
வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?
26-06-2025சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது?

(How to Read the Gospels)
பெஞ்சமின் கிளாடு
சுவிசேஷங்கள், கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய “நற்செய்தியை” விவரிக்கும் நான்கு கதைநடை புத்தகங்களாகும். இருப்பினும் அவைகள் பெரும்பாலும் தவறாக வாசிக்கப்பட்டு, குறைவாக மதிப்பிடப்படுகின்றன. சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது என்பதற்கான பொதுவான மற்றும் உறுதியான நான்கு காரியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1.அனைத்து வசனங்கள் மற்றும் அனைத்து பகுதிகளையும் இயேசுவின் தன்மை மற்றும் அவரது செய்தியின் வெளிச்சத்தில் வைத்து வாசியுங்கள்.
அநேக நேரங்களில் நாம் செய்யக்கூடிய தவறுகள் என்னவென்றால், முதன்மையாக நமது கவனத்தை இயேசுவின் மீது செலுத்தாமல், இரண்டாம் நிலை கதாபாத்திரங்கள் மீது (எ.கா சீஷர்கள், பர்திமேயு, மகதலேனா மரியாள்) கவனத்தைச் செலுத்துகிறோம். ஏறக்குறைய கிறிஸ்துவின் மூன்று ஆண்டுகள் ஊழியத்தில், அவர் பிரசங்கித்தார், குணமாக்கினார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தனி நபர்களோடு உரையாடிருக்கலாம். யோவான் 21:25 கூறுகிறது, “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு, அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்”. எனவே ஒவ்வொரு சுவிசேஷமும் கிறிஸ்துவின் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நமக்கு தருகிறது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும். இந்த சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையின் ஓர் பிரதிநிதித்துவ பகுதிதான், மெய்யாகவே நாம் கிறிஸ்து செய்த காரியங்களின் ஓர் சிறிய பகுதியைத்தான் பெற்றுள்ளோம். உதாரணமாக, லூக்கா கிறிஸ்துவின் 21 அற்புதங்களை பதிவுச் செய்திருக்கிறார், யோவான் எட்டு அற்புதங்களை பதிவு செய்துள்ளார். நான்கு சுவிசேஷங்களும் கிறிஸ்துவின் வாழ்க்கையை நேர்த்தியாக விவரித்து மிக முக்கியமான நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இயேசுவின் வாழ்க்கையை நான்கு சுவிசேஷகர்களும் எவ்வாறு கதைநடை, அவற்றின் தன்மைகள், நோக்கம், இட சூழ்நிலை மற்றும் பழைய ஏற்பாட்டின் தொடர்பின் வழியாக கூறுகிறார்கள் என்பதை மனதில் வைத்து வாசிக்கவேண்டும்.
2. கிறிஸ்துவை மையப்படுத்தி மட்டுமல்லாது, நான்கு சுவிசேஷங்களும் பழைய ஏற்பாட்டோடு தொடர்பில் உள்ளவைகளாக எண்ணி வாசிக்கவேண்டும்.
மீட்பின் வரலாற்றுக்கு வெளியில் வாசிக்கக்கூடிய ஒரு வசனம் கூட இல்லை. மத்தேயு, 1:1 ம் வசனத்தில் வம்ச வரலாறுகளை காண்பிப்பதின் மூலம் ஆதியாகமம் 2:4 ஐ குறிப்பிடுகிறார். யோவான் 1:1-5 வசனங்களில், ஆதியாகமம் 1-2 ல் சொல்லப்பட்டுள்ள படைப்பின் காரியங்களை சுட்டிக்காட்டி படைப்பில் கிறிஸ்துவின் மேன்மையை யோவான் பதிவு செய்கிறார். மேலும் நான்கு சுவிசேஷங்களும், பழைய ஏற்பாட்டை அநேக மேற்கோள்கள், குறிப்புகள் மூலம் குறிப்பிடுகின்றன. சுவிசேஷங்கள் மேன்மையான ஒன்றைச் செய்கின்றன: அவை இயேசுவின் ஊழியத்தின் மூலம் இவ்வுலக வரலாற்றையும், இஸ்ரவேலின் வரலாற்றையும் பதிவு செய்கின்றன. எளிமையாக சொல்லப்போனால், பழைய ஏற்பாட்டின் ஒத்த வாக்கிய வசனங்களை வைத்து சுவிசேஷங்களை வாசியுங்கள். பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவை காட்டாமல் சுவிசேஷங்களை பிரசங்கிப்பது என்பது, மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரை புறந்தள்ளுவதாகும்.
இயேசுவின் வாழ்க்கையை, அதன் காதாபாத்திரங்கள், கதைக்களம், இட சூழ்நிலை மற்றும் பழைய ஏற்பாட்டின் தொடர்பின் மூலம் சுவிசேஷகர்கள் எவ்வாறு கூறுகிறார்கள் என்பதை உணர்ந்து படிக்கவேண்டும்.
3. சுவிசேஷங்களை ஒன்றாக படியுங்கள் – நான்கு சுவிசேஷங்களையும் ஓர் நோக்கத்திற்காகவே நாம் பெற்றுள்ளோம்.
சுவிசேஷங்கள் கிறிஸ்துவைக் காண்பிக்கிறது, ஒவ்வொரு புத்தகத்தின் காட்சிகளும் ஓர் சிறிய வித்தியாசங்களோடு உள்ளது. அவற்றின் தனித்துவங்களை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒத்தப் பார்வை சுவிசேஷங்களோடு ஒப்பிட்டு படிக்கவேண்டும். ஒத்த பார்வை சுவிசேஷங்கள் (Synoptic Gospels), மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்களை பற்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பெரும்பாலான காரியங்களை கொண்ட ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை கூறுகிறது. எனவே எப்பொழுதெல்லாம் இந்த மூன்று சுவிசேஷங்களை வாசிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு அதன் ஒற்றுமைகளையும், வித்தியாசங்களையும் குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் ஒரே நிகழ்ச்சிகளை எவ்வாறு முன்வைக்கிறது என்பதை வரிசைப்படுத்துவதின்மூலம், அதன் ஆசிரியர்கள் எந்த நோக்கத்தோடு கூறுகிறார்கள் என்பதை இன்னும் சற்று வித்தியாசமான முறையில் எளிதாக கவனிக்கமுடியும். இந்த தனித்துவமான வலியுறுத்தல்கள் ஒவ்வொரு ஆசிரியரின் நோக்கங்களையும், மற்றும் இறையியலையும் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நற்செய்திகளை இந்த முறையில் வாசிக்க முயற்சிப்பதில்லை. ஆனால் அவர்கள் சரியான முறையில் சுவிசேஷங்களை வாசிக்கும்போது அதிலிருந்து அநேக ஆவிக்குரிய வெகுமதிகளை பெற்றுக்கொள்வார்கள்.
4. நீங்கள் கற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துங்கள்.
தெயோப்பிலுவுக்கு லூக்கா எழுதுகையில், “உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களை நிச்சயமாக நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” (லூக்கா 1:4-5, யோவான் 20:31). இங்கு சொல்லப்பட்ட உபதேசிக்கப்பட்ட விசேஷங்கள் என்பது கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய காரியங்களாகும். மேலும் தெயோப்பிலுவின் விசுவாசத்தையும் திருச்சபையின் நம்பிக்கையையும் அதிகரிப்பதற்கு லூக்கா மேற்கொண்டு எழுதுகிறார். லூக்காவின் சுவிசேஷம் விசுவாசிகளின் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்கிறது. சுவிசேஷத்தின் மைய சத்தியத்தை அறியும் அறிவு கிறிஸ்துவுக்குள் நமது விசுவாசத்தை ஊன்றச்செய்து, தேவபக்தியில் வளரச் செய்கிறது. மேலும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நாம் ஓர் உடன்படிக்கையின் குடும்பமாக வாழ்ந்தாலும், ஏதேன் முதல் புதிய எருசலேம் வரை நீண்டு கிடக்கும் விசுவாசிகளின் கூட்டமாகவே நாம் உள்ளோம். இந்த சுவிசேஷங்கள் நம்முடையது என்ற விசுவாசத்தோடு வாசிக்கவேண்டும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகள், இதனுடைய முதலாவது வாசகர்களிடமிருந்து நம்மைப் பிரித்தாலும், இன்றும் இந்த விலையேறப்பெற்ற நான்கு சுவிசேஷங்கள் மூலமாக தேவன் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
எனவே, பழைய ஏற்பாட்டோடு தொடர்புடைய இந்த நான்கு சுவிசேஷங்களையும் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நான்கு கதைநடைகளாக இவற்றைப் படித்து, இவற்றின் சத்தியங்களை நமது வாழ்வில் பொருத்தவேண்டும். இவ்வாறு செய்வதின் மூலமாக நாம் இன்னும் அதிகமாக கிறிஸ்துவை முழுமையாக அறிந்து அவருக்காக வாழமுடியும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.