
இயேசுவைப் போல் சிந்தித்தல்
30-12-2025நித்திய ஜீவனுக்கு ஏதுவான மெய்யான மனந்திரும்புதல்
மனந்திரும்புதல் என்ற சத்தியம் வேதம் முழுவதும் பரவியிருந்தாலும், அதை வரையறுப்பது சற்று கடினமானதாக நமக்கு காணப்படலாம். ஒருபுறம், மனந்திரும்புதல் என்பது பாவிகள் செய்யக்கூடிய மிகவும் இயல்பான விஷயம்; மறுபுறம், மனந்திரும்புதல் என்பது ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய செயலாகும். ஒருபுறம், மனந்திரும்புதல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படுவதுதான், மறுபுறம், மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்கத்திற்கு எதிராக அவருடைய தொண்ணூற்று ஐந்து குற்ற அறிக்கையில் முதலாவதாக எழுதியது போல, இது ஒரு வாழ்நாள் முழுவதுமாக நடைபெறும் ஒரு செயலாகும். ஒருபுறம், மனந்திரும்புதல் நமக்கு எவ்விதமான புகழையும் தரப்போவதில்லை ; மறுபுறம், தேவனுடைய ராஜ்யமும் அதனுடைய நன்மைகளும் நமக்குத் திறக்கப்படும் ஒரு தனித்துவமான வாசலாக இது இருக்கிறது. எனவே “மனந்திரும்புதல் இல்லாமல் யாரும் தேவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்க முடியாது” (வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 15.3). ஒருபுறம், இது ஒரு எளிய அழைப்பு; மறுபுறம், இது ஒரு மனிதனின் புத்தி, இருதயம், சித்தம், ஆத்துமா மற்றும் சரீரம் ஆகிய முழு ஆள்தன்மையையும் உள்ளடக்கிய அழைப்பாகவும் இருக்கிறது.
இவ்விதமான முரண்பாடுகள், வேதாகமத்தில் காணப்படும் சத்தியத்தின் முழுமையை அழகாக எடுத்துரைக்கும் முறைப்படுத்தப்பட்ட இறையியலின் விளக்கத்தின் உதவியை நாடும்படி நம்மை அழைக்கின்றன. வெஸ்ட்மின்ஸ்டர் சிறு வினாவிடைப் புத்தகம், மெய்யான மனமாற்றத்தை உருவாக்கும், பிரிக்க முடியாத இரண்டு கிருபைகளில் ஒன்றாக மனந்திரும்புதலை தெளிவான விதத்தில் வரையறுக்கிறது:
“நித்திய ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல் என்பது ஒரு இரட்சிக்கும் கிருபையாகும், இதன் மூலம் ஒரு பாவி, தன்னுடைய பாவத்தை உண்மையாகவே உணர்ந்து, கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய இரக்கத்தைப் பற்றிய புரிதலுடன், தன்னுடைய பாவத்தின் மீது துக்கத்தையும் வெறுப்பையும் காண்பித்து, அதிலிருந்து திரும்பி தேவனிடத்தில் தஞ்சம் புகுந்து, முழு மூச்சோடு புதிய கீழ்ப்படிதலுக்குரிய முழுமையான நோக்கத்தையும் செயல்படுத்துகிறான். ” (கேள்வி மற்றும் பதில் 87)
அதேபோல் எது மெய்யான மனந்திரும்புதல் மற்றும் எது மெய்யான ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதல் அல்ல என்பதைக் குறித்து வினாவிடைப் புத்தகத்திலிருந்து சில விஷயங்களை நாம் சிந்திக்கலாம்.
எது நித்தியஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல் அல்ல
வெஸ்ட்மின்ஸ்டர் படிநிலையை எழுதியவர்கள் மனந்திரும்புதலை “நித்திய ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல்” என்று பேசுகிறார்கள். இந்த பதம் வேதாகமத்திலிருந்து பெறப்பட்டது. உதாரணமாக, அப்போஸ்தலர் 11:18-ல் “புறஜாதிகளுக்கும் தேவன் ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதலை அருளினார்” என்று நாம் வாசிக்கிறோம். இது ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல் அல்லாத ஒரு மனந்திரும்புதல் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இதைப் பற்றிப் பவுல், “தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகீகத் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” என்று பேசுகிறார் (2 கொரி. 7:10).
காயீன் (ஆதி. 4:12), ஏசா (எபி. 12:17), மற்றும் யூதாஸ் (மத். 27:3) ஆகியோர் அத்தகைய மாம்சத்துக்குரிய துக்கத்திற்கு உதாரணங்களாகும்; அவர்களுடைய துக்கமான வரலாற்று நிகழ்வுகள், மெய்யான மனந்திரும்புதல் பாவக்குற்ற உணர்ச்சியை விட மேலானது என்பதை வெளிப்படுத்துகின்றன. இது சன்மார்க்க மறுமலர்ச்சியில் உள்ளது போலவே, வெறுமனே குற்றம் செய்வதினால் வரும் ஒரு வலுவான துக்க உணர்ச்சி அல்ல. நம்முடைய பாவங்களுக்காக வருத்தப்படாமல், அதன் விளைவுகளுக்காக நாம் துக்கப்படலாம். ஆனால் உண்மையாகவே அதிலிருந்து வெளிவராமலும் தேவனிடத்தில் நாம் திரும்பாமலும் இருக்கலாம்.
மேலும், மெய்யான மனந்திரும்புதல் என்பது சுய தவக்கோலம் புரிவது அல்ல. சுய தவக்கோலம் என்று சொல்லும் போது, நம்முடைய மனவருத்தத்தின் அளவு மற்றும் அதை சார்ந்த கடமைகளை செய்வதால் நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வதாகும். தவக்கோலம் புரிவது என்பது ஒரு ரோமன் கத்தோலிக்க நிகழ்வு என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. சுவிசேஷத்தை நம்புபவராக, நம்முடைய துக்கத்தின் தீவிரம் அல்லது நம்முடைய ஆவிக்குரிய குறைபாடுகளுக்கு ஈடுகொடுப்பதற்காக நம்முடைய தீர்மானத்தை நம்பக்கூடிய சோதனையில் விழுவதற்கு நாமும் கூட விதிவிலக்கு அல்ல. மனந்திரும்புதல் என்பது மெய்யான கீழ்ப்படிதலுக்காக வாஞ்சிக்காமல் வெறுமனே அறிவுப்பூர்வமாக நம்முடைய குறைவுகளை ஒப்புக் கொள்வது அல்ல. இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் , மெய்யான மனந்திரும்புதல் என்றால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம், குறைந்தபட்சம் நம்முடைய அதே வழியில் இனிமேல் செல்ல முடியாது என்று நினைக்கும் பூரணமுள்ளவர்களை போல (இரட்சிக்கப்பட்ட பின் பாவம் செய்யமால் வாழ முடியும் என்று நம்புபவர்கள்) நாம் வாதிடலாம். ஆனால் கடினமான பாவங்களுக்கு மரிப்பதென்பது ஒரு நீண்டநாள் நடைபெறும் தொடர்போராட்ட நிகழ்வாகும்.
நித்திய ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல் என்றால் என்ன?
வினாவிடைப் புத்தகம் நித்திய ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதலை ஒரு இரட்சிக்கும் கிருபை என்று சொல்லுகிறது. அது இரட்சிக்கும் கிருபை, ஏனென்றால் அது இரட்சிப்பிற்கு ஏதுவாக நம்மை வழி நடத்துவதால் (புதிய வாழ்வு)அப்படி அழைக்கபடுகிறது. அது ஒரு கிருபை, ஏனென்றால் அது தேவனால் மட்டுமே அருளப்படுகிறது (2 தீமோத்தேயு 2:25-ஐப் பார்க்கவும்). மறுபிறப்பில், தேவன் புதிய மனிதனுக்கு விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் அருளுகிறார். இந்த மனம் திரும்புதலை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், பாவத்தை விட்டு விலகி, விசுவாசத்தோடு தேவனிடத்தில் திரும்புவதாகும். இந்த விசுவாசம், சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட தேவனுடைய கிருபையைப் பற்றிய ஒரு விசுவாச புரிதலாகும், அதாவது நாம் விலகிச் செல்லும் பாவத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் மனந்திரும்புதலுடன் விசுவாசமும் சேர்ந்தே வருகிறது. இரட்சிக்கும் விசுவாசம் என்பது மனந்திரும்பும் விசுவாசம். மேலும் ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல் என்பது கிறிஸ்துவை விசுவாசிக்கும் மனந்திரும்புதல். தர்க்கரீதியாக பார்த்தால் விசுவாசம் மனந்திரும்புதலுக்கு முந்தினாலும், அவை பிரிக்க முடியாதவையே. ஹெர்மன் பாவிங்க் (Herman Bavinck) இவ்விதமாக கூறுகிறார்:
நம்முடைய பாவங்களை நாம் தேவனிடம் அறிக்கை செய்யும்போது ஒரு தகப்பனைப்போல அவர் அதை அங்கீகரித்து நம்மை மன்னிக்கிறார் என்பதை பரிசுத்த ஆவியின் மூலம் நம்முடைய ஆத்துமாவில் நாம் விசுவாசிக்காவிட்டால், நாம் தைரியமாகத் தேவனிடத்தில் சேர முடியாது. மெய்யான மனந்திரும்புதல் உண்மையான, இரட்சிக்கும் விசுவாசத்துடன் பிரிக்க முடியாத ஒரு தொடர்பில் உள்ளது.
அவர் நம்மை மன்னிப்பார் என்று நாம் முதலில் நம்பினால் மட்டுமே, நாம் பாவத்தை விட்டு விலகி நாம் துக்கப்படுத்திய தேவனிடம் தைரியமாக திரும்ப முடியும். தேவன் மறுபிறப்படைந்த ஆத்துமாவில் விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் ஒன்றாக அருளினாலும், ஜீரார்டஸ் வோஸ் (Geerhardus Vos) குறிப்பிடுவது போல, “விசுவாசம் ஏற்கனவே மனந்திரும்புதலில் நிலைத்திருக்கிறது மற்றும் கிரியை செய்கிறது.”
அப்படியானால், மெய்யான மனந்திரும்புதல் இருதயத்தில் தொடங்குகிறது, ஆனால் அது ஒருபோதும் இருதயத்தில் அடைபட்டுக் கிடப்பதில்லை. அது தகுந்த நேரத்தில், மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனி கொடுக்கும் விதத்தில் ஒருவரின் நடத்தையில் வெளிப்படும் (மத். 3:8). ஆவியினால் அருளப்பட்ட விசுவாசம் மற்றும் மனந்திரும்புதல் என்பது, மறுபிறப்படைந்த மனிதனில் பாவத்திற்கு மரிப்பதிலும், நீதிக்கு உயிர்ப்பிக்கப்படுவதிலும் நடக்கும் புதிய சுபாவத்தின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகும். இதனால், உண்மையான கிறிஸ்தவனால் தினந்தோறும் மனந்திரும்பாமல் இருக்க முடியாது. பாவத்துடனான நம்முடைய உறவு மாறிவிட்டது. ஒரு கிறிஸ்தவன் தன் பாவத்தைப் பற்றி மிகவும் அறிந்திருக்கிறான் மற்றும் கிறிஸ்துவுக்குள்ளாக காணப்படும் தேவனுடைய கிருபையின் மீது முழுமையாக சார்ந்திருப்பான். கிறிஸ்தவர்கள் தங்கள் உள்ளே குடிகொண்டிருக்கும் பாவத்துடன் போராடுகிறார்கள். அந்தப் பாவத்திற்காகத் தொடர்ந்து துக்கப்படுகிறவர்களாயும் இருக்கிறார்கள். மேலும் கெட்ட குமாரன் தன் தந்தையை நோக்கி ஓடிவருவது போல, நாம் தொடர்ந்து பாவத்தை விட்டு விலகி தேவனிடத்தில் ஓடிவரவேண்டும். லூத்தர் சொன்னது போல மனந்திரும்புதல் கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடங்குகிறது (இதை நாம் பாவத்திலிருந்து மனமாற்றமடையும் மனந்திரும்புதல் என்று அழைக்கிறோம்) மற்றும் அது முழு கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் தொடர்ச்சியான அடிப்படையாக இருக்கிறது (இதை நாம் பரிசுத்தமாக்குதலில் நடைபெறும் மனந்திரும்புதல் என்று அழைக்கலாம்).
மனந்திரும்புதலின் அடிப்படையான சாரம் ஒவ்வொரு நபருக்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், மனந்திரும்புதல் பற்றிய நம்முடைய அனுபவம் வேறுபடலாம். எனவே, நம்முடைய மனந்திரும்புதல் உண்மையானதா என்று எனக்கு எப்படித் தெரியும்? என்று நாம் கேட்கலாம். வினாவிடைப் புத்தகத்தின் விளக்கங்கள் நம்முடைய கேள்விக்கான பதிலை தருகிறது. என்னுடைய உள்ளான பாவத்தைப் பற்றிய உணர்வும், அதன்பேரில் வெறுப்பும் எனக்கு இருக்கிறதா? கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய கிருபையை நான் நாடுகிறேனா? மேலும், நான் எவ்வளவு குறைபாடுள்ளவனாக இருந்தாலும், புதிய மனிதனாக கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து நடக்க முயற்சி செய்கிறேனா? அப்படியானால் பிரியமான கிறிஸ்தவர்களே, நீங்கள் மகிழ்ச்சியாயிருங்கள். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மற்றும் நித்திய ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதல் ஆகிய இரட்சிக்கும் கிருபைகள் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நம்பலாம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


