
இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்?
17-07-2025
எவ்வாறு இயேசு வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்?
24-07-2025இயேசுகிறிஸ்து எப்படி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்?

ஜோர்டான் கல்
(How Is Jesus the Resurrection and the Life?)
பிரசங்கி புத்தகத்தின் அதின் ஞானமுள்ள ஆசிரியர், “விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்” (பிரசங்கி 7:2) என்று தேவபக்தியை வளர்க்கக்கூடிய ஒரு பிரதான இடத்தை பற்றிப் பேசுகிறார், அந்த இடம் நம்மை ஆச்சரியப்படுத்த கூடும். மேலும், “ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்” (பிரசங்கி 7:4) என்றும் அவர் நினைவுபடுத்துகிறார்.
அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கட்டாயம் அறிவோம். ஒரு துக்க வீட்டு நிகழ்வில் கலந்துகொள்வது அல்லது கல்லறை இடத்தை பார்க்க செல்வது நித்தியத்திற்கு ஏதுவான காரியங்களை நமக்கு அதிகமாக நினைப்பூட்டுகிறபடியினால் அது நம்முடைய ஆத்துமாவுக்கு நல்லது என்று சொல்லுகிறார்.
புதிய ஏற்பாட்டில் யோவான் 11 ஆம் அதிகாரம், அவ்விதமாகவே நம்மை துக்க வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. மரணத்தின் விரக்தியையும் தோல்வியையும் பற்றி நாம் கற்றுக்கொள்ளும்படி ஆவியானவர் நம்மை இவ்விதமான இடங்களுக்கு வழி நடத்துகிறார். யோவான் 11 ஆம் அதிகாரம் “புதிய ஏற்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி,” என்று ஜே. சி. ரைல் அவர்கள் எழுதுகிறார். அதாவது “பிரம்மாண்டம் மற்றும் எளிமை, இரக்கம் மற்றும் கம்பீரம், போன்ற காரியங்கள் இதைப்போல் வேறு எங்கும் எழுதப்பட்டதில்லை” என்றும் கூறுகிறார்.
சூழ்நிலை
இயேசுவுடைய சினேகிதனாகிய லாசரு வியாதியாயிருக்கிறான் என்று ஒரு செய்தி வருகிறது. (யோவான் 11:3). மரியாளும், மார்த்தாளும் பினியாளிகளை சொஸ்தமாக்கும் இயேசுவின் வல்லமையைப் பற்றி நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பார்கள். ஒருவேளை பார்த்திருக்கவும் கூடும். இயேசு துரிதமாக வருவாரானால், அவர் நிச்சயமாக லாசருவை காப்பாற்ற முடியும் என்று அவர்கள் விசுவாசித்தார்கள்.
லாசரு வியாதியாயிருக்கிறான் என்று கேள்விப்பட்டபோது இயேசு சொன்ன மறு உத்தரவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
யோவான் இவ்விதமாக எழுதுகிறார்: “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். அவன் வியாதியாய் இருக்கிறதாக அவர் கேள்விப்பட்ட பொழுது தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டு நாள் தங்கினார் (யோவான் 11:5-6). “ஆகவே” என்ற சிறிய வார்த்தை பொதுவாக “ஆகையால்” என்று மொழிபெயர்க்கப்படுவதுண்டு. எனவே, இந்த பகுதியை இன்னும் தெளிவான அர்த்தத்தில் பார்ப்போமானால் “இயேசு மார்த்தாளிடத்திலும், மரியாளிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார், ஆகையால் . . . அவர் பின்னும் இரண்டு நாட்கள் அதிகமாகத் தங்கினார்” என்று சொல்கிறது. சுவாரஸ்யமாக, அவருடைய அன்பு, அவர்களை காத்திருக்கச் செய்தது. தம்முடைய சீஷரிடத்தில் அவர் வைத்திருந்த அன்பின் மகிழ்ச்சியினால் அவர் பின்னும் தாமதமாக சென்றார். அந்த துக்கமும் வியாதியும் முழுமை அடையும்படியாய் அவர் பின்னும் அங்கே தங்கினார்.
கிறிஸ்துவின் பாடசாலையில் இந்த மிகப்பெரிய பாடத்தை நாம் எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டவரை எதையாவது செய்யும்படியாய் எத்தனை முறை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர் உடனடியாக பதிலளிக்கவில்லையா? அல்லது அவர் சரியான நேரத்தில் பதிலளிக்கவில்லையா? அவருடைய தாமதம் அவருடைய அன்பினுடைய வெளிப்பாடே ஆகும். ஆகவே, நீங்கள் கேட்கக்கூடிய அல்லது கற்பனை செய்யக்கூடிய அனைத்திற்கும் மேலாக அளப்பெரியதைச் செய்ய அவருடைய திட்டமும் நோக்கமும் இருக்கிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை என்பதை சிந்தியுங்கள்.
அறிக்கை
லாசரு மரித்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இயேசு இறுதியாக அந்த துக்க வீட்டிற்கு வந்து சேருகிறார். மார்த்தாள் இயேசுவிடம் ஓடி வருகிறாள். அவரைச் சந்தித்தவுடன்: “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை அவர் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன்” (யோவான் 11:21-22) என்றாள். விசுவாசத்தின் விதை மார்த்தாளிடம் தெளிவாக காணப்படுகிறதை பார்க்கலாம். “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று இயேசு அவளுக்கு உறுதியளிக்கிறார் (யோவான் 11:22).
“உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” என்று மார்த்தாள் பதிலளிக்கிறாள் (யோவான் 11:24). இயேசுவின் நாட்களில் பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையே உயிர்த்தெழுதலைப் பற்றி ஒரு பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. வரலாற்றின் முடிவில் ஒரு உயிர்த்தெழுதல் இருக்குமா என்பதே கேள்வி. உயிர்த்தெழுதலைப் பொறுத்தவரை இறையியல் ரீதியாக மார்த்தாள் பரிசேயர்களின் பக்கத்தில் இருந்தாள். உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் லாசருவும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அவள் நம்பினாள். ஆனால் இயேசு இப்பொழுதுள்ளதைப் பற்றிப் பேசுகிறார். எனவே, அவர் : “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மறியாமலும் இருப்பான் . இதை விசுவாசிக்கிறாயா?” (யோவான் 11:25-26) என்று கேட்டார்.
இது யோவானில் ஐந்தாவது “நானே” கூற்றாகும் – இது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இயேசு சொல்கிறார்: “நான் உயிர்த்தெழுதலை குறித்து உபதேசிப்பது மட்டுமல்ல; நானே உயிர்த்தெழுதல். ஜீவனுக்கேதுவான தேவ வல்லமையை குறித்து மட்டும் நான் பிரசங்கிப்பதில்லை; ஜீவனை அளிக்கும் தேவ வல்லமை நானே. வெறுமனே அந்த வார்த்தைகளை விசுவாசிக்காமல் என்னை விசுவாசியுங்கள்.” உண்மையான விசுவாசம் இயேசுவைப் பற்றிய தகவல்களையும் ,உண்மைகளையும் வெறுமனே நம்புவது அல்ல. மாறாக, அது அவரையே நம்புவதாகும்- ஏனெனில் எல்லா உண்மைகளும் அவருக்குள் அடங்கியிருக்கிறது.
உயிர்த்தெழுதலின் நிச்சயம்
இயேசு உரத்த சத்தமாக: “லாசருவே, வெளியே வா” என்று கூப்பிட்டபோது, மரித்தவன் ஜீவனையடைந்து நடமாடும் இரட்சிப்பின் அடையாளமாக மாறுகிறான். அவன் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாகிய இயேசுவுக்கு ஒரு ஜீவனுள்ள நினைவுச்சின்னம் போன்றவன். லாசரு உயிர்த்தெழுந்த பிறகு, “கட்டுகளை அவிழ்த்து, அவனைப் போகவிடுங்கள்” (யோவான் 11:43-44) என்று அவர் கட்டளையிடுகிறார்.
சுவிசேஷத்தின் ஒரு அற்புதமான காட்சிப்படத்தை இங்கே பார்க்கலாம்.
நாம் நம்முடைய பாவங்களில் மரித்திருக்கிறோம் என்று வேதாகமம் சொல்கிறது. அவிசுவாசத்தின் கட்டுகள் நம்மை சிக்கவைத்து, பாவத்தின் ஆடைகள் நம்மை மூடுகின்றன. லாசருவை போலவே, நாமும் பிழைத்திருக்கும்படியாய் நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் மரித்துப்போன ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவனை தேவன் மறுபடியுமாக உயிர்ப்பிக்கிறார். இரட்சகராகிய கிறிஸ்து பாவிகளுக்கு பதிலாளாக சிலுவையில் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களையும் வைத்திருக்கிறார். “வெளியே வாருங்கள். உங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி, என்னை விசுவாசியுங்கள். நான் உங்கள் பாவத்தின் கட்டுகளை அறுத்து, உங்களை விடுதலையாக்குவேன்” என்று நம்மை அவர் அழைக்கிறவராயும் இருக்கிறார்.
ஆகவே,இயேசுகிறிஸ்துவினுடைய இவ்விதவிதமான கிரியைகளை கண்டு, அவருடைய வார்த்தைகளை கேட்டு, ஐந்தாவது “நானே” கூற்றுக்கு மார்த்தாளைபோல, “ஆம், ஆண்டவரே; நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று நாம் அனைவரும் சொல்லுவோமாக, ஆமென்.
இந்தக் கட்டுரை, “இயேசுவின் ‘நானே’” என்ற கூற்றுகள் தொகுப்பின் ஒரு பகுதியாகும்
ஆசிரியரைப் பற்றி:
டாக்டர். ஜோர்டான் ஸ்டோன், மெக்கினி, டெக்சாஸில் உள்ள ரெடீமர் பிரஸ்பைடீரியன் திருச்சபையின் மூத்த போதகராகவும், டல்லாஸில் உள்ள சீர்திருத்த இறையியல் கல்லூரியில் போதக இறையியலின் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார். ராபர்ட் முர்ரே மெக்கெய்ன் வாழ்க்கை மற்றும் ஆன்மீக மரபு: ஒரு பரிசுத்த ஊழியர் (A Holy Minister: The Life and Spiritual Legacy of Robert Murray M’Cheyne) உட்படப் பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.