
யோபு புத்தகத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்
20-03-2025
1, 2, 3 யோவான் புத்தகங்களிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய காரியங்கள்
27-03-2025நீதிமொழிகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

1.நீதிமொழிகள் ஞானத்தின் தொகுப்பு, உத்திரவாதங்களின் தொகுப்பு அல்ல
நீதிமொழிகள் புத்தகம் வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளுக்கும் எளிதான, உடனடியான மற்றும் நிச்சயமான பதிலை தருவது போல தோன்றும். தங்களது வாழ்க்கையில் இவற்றை நடைமுறைப்படுத்தும்போது செழிப்புகளையும் வெற்றிகளையும் இது உறுதிசெய்வது போல் நீதிமொழிகள் புத்தகம் தோற்றமளிக்கும். இன்னும் சொல்லப்போனால், நீதிமொழிகளின் மேலோட்டமான வாசிப்பு, “X” என்ற ஞானத்தை நீங்கள் அடையும்போது “Y” என்ற மனிதவெற்றியையும் செழிப்பையும் நீங்கள் தானாக அடைவது போல முடிவுக்கு கொண்டுவரலாம். உதாரணமாக, நீதிமொழிகள் 3:1-2 ல், எவர்கள் நீதிமொழிகளின் உபதேசங்களை நினைவுகூர்ந்து அவற்றின் கட்டளைகளை கைக்கொள்கிறார்களோ அவர்கள் நீடித்த ஆயுசு நாட்களையும் செழிப்புள்ள வாழ்க்கையையும் அடைவார்கள் என்று நமக்கு கூறுகிறது. இதை இவ்வாறு வாசிக்கையில், செழிப்பையும் வெற்றியையும் தருவது போல காணப்படுகிறது இல்லையா? இந்த எளிமையான முறையில் நீதிமொழிகளை படிப்பது எவ்வளவு சோதனையான ஒன்று என்பதை உங்களால் பார்க்கமுடியும், ஆனால் இந்த முறையில் இந்த புத்தகத்தை வாசிப்பது தவறானதும் தீங்கு விளைவிப்பதுமாக இருக்கும்.
நீதிமொழிகள் எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் வெற்றிகளை கொடுக்கும் சூத்திரங்களை வழங்குவதில்லை, மாறாக நமது சிந்தனைக்கும் விவேகமாக செயல்படுவதற்கும் ஏற்ற ஞானமான கொள்கைகளை நமக்கு அளிக்கிறது. நாம் நீதிமொழிகளை வாசிக்கையில், கீழ்படிதலுக்கான பலனானது எல்லா நேரங்களிலும் உடனடியாக நிகழாது என்ற வேதத்தின் அடிப்படை உபதேசத்தின் வெளிச்சத்தில் வாசிக்கவேண்டும். சில நேரங்களில் நமது கீழ்படிதலுக்கான பலனானது மிக தாமதமாகவும், நித்தியம் வரைக்கூட தாமதமாகலாம். ஞானத்தின் முழு உருவமாகிய இரட்சகராக இயேசு கிறிஸ்து, தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் முழுவதுமாக கீழ்ப்படிந்தவராயிருப்பினும், கொஞ்ச காலத்திற்கு கொடிய வேதனைகளை அனுபவித்தார் என்பதை நினைவுகூறுங்கள் (பிலிப்பியர் 2:5-11). அவர் பாடனுபவித்தப்பிறகே மகிமைப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டார். நீதிமொழிகளின் ஞானங்கள் நிச்சயமான பலன்களை அளிக்கும் என்பதற்காக அவற்றை பின்பற்றாமல், அந்த ஞானங்கள் இந்த உலகில் நம்மை வழிநடத்துவதற்கு தேவனால் அருளப்பட்ட பரிசு என்பதற்காகவே நீதிமொழிகளை நாம் கைக்கொள்ளவேண்டும்.
2. நமது வாழ்வின் அனைத்து பகுதிகளையும் தேவன் பராமரிக்கிறார் என்பதை நீதிமொழிகள் நினைவுப்படுத்துகிறது.
நீதிமொழிகளின் சிறப்பம்சங்களில் ஒன்று, இப்புத்தகத்தின் பரந்த பார்வையாகும். மனித வாழ்க்கையின் அனைத்து நடைமுறை காரியங்களில் அனைத்து அம்சங்களையும் நீதிமொழிகள் கையாளுகிறது. நீதிமொழிகளின் உள்ளடக்கத்தை நீங்கள் கவனிக்கும்போது, அது செல்வம் உட்பட பலவிதமான காரியங்கள் பற்றிய கவலைகளை நீக்குவதை காண்பீர்கள். செல்வம் (நீதி 3:9,13-14,11:4,13:7,11,22,14:31,21:5,28:6,20,30:8-9), வார்த்தைகள் (10:19,12:19,15:23,28,17:27-28,25:11,26:20), வேலை (6:6-11,12:11,19:15,20:4,13,26:13-16), நட்பு (17:17,18:24,27:6,9), திருமணம் (12:4, 18:22,19:14,27:15,31:30), பெற்றோர் (13:24, 17:6,19:18,22:6,23:13-14,29:17) மற்றும் பாலியல் உறவு (5:3,8-9,15-19,6:27-29). இவைகள் நமக்கு எதை நினைவுப்படுத்துகிறதென்றால், நமது வாழ்வின் அனைத்து பகுதிகளையும் தேவன் பராமரிக்கிறபடியால், வாழ்வின் எல்லா பகுதிகளிலும் அவரின் வார்த்தைகளையும், ஞானங்களையும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார்.
சில நேரங்களில், கிறிஸ்தவர்கள் ஆத்மீக காரியங்கள் என அழைக்கப்படும் ஞாயிறு காலை ஆராதனை, தனி வேததியானம், ஜெபம் மற்றும் சுவிசேஷ ஊழியம் போன்ற காரியங்களுக்கு மட்டும் தங்கள் விசுவாசத்தை ஒதுக்கி வைத்து அதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை பிரித்துவைத்துவிடுகிறார்கள். இவ்விதமான ஆவிக்குரிய காரியங்களில் நாம் உண்மையோடு ஈடுபடுவது தேவனுக்கும் நமது நல்வாழ்வுக்கும் அவசியமானதாக இருப்பினும், நமது செல்வங்கள் மீதான உக்கிராணத்துவமும், நமது வார்த்தைகளை பயன்படுத்தும் முறையும், வேலைக்கு செல்வதும், நண்பர்களையும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதும் அதே அளவுக்கு அவசியமானதாக உள்ளது. நமது வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளுக்கும் வேதம் தேவனின் ஞானத்தை கொடுப்பதின் மூலம், நமது விசுவாசங்களை பிரிக்க தூண்டும் சோதனைகளுக்கு சவால் விட்டு, அவைகளை சீர்திருத்தவும் உதவி செய்கிறது.
நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தேவனின் தகப்பனின் அக்கறையானது, மனிதனின் அன்றாட அனுபவங்களின் இந்த பகுதிகளை மிகுந்த அர்த்தத்துடனும் முக்கியத்துவத்துடனும் நிரப்புகிறது. நமது வாழ்வு மற்றும் இவ்வுலகத்தை பற்றிய பார்வைகளை நீதிமொழிகள் நமக்கு அளித்து எல்லாவற்றையும் தேவனின் மகிமைக்காக செயல்படுத்துவதற்கு நமக்கு ஊக்கமளிக்கிறது (1 கொரி 10:31). நாம் செய்கிற ஒவ்வொரு செயல்களும் தேவனையே சார்ந்திருக்கவேண்டும் மற்றும் நமக்கு ஏற்ற சரியானவைகளை தேவன் செய்கிறார் என்பதையும் நீதிமொழிகள் நமக்கு நினைப்பூட்டுகிறது. இறுதியாக, நீதிமொழிகளின் ஞானத்தின் விரிவான காரியங்கள் நாம் வளர்ந்து செழித்தோங்குவதற்கென்று தேவனால் அருளப்பட்ட பரிசுகளாகும்.
3. ஞானத்தை வலியுறுத்துவதின் மூலம் நீதிமொழிகள் நமக்கு கிறிஸ்துவை காண்பிக்கிறது.
அநேக நேரங்களில் நீதிமொழிகள் புத்தகம் கிறிஸ்துவின் மாதிரியியல் (typology) பற்றியும் அவரின் பணிகள் பற்றிய முன்னறிவிப்புகளையும் காண்பிக்கிற புத்தகமாக இருப்பதை நிராகரிக்கப்பட்டாலும், இது இயேசுவை பற்றி மிகவும் பலமாக பேசுகிறது. முதலாவதாக, கிறிஸ்து மேன்மையான ஞானத்தை பெற்றிருந்தார் என்பதை நான்கு சுவிசேஷங்கள் காண்பிக்கிறது. அவர் சிறுவயதில் தேவாலயத்தில் மூப்பர்களுக்கு உபதேசிக்கையில், அவரது ஞானத்தை வெளிப்படுத்தினார், வேதம் சொல்கிறது “அவர் ஞானத்தில்…விருத்தியடைந்தார்” என்று (லூக்கா 2:47-52). கிறிஸ்து எப்பொழுது தனது வெளிப்படையான ஊழியத்தில் பிரவேசித்தாரோ, ஞான போதனைகளின் வடிவமான உவமைகள் மூலமாக அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். நீதிமொழிகளின் ஆசிரியரை போலவே சுவிசேஷங்களும் கிறிஸ்துவை ஞானத்தை போதிக்கும் போதகராக காண்பிக்கிறது.
இரண்டாவதாக, கிறிஸ்துவுக்கும் நீதிமொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், நீதிமொழிகள் ஞானத்தின் விலைமதிப்பை பற்றி பேசுகிறது. வெள்ளி மற்றும் பொன்னைக் காட்டிலும் ஞானம் விலையேறப்பெற்றது என்பதை நீதிமொழிகள் போதிக்கிறது (நீதி 3:14-15). ஞானம் விலைமதிப்பற்ற ஒன்றாக இருப்பதினால் அதை நாடி தேடி அடைவதற்கு நமக்கு வலியுறுத்துகிறது. புதிய ஏற்பாட்டில் பவுல் கூறுகிறார், “கிறிஸ்துவே ஞானமாயிருக்கிறார் (1 கொரி 1:30).” மற்றும் “அவரில் அனைத்து பொக்கிஷங்களும் அடங்கியிருக்கிறது” (கொலொ 2:3). எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஞானத்தை பற்றிக்கொள்ள நம்மை அழைக்கும் நீதிமொழிகளின் புத்திமதி என்னவென்றால், பிரதானமாக ஞானமாகவே இருப்பவரை பின்பற்றுவதாகும். இயேசு கிறிஸ்து வேறுமனே ஞானத்தை கொண்டிருக்கவில்லை அல்லது ஞானத்தை போதிக்கவில்லை எல்லாவற்றிற்கும் மேலாக அவரே ஞானமாக இருக்கிறார். அவரை பின்பற்ற தவறுவது எல்லா மனித முட்டாள்தனங்களிலும் மிகப்பெரியது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.