How Can I Deal with Despair?
விரக்தியை எவ்வாறு சமாளிப்பது?
17-03-2026
How Can I Deal with Despair?
விரக்தியை எவ்வாறு சமாளிப்பது?
17-03-2026

ஊழியத்தில் ஏற்படும் மனச்சோர்வை கையாளுவது எப்படி?

How to Deal with Burnout in Ministry?

இன்று உண்மையான நற்செய்தி ஊழியத்தை செய்பவர்களிடையே  ஊழியத்தின் நிமித்தமாக ஏற்படும் சோர்வு என்பது மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. ஊழியத்தில் ஈடுபடும் தேவபக்தியுள்ள போதகர்களும் ஆசிரியர்களும் மனச்சோர்வை அனுபவிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எதிர்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தின் வளர்ந்து வரும் பகைமை தன்மையானது, ஒழுக்கக்கேட்டையும் மன அழுத்தத்தையும் நம்மிடையே உருவாக்குகிறது. அதைவிட மேலாக, வேதசத்தியத்தின்படி வாழ்வதைவிட கலாச்சாரத்தின்படி வாழ விரும்பும் சில கிறிஸ்தவர்களின் மனப்பாங்கு மிகுந்த மன வேதனையளிக்கிறது. இத்தகைய ஆவிக்குரிய போராட்டத்தின் மத்தியில், தேவனுக்கென்று ஊழியம் செய்கிற  மிகவும் மென்மையான சுபாவம் கொண்ட நல்ல ஆண்களும் பெண்களும், சிறிய அல்லது பெரியதான எதிர்ப்புகளை சந்திக்கும்போது அது உண்மையாகவே  அவர்களை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

இதை சுருக்கமாக இங்கே சிந்திக்கலாம் எப்படியென்றால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தமான மானுட வாழ்க்கையின் போது அவரை ஆழமாக பாதித்த  துக்கத்தையும் சோர்வையும் குறித்து சிந்திக்கும்படி உங்கள் கவனத்தை அவரில்  திருப்ப விரும்புகிறேன். அவர் ஊழியத்தின்போது மனச்சோர்வை  அனுபவித்தார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒவ்வொரு நற்செய்தி ஊழியரும், போதகரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியை, நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து ஒரு விசுவாசமுள்ள மனிதனாகவும் கர்த்தரை சேவிக்கிற ஊழியக்காரனாகவும் இருந்து அதற்கான வழிகாட்டுதலை நமக்கு முன்வைத்து போயிருக்கிறார். அதை மனதில் கொண்டு, நான் இரண்டு காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்: முதலாவதாக, பாவமே செய்யாத நம் ஆண்டவர் அனுபவித்த கடினமான, கிட்டத்தட்ட அவரை மேற்கொள்ளும்படியாக ஊழியத்தில் ஏற்பட்ட சோதனைகளை பிரதானமாகவும்; இரண்டாவதாக, இவ்விதமான சோதனைகளை அனுபவித்தபோது அவர் கொண்டிருந்த தளராத மனப்பாங்கையும் குறித்து பிரதானமாக சிந்திக்கவிருக்கிறோம்.

1.இயேசு சோர்வுகளை நினைவில் வைத்தும் மற்றும் அதை அறிந்துமிருக்கிறார்  

முதலில், இந்த ஆச்சரியமான வார்த்தைகளைக் கவனியுங்கள்:

“அவர் என்னை நோக்கி: நீ என் தாசன், இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன்; வீணும் வியர்த்தமுமாய் என் பெலனை செலவழிக்கிறேன் .” (ஏசாயா 49:3–4)

நான் கல்லூரியில் வேதத்தை விளக்கப்படுத்திக் கொண்டிருக்கும் போது என் மாணவர்களிடம், “இந்த வார்த்தைகளைச் சொன்னது யார்?” என்று அடிக்கடி கேட்பேன். ஒருமுறை கூட யாரும் இதற்கு சரியான பதிலைக் கூறியதில்லை. இந்த வார்த்தைகள் யெகோவாவின் உண்மையுள்ள, பாவமில்லாத ஊழியனால்  சொல்லப்பட்டவை; அதாவது யெகோவா யார் மூலமாக “மகிமைப்படுவாரோ” அவரால் சொல்லப்பட்டவை. இந்த வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உதடுகளிலிருந்து வந்தவை.

மேற்சொலிய வசங்களில் சொல்லப்பட்ட “விருதா ” மற்றும்  “வீணும்”  ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளும் ஆழமான அர்த்தம் கொண்டவை. எபிரேய மொழியில் “விருதா ” என்னும் tohu என்பது ஆதியாகமம் 1:2-ல் “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் (tohu)  இருந்தது” என்பதிலிருந்து வந்த சொல்லாகும். “வீணும்”

என்ற hevel என்று என்னும் சொல்லானது  பிரசங்கி புத்தகத்தில் தாராளமாகப் பயன்படுத்தப்படும் “மாயை மாயை” என்பதிலிருந்து வரும் சொல்லாகும். சிலுவை மரணத்தின் விளிம்பில், நம்முடைய இரட்சகர் தன்னுடைய ஊழியத்தையும் பணியையும் சீர்தூக்கிப் பார்த்தபோது, அவர் ஊழிய ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் பாவமற்றவராக ஒருவிதமான வேதனையை அனுபவித்தார். எதிர்ப்புகள் கடுமையாக காணப்பட்டன; அவருடைய சீஷர்களோ மிகவும் சோர்ந்துபோய் மந்தமான நிலையில் காணப்பட்டனர். “இருளே என்னுடைய சினேகிதன்” (சங்கீதம் 88:18) என்று சங்கீதக்காரனால் எழுதப்பட்ட  வார்த்தைகளுடைய துக்கத்தின் முழு பாரத்தையும் அவர் உணர்ந்தார்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும், குறிப்பாக ஒவ்வொரு நற்செய்தி ஊழியரும் இதை அறிந்திருக்க வேண்டும்: நமது இரட்சகர் தமது ஊழியக்காரர்களின் துக்கத்தையும் சோர்வையும் அறிந்திருக்கிறார். ஏனெனில் அவர்தாமே அதை அனுபவித்தார். நற்செய்தி ஊழியத்தில் உண்மையுள்ளவனாக காணப்படுவது விலையேறப்பெற்றது. சங்கீதக்காரன் கதறுவதைக் கவனியுங்கள்:

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?” (சங்கீதம் 42:5)

அவர் கீழ்ப்படியாமல் போனதால்  இவ்வாறு கதறவில்லை, மாறாக கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியக்காரனாகிய இயேசு கிறிஸ்துவின் அனுபவத்தை அவர் முன்கூட்டியே உணர்ந்ததால் இப்படி கதறினார்.

இதிலிருந்து எனது அடிப்படை கருத்து இதுதான்: கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியர்கள் தாங்கள்  துக்கத்தின் ஆழத்தில் இருப்பதாக உணரும்போது, ஊழியத்தின் அலைகள் தங்கள் மனதிலும் இதயத்திலும் மோதுவதாக உணரும்போது (சங்கீதம் 69:1–2), அவர்களுக்கு ஒரு உண்மையுள்ள இரட்சகர் இருக்கிறார்; அவர் ஏற்கனவே மிகக் கடுமையான சோர்வு மற்றும் வேதனையின் பாதையில் நடந்திருக்கிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று  நினைவுகூருகிறார் (சங்கீதம் 103:14).

2. இயேசுவின் விசுவாசம் அவரது வாழ்வின் செயல்களை வழிநடத்தியது 

அதைத் தொடர்ந்து இரண்டாவதாக, கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கவனியுங்கள்:

“ஆயினும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது.” (ஏசாயா 49:4)

தேவனுடைய பாவமற்ற குமாரனும், அவருடைய உண்மையுள்ள ஊழியக்காரனுமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஊழியத்தில் ஏற்படும் வேதனையின்  ஆழத்தை அனுபவித்தபோதும், அவர் தனது துயரமான இருதயம் மற்றும் மனதை யெகோவாவின் உண்மை தன்மையின்மேல் சார்ந்திருக்கும்படி செய்தார். துக்கமும் வேதனையும் அவரைத் தாக்கியபோதும், தேவன் நல்லவர் மற்றும் தமது பிரயாசத்திற்கான பலனை அவர் தருவார் என்ற வாக்குத்தத்தத்தின் மீதும் தளராத நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். அதேபோல, பரலோகத்தில் வீற்றிருக்கும் தேவனுடைய நன்மை மற்றும் அவருடைய அன்பின்மீது நாம் வைக்கும் விசுவாசம், புயல்களைத் தாண்டிச் செல்லவும், நம் ஆத்துமாவைச் சுற்றியுள்ள அனைத்துயும் மேற்கொண்டுவிடாதபடி உறுதியாக நிற்கவும் நமக்கு உதவுகிறது.

கர்த்தருடைய மிகச் சிறந்த ஊழியர்களில் சிலர் இருளில் நடக்க அழைக்கப்படுகிறார்கள்; வெளிச்சமே இல்லாதது போன்ற இருளில் நடக்கிறார்கள். ஏசாயா 50:10-ல் உள்ள இந்தத் துணிச்சலான வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள்:

“உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லுக்குச் செவிகொடுக்கிறானோ, அவன் வெளிச்சமில்லாமல் அந்தகாரத்தில் நடந்தாலும், அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்திருக்கக்கடவன்.”

ஊழியத்தில் ஏற்படும் சோர்வு நம் வாழ்க்கையைச் சிதைத்து, கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் நாம் பயன்படாதபடி செய்யும்போது, “தேவன் யார்” என்பதை நினைவுகூருவதே நமக்கிருக்கும் மிகப்பெரிய பலன் என்பதை ஏசாயாவின் மூலமாக கர்த்தர் நமக்கு நினைப்பூட்டுகிறார்.

இதுவே நமது இரட்சகரின் உச்சக்கட்ட அனுபவமாக இருந்தது. கல்வாரி சிலுவையில் அவர் தனியாகவும் கைவிடப்பட்டவராகவும் தொங்கியபோது, எல்லா வெளிச்சங்களும் அணைந்தபோதும் அவர் முயற்சியைக் கைவிடாமலும் பின்வாங்காமலும் இருந்ததற்குக் காரணம் தேவன்மீது அவர்  வைத்திருந்த விசுவாசமே. அப்படிப்பட்ட மோசமான நிலையிலும், “என் தேவனே, என் தேவனே…” (சங்கீதம் 22:1; மத்தேயு 27:46) என்று விசுவாசத்தினால் பிதாவாகிய தேவனை பற்றிக்கொண்டார். இருள் அவரைச் சூழ்ந்தது, ஆனால் அந்த இருளில் அவருடைய விசுவாசம் மகிமையாகப் பிரகாசித்தது.

முடிவுரை: 

 நமது ஊழியச் சோர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்: தனிப்பட்ட போராட்டங்கள், குடும்பப் பிரச்சினைகள், சபையில் நிலவும் பதற்றங்கள், உலகளாவிய அமைதியின்மை அல்லது சர்வதேச நெருக்கடிகள். காரணங்கள் எதுவாக இருந்தாலும், இயேசு தமது இரத்தத்தால் சம்பாதித்த, நேசத்திற்குரிய  ஜனங்களிடம் இவ்விதமாக கூறுகிறார்: தேவன் மேல் விசுவாசமாயிருங்கள்— அநாதி சிநேகத்தால் உங்களை நேசிக்கும் பிதா, உங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்து, உங்களுக்காக எப்போதும்

 வேண்டுதல் செய்கிற குமாரன் மற்றும் உங்களுக்கு உதவி செய்ய உங்களுக்குள் வாசமாயிருக்கும் பரிசுத்த ஆவியானவர் (எரேமியா 31:3; ரோமர் 8:26; எபிரேயர் 7:25). தேவன்மேல் விசுவாசம் வைத்து, நமது இரட்சகரைப் போலவே அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

இயன் ஹாமில்டன்
இயன் ஹாமில்டன்
டாக்டர் இயன் ஹாமில்டன் இங்கிலாந்தின் நியூகேஸில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பிரஸ்பைடிரியன் இறையியல் கருத்தரங்கின் தலைவராகவும், தென் கரோலினாவின் கிரீன்வில்லில் உள்ள கிரீன்வில் பிரஸ்பைடிரியன் இறையியல் கருத்தரங்கில் துணைப் பேராசிரியராகவும் உள்ளார். அவர் சிலுவையிலிருந்து வரும் வார்த்தைகள், நமது பரலோக மேய்ப்பர், மற்றும் புதிய ஏற்பாட்டில் எபேசியர் பற்றிய விளக்கவுரை உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர்.