Why-Is-the-Lords-Supper-a-Means-of-Grace
ஏன் கர்த்தருடைய பந்தி ஓர் கிருபையின் சாதனம்?
19-08-2025
Why-Does-Baptism-Matter
ஞானஸ்நானம் ஏன் அவசியம்?
26-08-2025
Why-Is-the-Lords-Supper-a-Means-of-Grace
ஏன் கர்த்தருடைய பந்தி ஓர் கிருபையின் சாதனம்?
19-08-2025
Why-Does-Baptism-Matter
ஞானஸ்நானம் ஏன் அவசியம்?
26-08-2025

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?

What-Is-Christian-Discipleship

டாக்டர். காபிரியேல் N.E. ப்ளுரெர்

What Is Christian Discipleship?

Dr.Gabriel N.E. Fluhrer

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன? நம்முடைய புதிய  ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சீசத்துவம்(disciple) என்ற வார்த்தையானது  “கற்றுக்கொள்பவர்” அல்லது “பின்பற்றுபவர்” என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து இது பெறப்பட்டது. ஆகவே, கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் கேட்கும்போது, இயேசுவை பின்பற்றுவதும் அவரிடத்தில் இருந்து கற்றுக் கொள்வதும் எப்படிப்பட்டது என்றே நாம் கேள்வி எழுப்புகிறோம். அதற்கேற்ப, கிறிஸ்தவ சீஷத்துவத்தின் சில முக்கிய அம்சங்களை நான் சுருக்கமாக கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஆரம்பத்திலேயே, சுவிசேஷத்திற்கும் சீஷத்துவத்திற்கும் இடையேயான பொதுவான மற்றும் வலுவான வேறுபாடு வேதாகம ஆய்வுக்கு முன்பாக  நிற்காது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் மற்றும் வேதாகமத்திலும், சுவிசேஷத்தை தொடர்ந்து சீஷத்துவம் என்ற ஒரு ஒழுங்கு வரிசையை பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. பெரும்பாலும், இந்த இரண்டிற்கும் இடையிலான கோடுகள் சற்று மங்கலாகவே காணப்படுகிறது.

உதாரணமாக, மத்தேயு 28:18-20-ல் இயேசுவின் பிரதான கட்டளையை நாம் வெறுமனே சுவிசேஷம் சொல்வதற்கான அழைப்பாக (தவறாக) வாசிக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு  “ஆகையால் நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்று சொல்லுகிறதை கவனிக்க வேண்டும். கர்த்தர் நம்மை வெறுமனே விசுவாசிப்பதற்கான ஒரு அழைப்பை மட்டும் விடுத்து அதை அப்படியே விட்டுவிடும்படியாய் அனுப்பவில்லை. நிச்சயமாக, நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். ஆனால் பிரதான கட்டளையானது , நம்மை மனந்திரும்பியவர்களை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, சீஷர்களை உருவாக்கவுமே அழைக்கிறது.

ஆகவே இப்படிப்பட்ட  தவறான புரிதலை ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் கிறிஸ்தவ சீஷத்துவத்தைப் புரிந்துகொள்ள முற்படுவோம். கிறிஸ்தவ சீஷத்துவம் என்பது, ஜீவனாயிருக்கும்  இயேசுவுடன் நிலைத்திருந்து ஐக்கியத்தில் வாழ்வது (யோவான் 14:6) என்று எளிய சொற்களில் வரையறுக்கலாம். இந்த வரையறையிலிருந்து மூன்று அத்தியாவசிய பண்புகள் தனித்து நிற்கின்றன. அவைகளை குறித்து நாம் கீழே சிந்திக்கலாம்.

1.கிறிஸ்தவ சீஷத்துவம் என்பது நம்முடைய முழு வாழ்க்கையிலும் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு வாழ்வு முறையாகும், ஒரு முறை மட்டும் எடுக்கும் முடிவோ அல்லது அரை மனதுடன் கூடிய அர்ப்பணிப்போ அல்ல. 

 “தரமாக நிலைத்திருக்கிற குறியீடுகளை கொண்ட பொருள்கள்” நமது சந்தைகளை ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், கிறிஸ்தவ சீசத்துவத்திற்கான குறியீட்டை  இயேசு நமக்கு உணர்த்தியிருக்கிறார். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அது சிலுவையைச் சுமப்பதாகும். எனவே, சீஷத்துவம் எளிதான ஒன்று அல்ல. இயேசு  தம்மை பின்பற்றுமாறு நம்மை அழைக்கும்போது, நம்முடைய பழைய சிந்தனை, வாழ்க்கை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை விட்டுவிடுமாறு அவர் நம்மை அழைக்கிறார். தேவனுடைய கிருபையினால் மட்டுமே, நம்முடைய முந்தின வாழ்க்கையை சிலுவையில் அறைந்து, சிலுவையைச் சுமப்பதற்கான தெய்வீக அழைப்பிற்கு நம்மால் கீழ்ப்படிய முடியும்: “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்கா 9:23) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.

இயேசுவின் வார்த்தைகளில் உள்ள “வாழ்க்கை முறைக்கான” மூலக்கூறுகள் தெளிவாக உள்ளன. நம்முடைய பழைய வழிகளுக்கு மரிப்பதும், இயேசுவைப் பின்பற்றுவதும் ஒரு தினசரி அர்ப்பணிப்பாகும். மற்றும் அது ஒரு வாழ்க்கை முறையாகும். கிறிஸ்தவ சீஷத்துவமானது, இயேசு தம்மைப் பின்பற்றுமாறு நம்மை அழைப்பதிலிருந்து தொடங்குகிறது. அதோடு, புதிய ஜீவனுள்ளவர்களாய் முன்பு வாழ்ந்த எல்லாவற்றிற்கும் தினசரி மரிப்பதும் சேர்ந்தே நம்மிடம் நடைபெறுகிறது.

2. கிறிஸ்தவ சீஷத்துவம்  என்பது விசுவாசத்தில் நடப்பதாகும்.

 உயிர்த்தெழுந்த தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் வாழுவதே இயேசுவுடனான ஐக்கியத்தில் வாழும் ஒரு வாழ்க்கையாகும். சிலுவையைச் சுமக்கவேண்டுமென்ற இயேசுவின் அழைப்பை எதிரொலிக்கும்படியாய் அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவுடனான  நம்முடைய ஐக்கியத்தை இவ்வாறு விவரிக்கிறார்:  “ஏனென்றால் நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோசெயர் 3:3).

விசுவாசம் ஒரு தெய்வீக பரிசு (எபேசியர் 2:8-10), எனவே இயேசுவின் சீஷத்துவமானது, தேவனுடைய கிருபையினால் மட்டுமே, விசுவாசத்தின் மூலமாக தொடங்குகிறது மற்றும் தொடர்கிறது. ஒரு மெய்யான சீஷனின்  ஜீவ ஊற்று விசுவாசமே: “விசுவாசம் இல்லாமல் அவரைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம்” (எபிரேயர் 11:6).

3. கிறிஸ்தவ சீஷத்துவமானது  இப்போதும், வரவிருக்கும் வாழ்க்கையிலும் நித்திய ஜீவனுக்குள் முடிகிறது. 

 இயேசுவின் சுவிசேஷ அழைப்பானது நமக்கு, பரிபூரணமான நித்திய ஜீவனாகும் (யோவான் 10:10). உண்மையான சீஷனானவன் எதிர்காலத்தில் நித்திய ஜீவனுக்காகக் காத்திருக்கும்போதே, இந்த உலகத்திலேயும் நித்திய ஜீவனை அனுபவிக்கிறவனாயிருக்கிறான் (யோவான் 5:24) (மத்தேயு 19:29). நித்திய ஜீவனுக்கேதுவான நிகழ்கால அனுபவமும் எதிர்கால நம்பிக்கையும், “வழியும், சத்தியமும், ஜீவனுமாகிய” கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால், அவருடன் ஐக்கியப்படுவதினால் நமக்கு கிடைக்கின்றது (யோவான் 14:6, அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது).

நமது சீஷத்துவத்தில் தேவன் நமக்கு எப்படி உதவுகிறார்? 

வெஸ்ட்மினிஸ்டர் விசுவாசா அறிக்கையின் சுருக்கமான கேள்வி பதில் புத்தகத்தில் , 88 வது கேள்விக்கான பதிலில்  நமக்கு சீஷத்துவத்தை பற்றிய தெளிவு கிடைக்கும். அது நமக்கு “கிருபையின் சாதனங்களான : தேவனுடைய வார்த்தை, திருநியமங்கள் மற்றும் ஜெபம் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது. இவை கிருபையின் சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இயேசுவைப் பின்பற்றும்போது நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றும்படி  தேவன் பயன்படுத்தும் கருவிகள் இவைகளே (ரோமர் 8:29).

நடைமுறையில், இந்த கிருபையின் சாதனங்களாகிய இவை ஒவ்வொன்றும் கிறிஸ்தவ சீஷத்துவத்திற்கு இன்றியமையாததாகும். முதலாவதாக, உண்மையான கிறிஸ்துவின் சீஷனானவன்  தேவனுடைய வார்த்தையை நேசிப்பான். அதை வாசிக்கவும், அதை ஆராயவும், அது பிரசங்கிக்கப்படுவதைக் கேட்கவும் அவன் விரும்புவான். வேதாகமம் அவனது மிக உயர்ந்த அதிகாரமாக இருக்கும். மேலும் அவனது முழு வாழ்க்கையும் அதில் அடங்கியுள்ள சத்தியங்களுக்கு உட்பட்டிருக்கும்.

இரண்டாவதாக, இயேசுவின் உண்மையான சீஷனானவன் ஞானஸ்நானம் மற்றும் கர்த்தரின் இராப்போஜனம் ஆகிய திரு நியமங்களில் பங்கு பெறுகிறவனாயிருப்பான். கிறிஸ்து, தன்னுடைய சபை ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்படும்படியாய் இவைகளை நியமித்திருக்கிறார். ஞானஸ்நானம் நம்முடைய சீஷத்துவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கர்த்தரின் இராப்போஜனம் நம்முடைய ஆவிக்குரிய பாதையில் நமக்கு வேண்டிய  பரலோக போஷாக்கை  அளிக்கிறது. சீஷனானவன் திருநியமங்கள் மீது மட்டும் வெறுமனே நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் விசுவாசத்தினால், மற்ற கிறிஸ்தவர்களுடனான ஐக்கியத்தில் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தும்போது, ஆவியானவர் மூலமாக கிறிஸ்துவுக்குள்ளாக தேவனுடைய  கிருபையைப் பெறுகிறான்.

மூன்றாவதாக, உண்மையான இயேசுவின் சீஷன் ஜெபிக்கிறவனாய் காணப்படுவான். புதிதாக மனமாற்றம் அடைந்த அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிச் சொல்லப்பட்டதுபோல, எல்லா உண்மையான சீஷர்களைப் பற்றியும் சொல்லப்படும், “இதோ, அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” (அப்போஸ்தலர் 9:11). ஜெபத்தில், ஒரு உண்மையான சீஷன், குமாரனின் மத்தியஸ்த பணியின் மூலம், பரிசுத்த ஆவியின் வல்லமையுடன், தனது பரலோக பிதாவுடன் நெருக்கமான ஐக்கியத்தை அனுபவிக்கிறான்.

தேவனுடைய கிருபையான தெரிந்தெடுத்தலின் மூலமாகவே உண்மையான கிறிஸ்தவ சீஷத்துவம்  தொடங்குகிறது மட்டுமல்ல ஆரம்பம் முதல் இறுதி வரை திரித்துவ தேவனால் நிலைநிறுத்தப்படுகிறது. எனவே, ஒரு சீஷனின் வாழ்க்கை சுவாரஷ்யமானதாக  இருக்கும். இயேசுவை விட சிறந்த எஜமானன் இருக்க முடியுமா? நித்திய ஜீவனை விட சிறந்த பரிசு இருக்க முடியுமா? தேவன் நமக்கு அளிக்கும் கிருபையின் சாதனங்களை

விட சிறப்பான வழிமுறைகளை நாம் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்தவ சீஷத்துவம் என்பது பாவத்தால் கறைபடிந்த உலகில் பரிசுத்தமாக வாழ வேண்டிய ஒரு வாழ்க்கையாகும். ஆகவே, நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, “அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருக்க கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராய் இருக்கிறாரே” (எபிரேயர் 10:23) என்பதை நினைவு கூறுவோமாக. ஆமென்!.

இந்தக் கட்டுரை கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள் என்ற தொகுப்பின் ஒரு பகுதி.

டாக்டர். காபிரியேல் N.E. ப்ளுரெர், டென்னசி மாகாணத்தின் சட்டனூகாவில் உள்ள முதல் பிரஸ்பிடேரியன் திருச்சபையின் மூத்த போதகர். இவர் பாவநிவாரணம் மற்றும் உறுதியான தளம் (Atonement and Solid Ground) என்ற நூலின் ஆசிரியர். அத்துடன், தெய்வீக கிருபையின் அழகு (The Beauty of Divine Grace) மற்றும் உயிர்த்தெழுதல் எல்லாவற்றையும் எவ்வாறு மாற்றுகிறது (Alive: How the Resurrection Changes Everything) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.