
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது
16-12-2025ஆவிக்குரிய யுத்தம் என்றால் என்ன?
பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காக தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (கலா. 1:3–5, NKJV)
அப்போஸ்தலனாகிய பவுல், நமக்காகத் தேவகுமாரனாகிய கிறிஸ்து செய்த செயலின் மூலமாக, தேவன் தம்முடைய மக்களை எவ்விதமாக விடுதலையாக்கினார் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்துகிறார் (கொலோ. 1:13–14). வீழ்ச்சியடைந்த இந்த உலகத்தில், நாம் கிறிஸ்துவுடன் நடக்கும்போதும் அவருக்காக ஊழியம் செய்யும்போதும், ஏற்படக்கூடிய ஆவிக்குரிய எதிர்ப்புகள் மத்தியில் நம்முடைய வாழ்வில் போராட்டங்கள் காணப்படும் என்று பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார் (எபே. 2:1–10).
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய பிரதான ஆசாரியத்துவ ஜெபத்தில், நாம் உலகத்தில் இருக்கிறோம் (யோவான் 17:11) ஆனால் உலகத்திற்குரியவர்களாக அல்ல (யோவான் 17:14) என்ற நமது ஆவிக்குரிய யுத்தத்தின் பின்னணியில் நமக்காக ஜெபிக்கிறார். அதனால்தான், பிதாவானவர் நம்மை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி அல்ல, ஆனால் தீமையினின்று நம்மை விலக்கிக் காக்கும்படி மன்றாடுகிறார் (யோவான் 17:15). அவருடைய சீஷர்களாகிய நாம் ஜெபிக்கும்படி அவர் நமக்கு கற்றுக்கொடுத்த ஜெபமானது, கிறிஸ்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை நாம் தேடவும், ஆவிக்குரிய சத்துருவின் (பிசாசின்) எதிர்ப்பையும் கருத்திற்கொண்டு அவருடைய சித்தத்தைச் செய்யவும் நம்மை அழைக்கிறது (மத். 6:10, 13).
ஏதேன் தோட்டத்தில் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின மீட்பின் செயலானது ஆவிக்குரிய போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது (ஆதி. 3:15). காலம் நிறைவேறும் போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் “இந்த உலகத்தின் அதிபதி” (யோவான் 12:31) மற்றும் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” (2 கொரி. 4:4) என்று சொல்லப்படுபவனுடன் போரிடுவதற்காக வருவார் (கலா. 4:4–5). தேவனுடைய நித்திய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, நமக்காக யுத்தம்பண்ணி நம்முடைய விடுதலைக்காகவும், பிசாசின் கிரியைகளை அழிக்கவும், உண்மையான மற்றும் முழுமையான மனித சுபாவத்தை எடுத்துக்கொண்டார் (எபி. 2:14–18; 1 யோவான் 3:8).
ஆவிக்குரிய யுத்தத்தில் நாம் ஈடுபடுவதற்கான திறவுகோல் என்னவெனில், வெற்றி கிறிஸ்துவுக்கு உரியது, மற்றும் கிறிஸ்துவுக்குள் அது நமக்கும் உரியது என்பதை அங்கீகரிப்பதேயாகும். நாம் வெற்றிக்காகப் போராடுவதில்லை, ஆனால் கிறிஸ்துவின் வெற்றிக்குள் இருந்து போராடுகிறோம். சீஷர்களை உருவாக்குவதற்காக இயேசு நம்மை அனுப்புவதற்கு முன், அவர் நிறைவேற்றிய ஊழியத்தின் அறிவிப்பே அந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத். 28:18; எபே. 1:20–23 ஐப் பார்க்கவும்) என்று நமக்கு உரைத்திருக்கிறார்.
உலகத்தின் முடிவுபரியந்தமும் நான் எப்பொழுதும் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று இயேசு சொல்லும்போது, நாம் அவருக்கு ஊழியம் செய்து, அவருடைய இராஜ்யத்தைத் தேடும்போது அவருடைய பிரசன்னத்தையும், வல்லமையையும், வாக்குத்தத்தத்தையும் கொடுப்பேன் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் (மத். 28:20; எபே. 5:1–14) மற்றும் தம்முடைய இராஜ்யத்தின் ஊழியத்திற்காகவும் (1 தெச. 2:18; 2 தெச. 3:1–3) , முக்கியமாக ஆவிக்குரிய யுத்தத்தை செய்யும்படியாகவும் அவர் நமக்கு இவ்விதமாக உறுதியளிக்கிறார்.
நாம் வெற்றிக்காகப் போராடுவதில்லை, ஆனால் வெற்றிக்குள் இருந்து போராடுகிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் காணப்படும் இந்த ஆவிக்குரிய யுத்தத்தை அசாதாரணமான ஒன்றாக நாம் நினைக்கிறோம். ஆனால் கிறிஸ்துவினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு சிறு அங்கமாக ஒரு பகுதியாக இருந்து அவருடைய ராஜ்ஜியத்தையும் மற்றும் அவருடைய நீதியையும் தேடுகிறோம் என்பதற்கு இதுவே அத்தாட்சியாக இருக்கிறது. நம்முடைய அனுதின வாழ்க்கையில் நமக்கு எதிர்ப்படும் வீழ்ச்சியடைந்த இந்த உலகத்தின் தத்துவங்கள் மற்றும் மேன்மைகள் மூலமாக நம்மை வழிவிலகச் செய்யும் சுயஇச்சை போன்ற ஆவிக்குரிய எதிரியுடன் தினந்தோறும் நாம் போராடுகிறோம் (யாக். 1:14).
ஆவிக்குரிய போரில் ஈடுபடும்போது நமக்கு வழிகாட்டும்படியாய் என்னென்ன காரியங்கள் அதோடு சம்பந்தப்பட்டுள்ளன? நம்முடைய கண்ணுக்குப் புலப்படாத இந்த சத்துருவை நாம் எங்கே எதிர்கொள்கிறோம்? பேதுரு இதற்கான வழிநடத்துதலை நமக்கு கொடுக்கிறார் : “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோவென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (1 பேதுரு 5:8–9). நம்முடைய எதிரி எங்கும் இருக்கிறான், ஆனால் அவன் தேவனைப் போல சர்வவியாபியாக எங்கும் இருப்பவன் அல்ல, ஆனால் பிசாசு என்று அழைக்கப்படும் விழுந்துபோன தூதர்களின் கூட்டத்தின் மூலம் அவன் செயல்படுகிறான் என்ற உண்மை நிலையை எடுத்துரைத்து பேதுரு நம்மை எச்சரிக்கிறார்.
பேதுரு ஆவிக்குரிய எதிர்ப்பைப் பற்றி எடுத்துரைப்பது போலவே, ஒவ்வொரு புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்களும் எடுத்துரைக்கிறார்கள். நாம் இந்த போருக்குத் தயாராகும்படி, நம்முடைய எதிரியின் குணாதிசயம், அவனுடைய நோக்கங்கள், தந்திரங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய நுண்ணறிவும் நமக்கு தேவனால் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இராஜ்யத்தின் சுவிசேஷத்தின் மீதான உறுதியான விசுவாசத்தின் மூலமாக நம்முடைய மனது பலமடையும்படியான உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொள்ளுகிறோம்.
ஆவிக்குரிய யுத்தத்தில் காணப்படும் நம்முடைய நடத்தைக்கான அடிப்படை என்னவெனில், பிசாசின் தந்திரங்களுக்கு எதிராகக் கிறிஸ்துவில் உறுதியாய் நிற்பதேயாகும் (எபே. 6:10–16). சாத்தானுடைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, சிலுவையில் நம்முடைய பாவத்தின் கடனுக்காகக் கிறிஸ்து செலுத்திய கிரயத்திலும், நமக்கு வரவேண்டிய தேவனுடைய கோபத்தைத் அவர் திருப்திப்படுத்தியதிலும் நாம் விசுவாச உறுதியாய் நிற்க வேண்டும் (கொலோ. 2:13–15). சாத்தானுடைய வஞ்சகங்களுக்கு எதிராக, தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தில் நாம் உறுதியாய் நிற்க வேண்டும் (2 கொரி. 10:1–5; எபே. 6:17; கொலோ. 2:6–8). சாத்தானுடைய சோதனைகளுக்கு எதிராக, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையில் நாம் உறுதியாய் நிற்க வேண்டும். அவர் மூலமாக நாம் பிசாசை எதிர்த்து, கர்த்தருக்குப் பாத்திரராய் நடக்க முடியும் (எபே. 6:10; கொலோ. 1:9–12). தேவனுடைய வார்த்தையில் சொல்லப்படும் நம்முடைய எதிரியின் முயற்சிகளைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டாலும், அந்த தடைகளைத் தகர்க்க நாம் கிறிஸ்துவையே நோக்கிப் பார்க்க வேண்டும்.
நம்மை எதிர்க்கும் ஒரு ஆவிக்குரிய எதிரி நமக்கு உண்டு என்பதை அறியும்போது நம்முடைய ஜெப வாழ்க்கையில் நாம் அதிகமாக வளர வேண்டும். இவ்விதமான போராட்டத்தில் தேவன் நமக்கு போதுமானவராக இருப்பதால், நம்முடைய கர்த்தருடைய போதுமான தன்மையை உணர்ந்து நாம் அவரைத் தேடும்படி துரிதமாக செயல்பட வேண்டும். ஆவிக்குரிய யுத்தத்தின் ஒரு அடிப்படைத் தத்துவம் என்னவெனில், அது ஞானத்தோடும் (யாக். 3:15) மற்றும் பலவீனத்தோடும் (2 கொரி. 12:9–10) செயல்படுகிறது ஏனெனில் அவை எல்லா விஷயங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா வழிகளிலும் (எபே. 6:18–20) நம்மை கிறிஸ்துவை சார்ந்து கொள்ளும்படி செய்கிறது.
இறுதியாக, நாம் இந்த ஆவிக்குரிய போரில் தனிமைப்படுத்தப்படவில்லை, நம்முடைய பாதுகாப்பு, வழிகாட்டல் மற்றும் தேவைகளுக்காகக் கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்குள் தேவனுடைய ஆவியினால் அணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அவயவங்களாக ஒருவருக்கொருவர் நாம் ஜெபிக்கவும் (கொலோ. 4:3), ஒருவருக்கொருவர் நாம் எழுப்பவும் (எபி. 10:23–25), ஒருவருக்கொருவர் நாம் புத்திசொல்லவும் (எபி. 3:12–14), ஒருவருக்கொருவர் நாம் கவனித்துக்கொள்ளவும் (யாக். 5:16, 19–20) கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் நாம் அவருடைய திருச்சபையைக் கட்டுகிற நம்முடைய கர்த்தருக்குள் சேர்ந்து ஊழியம் செய்கிறோம், அதற்கு எதிராகப் பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் நம்மை மேற்கொள்ள மாட்டாது: “சமாதானத்தின் தேவனோ சீக்கிரத்தில் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்” (ரோமர் 16:20).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


