். தேவன் பிரசங்கிக்கும் தேவன். வேதத்தின் முதல் வசனங்களிலேயே இந்த சத்தியம் அடிக்கடி வருகிறது: “தேவன்…உண்டாகக்கடவது என்றார், உண்டாயிற்று.” அவரது திட்டத்தை அவரது வார்த்தை செய்துமுடிக்கிறது. ஆதிமுதற்கொண்டே தேவனுடைய வார்த்தையின் வல்லமையையும் அதிகாரத்தையும் நாம் பார்க்கிறோம். தமது வார்த்தை மற்றும் கிரியைகள் மூலமாக மற்ற அனைத்து விக்கிரகங்களிடமிருந்தும் தன்னை உயர்த்தி காண்பிக்கிறார்.
“அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
ஏசாயா 55:11
வேதத்தின் துவக்கத்திலிருந்தே தேவன் பேசுவதையும், அவர் திட்டமிட்ட காரியங்களை அவருடைய வார்த்தை செய்து முடிப்பதையும் நாம் காண்கிறோம். “வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.” அவர் தமது மக்களை தம்மிடம் அழைக்கிறார். அவர்களை மீட்கிறார். தமது வார்த்தையின் மூலம் வழிநடத்துகிறார். தமது கட்டளைகள் மூலமாகவும் தமது மக்களிடம் தம் சார்பாக பேசுவதற்கு அவர் அனுப்பின தீர்க்கதரிசிகள் மூலமாகவும் தமது வார்த்தைகளை தெரியப்படுத்தி அவர்களை ஆளுகிறார். தீர்க்கதரிசிகள் மீட்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை மக்களுக்கு கொண்டுச்செல்கிறார்கள்.
காலம் நிறைவேறினபோது, தேவன் தமது குமாரனை உலகத்துக்கு அனுப்பினார், அவரது குமாரன் தேவனது வார்த்தையாகவே இருக்கிறார். தேவனுடைய குமாரன், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்,” என்பவராகவே இருக்கிறார் (யோவான் 1:1-4,14). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாபெரும் பிரசங்கியாவார். அன்று வாழ்ந்த மத தலைவர்களைப் போல அவர் பிரசங்கியாமல், அதிகாரமுடையவராக பிரசங்கித்தார். எளிமையாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் பிரசங்கித்தார். அவர் பிரசங்கிக்கும்போது, அங்கு கூடியிருந்த கூட்டம் வாயடைத்துப்போனது. அவரது சத்தம் மரித்தோரை உயிர்ப்பித்தது, புயலை அடக்கியது, பிசாசை துரத்தியது, வியாதிஸ்தர்களை குணமாக்கியது. அவரே தேவனை நமக்கு வெளிப்படுத்துபவர். இயேசு தமது சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்கு பிரசங்கிகளை அனுப்புகிறார், அவர்கள் கிறிஸ்துவின் அதிகாரத்தோடு பிரசங்கிக்கிறார்கள். மக்கள் சுவிசேஷத்தின் நற்செய்தியை பெறுகையில் அவர்கள் இயேசுவையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் அவர்கள் மரித்ததிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு ஜீவனை பெறுகிறார்கள், அந்தாகரத்திலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறார்கள். வேத பிரசங்கத்தின் மூலமாகவே இவைகள் நடைபெற்று தெரிந்துக்கொள்ளப்பட்ட மக்கள் கூட்டப்பட்டு, கிறிஸ்துவின் சபைக் கட்டப்படுகிறது.
தேவ வார்த்தையை பிரசங்கிப்பது என்பது தேவனுடைய தகுதியற்ற கிருபையை நாம் பெறுவதற்கான ஓர் சாதனமாகும்.
அப்போஸ்தலனாகிய பவுல் தனது இறுதிக்காலம் வந்ததென்று அறிந்து, அப்போஸ்தலர்களின் நேரடி இருத்தல் இல்லாத எதிர்கால திருச்சபையை மனதில் வைத்து தீமோத்தேயுவுக்கு ஓர் மிக முக்கியமான கட்டளையை கொடுக்கிறார்: “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.” 2 தீமோத்தேயு 4:2.
பிரசங்கிக்கப்படவேண்டிய இந்த தேவனுடைய வார்த்தையானது ஜீவனுள்ளதும், இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகவும் உள்ளது. தேவன் அமைதியாக இல்லை. அவர் பேசுகிற கடவுள், மற்றும் வேத்தின் பிரசங்கத்தின் மூலமாக இன்று பேசுகிறார். நமது பிரசங்கத்தின் இறையியல் திரியேக தேவன் எப்படிப்பட்டவர் என்பதில் மிக ஆழமாக வேரூன்றப்பட்டும் ஸ்தாபிக்கப்பட்டும் இருக்க வேண்டும்.
அநேக நேரங்களில் பிரசங்கம் என்றால் என்ன என்று நம்மை நாமே கேட்டுப்பார்க்க நாம் மறந்துவிடுகிறோம். பிரசங்கம் என்பது தேவனுடைய மனிதன் தேவனுடைய வார்த்தையை தேவனுடைய ஆவியானவரின் வல்லமையில் அறிவிப்பதே. தேவன் தமது மக்களை ஆசீர்வதிக்க பிரசங்கத்தைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை அறிவிப்பதற்கு, அவர் சில ஆண்களுக்கு பிரசங்கிக்கும் வரத்தைக் கொடுத்து அவர்களை அழைத்து பிரித்தெடுத்து பிரசங்கிகளாக மாற்றுகிறார். தேவனால் மக்களிடம் நேரடியாக பேச முடியும், ஆனால் மிகவும் பெலவீனமான ஆண்களை தேவனுடைய வார்த்தையை பேசுவதற்கு தெரிந்துக்கொள்கிறார். இவர்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே அறிவிப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள், அவர்களின் சொந்த வார்த்தையை அல்ல அல்லது மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அல்ல. அவர்கள் தேவன் சார்பாக பேசும் பேச்சாளர்கள். தேவனுடைய வெளிப்பாட்டைப் புரிந்துக்கொள்வதற்கும், ஆயத்தப்படுத்துவதற்கும் மிக கடினமாக படித்து உழைக்க வேண்டும். தேவன் தமது வார்த்தையின் மூலமாக மக்களிடம் பேசுகிறார் மற்றும் அவர் தமது மக்களிடம் பேசும்போது அவர்கள் மூலமாகவும் பேசுகிறார்.
கடவுளுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுவதை நாம் கேட்கையில், அது ஓர் கிருபையின் சாதனமாகும். வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ இறையாண்மையுள்ள தேவனுடைய வார்த்தையை கேட்பது என்பது மாபெரும் ஆசீர்வாதமும் பாக்கியமுமாகும். ரோமர் 10 ல் பிரசங்கிகளின் அவசியத்தைப் பற்றி பவுல் எழுதுகிறார்:
“அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.”
ரோமர் 10: 14-15.
தேவனுடைய வார்த்தை தேவனுடைய மனிதனால் தேவனுடைய ஆவியின் வல்லமையால் பிரசங்கிக்கப்பட்டு, அது விசுவாசத்தினால் பெறப்படுமபொழுது அங்கு ஜீவன் உண்டாகிறது. வேதத்தின் தேவன் என்பவர் பேசுகிற தேவனாக இருக்கிறார், மற்றும் பிரசங்கிகள் அவரது பேச்சாளாராக இருக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையின் பிரசங்கம் என்பது தகுதியற்ற நமக்கு தேவனால் அளிக்கப்படுகின்ற கிருபையை பெற்றுக்கொள்ளும் ஓர் சாதனமாகும். அவரது வார்த்தையை ஆச்ரீவதிப்பேன் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். கேள்வி பதில் 89 ல் வெஸ்ட்மின்ஸ்டரின் இறையியலாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: “தேவனுடைய ஆவியானவர் நாம் வாசிப்பதையும் குறிப்பாக வார்த்தையை பிரசங்கிப்பதையும், பாவிகளை விசுவாசிக்கச் செய்து மனந்திரும்பச் செய்யவும் விசுவாசத்தின் மூலம் அவர்களைப் பரிசுத்தத்திலும் ஆறுதலிலும் கட்டவும், இரட்சிப்புக்குக்காக ஓர் பயனுள்ள சாதனமாக பிரசங்கத்தை பயன்படுத்துகிறார். “
எனவே, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்க வரும்போது, மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பெற்றுக்கொள்ளவும் அதை கேட்கவும் வருகிறோம். ஆனால் சங்கீதம் 95 இன் வார்த்தைகள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்: “இன்று, அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதீர்கள்” ( சங். 95:7–8 ). என்பதே.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.