
சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது?
03-07-2025
வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?
10-07-2025வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?

ஜாரெட் ஜெட்டர்
What is Hermeneutics? – Jared Jeter
“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய வார்த்தையைச் சரியாக விளக்குவதற்கு, நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பை, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் ஊழியனாகிய தீமோத்தேவுக்கு சொன்ன இந்த வார்த்தைகள் நமக்கும் நினைப்பூட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாகவே நம்மிடத்தில் பேசுகிறவராய் இருக்கிறபடியினால், அவர் என்ன பேசுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வது மிக அவசியமாகும். இதனால்தான் நமக்குச் சரியான வேதாகம பொருள் விளக்க படிப்பு (hermeneutics) தேவைப்படுகிறது.
வேதாகம பொருள் விளக்க படிப்பு (Hermeneutics) என்பது வேதாகம விளக்கத்தின் ஆராய்ச்சியும் கலையுமாகும். இது ஒரு ஆராய்ச்சி. ஏனெனில் ஒரு காரை ஓட்டுவதற்கு ஒழுங்கு விதிமுறைகள் இருப்பதைப் போல வேதாகமத்தை விளக்குவதற்கும் ஒழுங்கு விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள் உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் சரியான விதத்தில் காரை ஓட்ட முடியாது. இருந்த போதிலும், சட்ட விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதையும் தாண்டி, அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் . இதனால் தான் வேதாகம பொருள் விளக்க படிப்பு (hermeneutics) ஒரு கலை என்றழைக்கப்படுகிறது. வேதாகமம் பல வகையான (genres) பிரிவுகளில் காணப்படுவதாலும், ஒரே மாதிரியைக் கொண்டிருக்காததாலும் மட்டுமல்ல பல எழுத்தாளர்களால், வெவ்வேறு மொழிகளில், ஒரு பரந்து விரிந்த காலப்பகுதியில் எழுதப்பட்டதாலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகிற சத்தியத்தின் நோக்கத்தையும் அதன் அர்த்தத்தையும் கண்டறிய எந்த விளக்க விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஒரு பரந்த வேத ஞானமும், விவேகமும் நமக்கு வேண்டும். அதாவது ஒரு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சத்தியத்தை அறிந்து, அது கொடுக்கப்பட்ட அர்த்தத்தின் நோக்கத்தை விளக்கப்படுத்துவதே வேதாகம பொருள் விளக்க படிப்பின் (hermeneutics) இறுதியான குறிக்கோளாகும்.
வேதாகமத்தை நாம் விளக்கபடுத்தும்போது அதனுடைய பிரதானமான நோக்கம் என்னவென்றால் அதனுடைய ஆக்கியோன் எவ்விதமான அர்த்தத்தை உறுதி செய்யும்படியாய் அதை எழுதினார் என்பதை கண்டறிவதாகும். வேதாகமத்தில் உள்ள ஒரு பகுதியை படித்துவிட்டு, “இந்தப் பகுதியை என்னோடு எப்படி தொடர்பு படுத்த முடியும்” என்ற கேள்வியை எழுப்புவதே அதை படிப்பதற்கான ஒரு பொதுவான அணுகுமுறையாக அநேக கிறிஸ்தவ மக்களிடத்தில் காணப்படுகிறது. ஒரு பகுதியில் உள்ள சத்தியத்தை நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புபடுத்துவது முக்கியம் என்றாலும், அது வேதாகமத்திலிருந்து நாம் கேட்க வேண்டிய பிரதானமான கேள்வி அல்ல. அதற்குப் பதிலாக, “அதனுடைய ஆக்கியோன் என்ன நோக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்” என்ற கேள்வியையே முதலாவது எழுப்ப வேண்டும். இந்தக் கேள்வியைத் எழுப்ப தவறுவோமானால், அந்தப் பகுதியை பற்றிய தவறான புரிதல்களுக்கும் தவறான பயன்பாடுகளுக்குமே அது நம்மை இட்டுச்செல்லும். இவ்விதமாக வேதத்தினுடைய ஒரு பகுதியில் இருந்து அதனுடைய ஆக்கியோன் வெளிப்படுத்த விரும்பும் சத்தியத்தை அறிந்து கொள்ள உதவும் வகையில் வேதாகம பொருள் விளக்க படிப்பின் சில அடிப்படை அம்சங்களை கீழே சிந்திக்கலாம்.
- வரலாற்று-இலக்கண முறை (The Historical-Grammatical Method)
வேதாகமத்தில் காணப்படும் ஆசிரியர்களின் எழுதும் நோக்கத்தை அறிந்து கொள்ள, வரலாற்று ரீதியாக பார்த்தால், சீர்திருத்த இயக்கத்தை சேர்ந்தவர்களும், தேவபக்தியுள்ள பாரம்பரிய கிறிஸ்தவர்களும் உட்பட பலர் இந்த வரலாற்று-இலக்கண முறையையே பயன்படுத்தியுள்ளனர். இந்த முறை பண்டைய அந்தியோகியா (Antiochene) வேதாகம விளக்க பள்ளியிலும் வேரூன்றியிருந்தது. சீர்திருத்தத்தின் போதும் (Reformation) இந்த வழிமுறை பெரிதளவில் பயன்படுத்தப்பட்டது. இன்றும் சபைகளில் பரவலாக இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. இது வேதாகமத்தில் உள்ள புத்தகங்களின் வரலாற்று பின்னணி மற்றும் இலக்கண நடை ஆகியவற்றின் மீது அதிகமான கவனம் செலுத்துகிறது.
வரலாற்று பின்னணியைக் குறித்து, நாம் பின்வரும் கேள்விகளை எழுப்ப வேண்டும்: அதை எழுதியவர் யார்? யாருக்கு அதை எழுதினார்? அந்தப் பகுதியில் உள்ள ஏதேனும் கலாச்சார பின்னணிக்கு மேலும் குறிப்புகள் தேவைப்படுகிறதா? இலக்கண நடையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் போது, சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தைப் படிப்பது, ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளன மற்றும் அந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள இலக்கிய நடைகளை ஏற்றுக் கொள்வது போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த விஷயங்களைப் படிப்பது, ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், அந்த வசனம் அதற்கு முந்தைய அல்லது பிந்தைய சூழ்நிலைகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை
அறிந்து கொள்ளவும் உதவி செய்கிறது . ஒரு குறிப்பிட்ட பகுதியினுடைய சரியான வரலாற்று மற்றும் இலக்கண நடையை பார்ப்பதற்கான முக்கியத்துவத்தை சுருக்கமாகக் கூற, வேதாகமத்தை விளக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய மூன்று மிக முக்கியமான காரியங்கள் இவை என்று கூட ஒருவேளை சொல்லலாம். அது அந்தப் பகுதியினுடைய பின்னணி, பின்னணி, பின்னணியே.
வரலாற்று-இலக்கண முறை, வேதாகமத்தை அதன் அசல் அர்த்தத்தின்படி (literal sense) விளக்குவதையே முக்கியமாக வலியுறுத்துகிறது. “அசல்” என்பது அந்தப் பகுதியில் காணப்படும் இலக்கண நடையை மட்டுப்படுத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொண்டால் இந்த விளக்கமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேதாகமமும் ஒரு இலக்கியப்புத்தகம் என்பதால், அதில் பெரும்பாலும் சொல்லணிகள், குறியீடுகள், உருவகங்கள் மற்றும் பிற இலக்கியக் உத்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேதாகமத்தை அதன் அசல் அர்த்தத்தின்படி விளக்குவது என்பது இந்த வழிமுறைகளை சரியாக அடையாளம் கண்டு, குறிப்பிட்ட பகுதியினுடைய இலக்கிய நடையின் சாதாரண விதிகளை பயன்படுத்தி அவற்றைப் புரிந்துகொள்வதாகும். எனவே, வேதாகமம் பாடல்கள் அல்லது தீர்க்கதரிசன புத்தகங்களில் அடையாள
குறியீடுகளைப் பயன்படுத்தும்போது, நாம் அதை அடையாளகுறியீடாகவே விளக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஆசிரியர் எழுதிய நோக்கத்தின் அர்த்தத்திற்கு தீங்கிழைக்க நேரிடும் என்பதை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- விசுவாசத்தின் ஒத்த தன்மை (The Analogy of Faith)
வேதாகமத்தில் தெய்வீக ஆசிரியர் மற்றும் மனித ஆசிரியர்கள் ஆகிய இருவரும் இருப்பதால், தெய்வீக ஆசிரியரின் நோக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் வெளிச்சத்தில், ஒரு அடிப்படையான வேதாகம பொருள் விளக்கபடிப்பின் கொள்கையே, விசுவாசத்தின் ஒத்த தன்மை (analogy of faith) ஆகும். அல்லது விசுவாசத்திற்கான விதிமுறை என்னவென்றால், அதற்கு பதில் வேதாகமமே வேதாகமத்தை விளக்குகிறது என்பதேயாகும். வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கையின் (Westminster Confession of Faith) 1 ஆம் அத்தியாயம் இவ்விதமாக விளக்குகிறது: “வேதாகமத்தை தவறிழைக்காமல் விளக்குவதற்கான விதிமுறை, வேதாகமமே ஆகும்: ஆகையால், வேதாகமத்தில் உள்ள ஒரு பகுதியின் உண்மையான மற்றும் முழுமையான அர்த்தத்தைப் பற்றி ஒரு கேள்வி எழும்போது (அது பல மடங்கு அல்ல, ஆனால் ஒன்று), அதை மிகவும் தெளிவாகப் பேசும் மற்ற வேதபகுதிகளிலிருந்து விடை காண வேண்டும் ?” (1.9).
வேதாகமம் ஒரே ஒரு நோக்கத்தையும் அர்த்தத்தையும் மட்டுமே கொண்டிருக்கிறது என்பதை (மேலே வரையறுக்கப்பட்டபடி, சரியான அர்த்தம்) உறுதிப்படுத்துவதைத் தாண்டி, 2 பேதுரு 3:16 இல் வேதாகமமே குறிப்பிடுவது போல, வேதாகமத்தில் சில இடங்கள் மற்றவற்றை விடப் புரிந்துகொள்வதற்கு சற்று கடினமாக இருக்கிறது என்பதையும் விசுவாச அறிக்கை அங்கீகரிக்கிறது. தேவன் தனக்குத்தானே முரண்படுபவரல்ல ஆகையால், அவருடைய வார்த்தையும் முரண்பாடுகளைக் கொண்டிருக்காது. எனவே, வேதாகமத்தில் புரிந்து கொள்வதற்கு கடினமான பகுதிகள் இருக்கும்போது, அவற்றை விளக்கப்படுத்த வேதாகமத்தின் மற்ற தெளிவான பகுதிகளைப் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.
- இயேசுகிறிஸ்துவே முழு வேதாகமத்திலும் இருக்கிறார் (Christ in All the Scriptures)
வேதாகமத்தின் தெய்வீக ஆசிரியரோடு சம்பந்தப்பட்ட இரண்டாவது வேதாகம பொருள் விளக்க படிப்பு (hermeneutics) என்னவென்றால், தெய்வீக எழுத்தாளரின் நோக்கம் மனித எழுத்தாளரின் நோக்கத்துடன் ஒருபோதும் முரண்படவில்லை என்றாலும், அது மனித எழுத்தாளரின் முழுப்புரிதலையும் தாண்டி பரந்து விரிந்ததாய் இருக்கிறது. இதனால், வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கை “வேதாகமத்தின் உண்மையான மற்றும் முழுமையான அர்த்தத்தைப்” பற்றிப் பேசும்போது, தேவனுடைய பிந்தைய வெளிப்பாடு அவருடைய முந்தைய வெளிப்பாட்டிற்கு வெளிச்சத்தை கொடுக்கிறது என்றுரைக்கிறது.
லூக்காவின் சுவிசேஷம் இந்த யதார்த்தத்தை உறுதிப்படுத்துகிறது. எப்படியெனில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, எம்மாவுக்குச் சென்ற இரண்டு சீஷர்களை சந்தித்தபோது பேசினதை லூக்கா இவ்விதமாக எழுதுகிறார்: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேத வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மை குறித்து சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்து காண்பித்தார்” (லூக்கா 24:27). சில வசனங்களுக்குப் பிறகு, அவர் மற்ற பதினொரு அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமானபோது , “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டும்” என்று இயேசு சொல்லி, வேதவாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி அவர்களுடைய மனதைத் திறந்தார் (லூக்கா 24:44) என்று மேற்கோள் காட்டுகிறார். எபிரேய வேதாகமத்தின் இந்த மூன்று பிரிவுகளும் (நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசனங்கள், சங்கீதங்கள்) , இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களின் ஒவ்வொரு பகுதியும் தன்னை குறித்து சாட்சியளிக்கிறது என்றுரைத்ததை வெளிப்படையாக எடுத்துரைக்கிறது. முழு வேதாகமத்தையும் ஜாக்கிரதையான ஆராய்ச்சியின் (typology) மூலம், குறிப்பாக தெய்வீக ஆக்கியோன் தம்முடைய வார்த்தைகள் முழுவதும் எழுதி பின்னிபிணைந்துள்ள கருப்பொருள்கள் மற்றும் மாதிரியை கண்டறிவதன் மூலம், வேதாகமத்தில் உள்ள எல்லா வழித்தடங்களும் இயேசுவிடம் எவ்வாறு வழிநடத்தி செல்கின்றன என்பதை கண்டு கொள்ள முடியும்.
இந்த கட்டுரை ஒரு ஹெர்மெனியூட்டிக்ஸ் தொகுப்பின் ஒரு பகுதி
- இந்த மற்றும் பிற வேதாகம விளக்கக் கொள்கைகள் (hermeneutical principles) பற்றிய விரிவான விளக்கங்களுக்கு, ஆர்.சி. ஸ்ப்ரௌலின் (R.C. Sproul) வேதத்தை அறிதல் (Knowing Scripture) ( Downers Grove, IL: InterVarsity Press, 2016) என்ற நூலைப் பார்க்கவும்.
2. பல இலக்கண மற்றும் வரலாற்று கேள்விகளுக்கு, ஒரு நல்ல ஆய்வு வேதாகமம் (study Bible) அல்லது விளக்கவுரை (commentary) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, வசனத்தின் நுணுக்கங்களை உற்றுநோக்கி, சரியான கேள்விகளைக் கேட்பதன் மூலம் பதிலளிக்கலாம். இது வசனத்தின் முக்கியமான விவரங்களை எடுத்துக்காட்ட உதவும்.
3. பொறுப்புள்ள உருவக விளக்கத்தை (responsible typology) எவ்வாறு பயிற்சி செய்வது மற்றும் வேதவசனங்கள் முழுவதும் பின்னப்பட்டிருக்கும் கருப்பொருள்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைப் புரிந்துகொள்வதற்கு டென்னிஸ் ஜான்சனின் (Dennis Johnson) அவரது வார்த்தையின் மூலம் இயேசுவுடன் நடத்தல்: அனைத்து வேதங்களிலும் கிறிஸ்துவைக் கண்டறிதல் (Walking with Jesus through His Word: Discovering Christ in All the Scriptures) (Phillipsburg, NJ: P&R Publishing, 2015) ஒரு சிறந்த ஆதாரமாகும்.
ஆசிரியரைப் பற்றி:
ஜாரெட் ஜெட்டர் (Jared Jeter) லிகோனியர் மினிஸ்ட்ரீஸில் (Ligonier Ministries) உள்ளடக்கப் பொறுப்பாளராகவும் (content curator), புளோரிடாவின் சான்ஃபோர்டில் உள்ள சீர்திருத்த இறையியல் கல்லூரியில் (Reformation Bible College) வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.