
கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?
21-08-2025
கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்
28-08-2025ஞானஸ்நானம் ஏன் அவசியம்?

(Why Does Baptism Matter?)
டெரிக் பிரைட்
கிறிஸ்த சமயத்தின் ஆரம்பித்திலிருந்தே ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் மையமாக இருந்துவருகிறது. இருப்பினும் ஞானஸ்நானத்தின் வேர் புதிய ஏற்பாட்டின் திருச்சபையில் இருப்பதை காட்டிலும் மிக ஆழமாக வேரூன்றி செல்கிறது. அவைகள் பழைய ஏற்பாட்டிலும் தேவன் தம்முடைய பிள்ளைகளோடு செய்த உடன்படிக்கையின் உறவிலும் மிக ஆழமாக செல்கிறது. உண்மையில், பழைய ஏற்பாட்டில் கூறப்படுள்ள அடையாளங்கள் மற்றும் உருவகங்களை பற்றிய சரியான பார்வை நம்மிடம் இல்லாமல், புதிய உடன்படிக்கையின் ஞானஸ்நானத்தை நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால், உடன்படிக்கையை காக்கும் தேவன் துவக்கத்திலிருந்தே அதாவது ஏதேனில் உள்ள இரண்டு மரங்களிலிருந்தே தம்முடைய மக்களுக்கு காணக்கூடிய அடையாளங்களையும், முத்திரைகளையும் கொடுத்துள்ளார். வருந்தக்கூடிய காரியம் என்னவென்றால் வேத அறிவின்மை பெருகிய காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். தேவனைப் பற்றியும, மனிதனைப் பற்றியும், இன்னும் ஞானஸ்நானத்தைப்பற்றியும் வேதம் என்ன சொல்கிறது என்பதில் அநேக குழப்பங்கள் நிலவிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு குழப்பங்கள் நிலவுவதால், திருமுழுக்கு ஏன் அவசியம், ஒரு கிறிஸ்தவனுக்கு அது எவ்வாறு இன்றியமையாதது என்பதை பற்றியும் அறிவதற்கு முதலில் திருமுழுக்கு என்றால் என்ன என்பதை அறிவது முக்கியமான காரியமாகும்.
ஓர் அடையாளம் மற்றும் ஓர் முத்திரை
முதலாவது, திருமுழுக்கு என்பது தேவன் தமது மக்களோடு செய்த உடன்படிக்கையின் அடையாளம் மற்றும் முத்திரையாகும். இது ஒரு பெரிய உண்மைக்கான காணக்கூடிய அடையாளமாகும். ஆதியாகமம் 17 ல் ஆபிரகாமுக்கு விருத்தசேதனம் என்கிற உடன்படிக்கையின் அடையாளத்தை வழங்கினார். மாம்சத்தின் நுனித்தோலை அகற்றிய இந்த செயலானது, தேவனுடைய மக்களையும் அவர்களுக்களிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் அவர்களுக்கு நினைப்பூட்டியது. இருப்பினும், ஆதி 17:10 ல் கர்த்தர் விருத்தசேதனத்தை என் உடன்படிக்கை என்று அழைத்தார். கர்த்தராகிய இயேசு, கர்த்தரின் இராப்போஜனத்தை நிறுவிய போது, ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி, “என் உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” (மத் 26:28) என்றாரே என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். ஆனால் விருத்தசேதனமோ திராட்சரசமோ உடன்படிக்கையின் உண்மையான சாராம்சமாக இருக்கவில்லை, மாறாக அவைகள் உடன்படிக்கையின் யதார்த்தத்தையே சுட்டிக்காட்டின. அடையாளத்திற்கும் மெய்யான யதார்த்தத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை உள்ளது, நாம் ஒன்றைக் குறிப்பதற்கு மற்றொன்றை சுட்டிக்காட்ட முடியும். (இதை வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 27.2 “சாக்கிரமந்து ஐக்கியம்” என்றழைக்கிறது).
திருமண மோதிரத்தின் ஒப்புமையை கவனியுங்கள். அவைகள் திருமண மோதிரங்கள் அல்ல மாறாக அவற்றை அணிந்திருப்பவர்கள் திருமண உறவில் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியே. திருமணமான ஒருவர் தன்னுடையவர் அல்ல மாறாக இன்னொருவருக்குச் சொந்தமானவர் என்பதையே அந்த மோதிரங்கள் நினைவூட்டுகிறது. திருமுழுக்கும் அப்படித்தான். திருமுழுக்கில் புதிய உடன்படிக்கையின் மக்கள் என்கிற அடையாளம் நமக்கு கொடுக்கப்படுகிறது. இது திரியேக தேவனோடு உள்ள உறவின் ஓர் அடையாளமாக உள்ளது. எனவே அவருக்குச் சொந்தமானவர்கள் இந்த அடையாளத்தைக் கொண்டிருக்கவேண்டும்.
ஓர் புதிய பெயர்
திருமுழுக்கில், உடன்படிக்கையின் அடையாளத்தைப் பெற்றவர்கள் ஓர் புதிய அடையாளத்தோடு தொடர்புடைய ஓர் புதிய பெயரை பெறுகிறோம். எந்த நாமத்தில் நமக்கு திருமுழுக்கு கொடுக்கப்படுகிறதோ அது நாம் யாருக்குள் ஞானஸ்நானம் பெறுகிறோமோ அவரைப் பற்றியது. (மத்தேயு 28:19) ல் இயேசு, “நீங்கள் போய் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கட்டளையிடடதைக் கவனியுங்கள். அப்போஸ்தலனாகிய பவுலும், (ரோமர் 6:3) ல் “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” என்கிறார். இதே மொழிநடையை கலாத்தியர் 3:27 லும் பயன்படுத்துகிறார். பழைய உடன்படிக்கையில் இருப்பதுபோல், இஸ்ரவேல் மக்கள் வனாந்திர பிரயாணத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டதைப்போல (1 கொரி 10:2) நாமும் புதிய பிரயாணத்தில் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம்.
உடன்படிக்கையை காக்கும் தேவன் துவக்கத்திலிருந்தே அதாவது ஏதேனில் உள்ள இரண்டு மரங்களிலிருந்தே தம்முடைய மக்களுக்கு காணக்கூடிய அடையாளங்களையும், முத்திரைகளையும் கொடுத்துள்ளார்.
விசுவாசியை பொறுத்தவரை, நம்மைப் பற்றிய மிக முக்கிய உண்மை என்னவென்றால் கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதே. நாம் கிறிஸ்துவில் மிக நெருக்கமாக ஐக்கியப்பட்டுள்ளோம், அவர் மரித்தப்போது நாமும் பாவத்துக்கு மரித்தோம் (கலா 2:20), அவர் உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்தபோது நாமும் அமர்ந்தோம் (எபே 2:6). இன்று, அநேகர் தாங்கள் யார் என்ற அடையாளத்தைப் பற்றி குழப்பமடைந்து உள்ளனர். இது பலரை குழப்பம், மனச்சோர்வு மற்றும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், அன்பான விசுவாசியே உங்களிடம் திரியேக தேவனுடைய நாமம் உள்ளது. உங்களது அடையாளம் என்னவென்றால், நீங்கள் ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவோடு அடக்கம்பண்ணப்பட்டு, வாழ்க்கையின் புதிய நிலையில் வாழ்வதற்கு அவரோடு எழுப்பப்பட்ட புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள் (ரோமர் 6:4-5). உலகமோ அல்லது நமது சுய மாம்சமோ என்ன சொல்கிறது என்பதை நாம் கேட்கக்கூடாது, மாறாக, நமது திருமுழுக்கின் மூலமாக திரியேக தேவன் நம்மைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதையே கவனிக்க வேண்டும்.
ஓர் கிருபையின் சாதனம்
கடைசியாக, திருமுழுக்கு ஏன் அவசியம் என்றால் இது கிருபையின் ஓர் சாதனமாகும். நாம் மிகவும் பெலவீனர்களும், பரலோக சீயோனை நோக்கி பிரயாணம் செல்லும் சோர்வுற்ற பிரயாணிகளாகவும் உள்ளோம், இந்த பிரயாணத்தில் நமக்கு பலத்தின் ஆதாரங்கள் தேவை. இவற்றின் ஓர் சாதனமாகவே திருமுழுக்கு உள்ளது. எனவே தேவன் தனது மக்களை பலப்படுத்தவும் போஷிக்கவும் இந்த நியமனத்தை திருச்சபைக்கு ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஞானஸ்நானம் தன்னில் தானே ஏதோ வல்லமையைக் கொண்டுள்ளது என்பது அர்த்தமல்ல, மாறாக எப்பொழுது அடையாளம் விசுவாசத்தால் சந்திக்கப்படுகிறதோ அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த திருமுழுக்கின் மூலமாக தேவனுடைய மக்களுக்கு கிருபையை வெளிப்படுத்துகிறார். தண்ணீர் சுத்திகரிப்பதுபோல கிறிஸ்துவும் தமது இரத்தத்தினாலே நம்மை கழுவி சுத்திகரித்திருக்கிறார் என்று நினைவுகூறும்பொழுது திருமுழுக்கு கிறிஸ்துவின் மீதான அன்பில் நம்மை பெலப்படுத்துகிறது. தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசமாகயிருக்கிறார் என்று நினைவுகூறும்போழுது நமது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது. நமது உபத்திரவங்கள் மற்றும் சோதனை நேரங்களில் எப்பொழுது பிசாசு நமது பெவீனத்தை காரணம் காட்டி, நாம் ஒருபோதும் இரட்சிக்கப்படமுடியாது என்றோ தேவன் நம்மை நேசிக்கவில்லை என்றோ சொல்வானாகில், நாம் மார்ட்டின் லூத்தரைப் போல உறுதியாக சொல்லமுடியும்: “நான் ஞானஸ்நானம் பெற்றுள்ளேன்! நான் ஞானஸ்நானம் பெற்றுள்ளேன்!”.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.