
குழந்தையின் இழப்பில் தேவனின் ஆறுதல்
24-03-2026யோவேல் புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்
பெரும்பாலான மக்கள் இந்த புத்தகத்தில் யோவேல் 2:28-29-ல் சொல்லப்பட்டுள்ள விசேஷித்த தீர்க்கதரிசன வசனத்தை பற்றி மட்டுமே அறிந்திருப்பார்கள் . அங்கே தேவன் தமது ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவதாகவும், அதன் மூலம் தேவனுடைய ஜனங்களாகிய கூட்டத்தார் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்றும் வாக்கு பண்ணியிருக்கிறார். ஆனால் அந்த வசனங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு அந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மைய வேத சத்தியத்திற்கு வெளியே வேறொன்றையும் நாம் பார்க்க முடியாது. யோவேல் புத்தகத்தின் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றி கீழே நாம் சிந்திக்கலாம்.
1. யோவேல் புத்தகம் எழுதப்பட்ட காலத்தை நம்மால் உறுதிப்படுத்த முடியாது
முதலாவதாக, பெரும்பாலான தீர்க்கதரிசன புத்தகங்களின் வரலாற்றுச் சூழல் அந்தப் புத்தகத்தின் செய்திக்கு முக்கியமானது. ஆனால் யோவேல் புத்தகம் எழுதப்பட்ட காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இதில் எருசலேம் தேவாலயம் செயல்பாட்டில் இருப்பதைப் போல காணப்படுகிறது; அதாவது இது சாலொமோனால் கட்டப்பட்ட முதல் தேவாலயமாகவோ (கி.மு. 586-ல் அழிக்கப்பட்டது) அல்லது சிறையிருப்பிலிருந்து திரும்பிய பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவாலயமாகவோ (கி.மு. 516) இருக்கலாம். இந்த புத்தகத்தில் எந்த ராஜாவைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.மேலும் இஸ்ரவேல் அல்லது யூதாவின் முக்கிய எதிரிகள் யாரென்பதும் சொல்லப்படவில்லை. வேத விளக்கவுரையாளர்கள் இதன் காலத்தைப் பற்றிப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்தை அவர்கள் அனைவராலும் ஏகோபித்து சொல்ல இயலவில்லை. பலி செலுத்தப்படுவது நிறுத்தப்படுதல் (யோவேல் 1:9), வட திசையிலுள்ள படைகளால் அச்சுறுத்தப்படுதல் (யோவேல் 2:20) மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் மீட்பை குறித்ததான விவரங்கள் (யோவேல் 2:23-29) போன்ற முதல் தேவாலய அழிவைச் சுற்றி நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய அதாவது இஸ்ரவேல் அசீரிய அடிமைத்தனத்திற்கு போவதற்கு முன்பாக நடந்தவைகளை இந்தப் புத்தகம் பிரதிபலிக்கிறது. தேசங்களில் ஏற்பட்ட பேரழிவின் காலங்களில் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு ஆராதனை வாசகமாக (liturgical text) இது மாறியதால், இதன் காலத்தைக் கணிப்பது கடினம் என்று சிலர் கருதுகின்றனர்.
2. வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட வாதையின் போது இந்தப் புத்தகம் எழுதப்பட்டது
இரண்டாவதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்தப் புத்தகம் உருவான சூழலானது அது சொல்லுகிற செய்தியின் நோக்கத்தோடு தொடர்புடையது. அதனுடைய சூழல் வெட்டுக்கிளியினால் நிகழ்ந்த அழிவின் பாதையோடு தொடர்புடையது. அதிகாரம் 1, இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு மிகவும் பயங்கரமான வெட்டுக்கிளிகள் வாதையினால் உண்டான புலம்பலை பார்க்க முடிகிறது . யோவேல் 1:4-ல் அந்த வாதை விவரிக்கப்பட்டுள்ளது, அங்கே திரளான வெட்டுக்கிளிகள் எல்லா ஆகாரத்தையும் அழித்துவிட்டன. இதனால் ஏற்பட்ட விளைவுகளினால் பல குழுக்களாக எல்லாரும் கூடி துக்கம் கொண்டாடுகிறார்கள்: திராட்சை செடிகள் அழிக்கப்பட்டதால் மதுபானம் குடிப்பவர்கள் புலம்ப வேண்டும் (யோவேல் 1:5-7), பலிகள் நிறுத்தப்பட்டதால் ஆசாரியர்கள் புலம்ப வேண்டும் (யோவேல் 1:8-10), மற்றும் அறுவடை இல்லாததால் விவசாயிகள் புலம்ப வேண்டும் (யோவேல் 1:11-12). மேலும் ஒரு துக்கமான ஆராதனையில் அழுகையோடும் உபவாசத்தோடும் தேவனுடைய ஜனங்களை வழிநடத்தும்படி ஆசாரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது (1:13-14).
வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட வாதையினால் உண்டான அந்த குழப்பம் கர்த்தருடைய நாளில் ஒரு பேசும் பொருளாக மாறிற்று. அது தேவனை நிராகரிப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பின் நாளாகவும், தேவனிடம் திரும்புபவர்களுக்கு ஆசீர்வாதத்தின் நாளாகவும் இருக்கும். யோவேல் 1:15-ல் முதன்முதலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நியாயத்தீர்ப்பு நாளிற்கான முன்னடையாளமாக இந்த வெட்டுக்கிளிகள் வாதை காணப்படுகிறது:
“அந்த நாளுக்காக ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது.”
அந்த நாளின் அழிவு யோவேல் 1:16-20-ல் விவரிக்கப்பட்டுள்ளது. யோவேல் 2:1-2-ல் ஓர் அவசரமான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அது அந்த “நாளின்” தன்மையை “இருளும் அந்தகாரமுமான நாள், மேகமும் மந்தாரமுமான நாள்” என்று வலியுறுத்துகிறது. இந்த இருள் மலைகளின் மேல் பரவி, நிறுத்த முடியாத போர்வீரர்களைக் கொண்ட போருக்குத் தயாராக நிற்கும் ஒரு பெரிய மற்றும் சக்திவாய்ந்த இராணுவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த இராணுவத்தை எதிர்கொள்வதைப் பற்றி மக்கள் வேதனைப்படுகிறார்கள். ஏனெனில் இது ஒரு பூமிக்குரிய இராணுவம் மட்டுமல்ல; இது கர்த்தருடைய இராணுவம். கர்த்தர் இந்த இராணுவத்திற்கு முன்பாகத் தமது சத்தத்தை முழங்குகிறார்; பூமி அதிரும், சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும் (யோவேல் 2:10-11). “கர்த்தருடைய நாள் பெரிதும் மிகவும் பயங்கரமுமானது, எனவே அதை சகிக்க ஒருவராலும் கூடாது(யோவேல் 2:11) .
யோவேலில், கர்த்தருடைய நாள் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல; அது வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு இறுதி கால நிகழ்வை விவரிக்கிறது. கர்த்தருடைய நாளில் வரவிருக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அழிவை முன்னிட்டு, யோவேல் தேவனுடைய ஜனங்களை மனந்திரும்புதலுக்கு நேராக அழைக்கிறார் (2:15-17). வெட்டுக்கிளி வாதையினால் ஏற்பட்ட அழிவுக்கு நேர்மாறாக அவர்களுக்குப் பொருள் சார்ந்த ஆசீர்வாதங்களையும் (2:21-27), தமது பரிசுத்த ஆவியைப் பொழிவதன் மூலம் வரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் (2:28-32) தேவன் வாக்கு பண்ணுகிறார்.
3. பெந்தெகொஸ்தே நாளில் நடந்த நிகழ்வுகளை விளக்குவதற்கு அப்போஸ்தலனாகிய பேதுரு யோவேலை மேற்கோள் காட்டுகிறார்
மூன்றாவதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெந்தெகொஸ்தே நாளில் நடந்த நிகழ்வுகளை விளக்குவதற்கு அப்போஸ்தலர் 2:17-21-ல் பேதுரு யோவேல் 2:28-32-ஐ மேற்கோள் காட்டுகிறார். தேவன் மாம்சமான யாவர் மேலும் தமது ஆவியைப் பொழிந்தபோது யோவேல் முன்னறிவித்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் நிறைவேறின, இதனால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளும் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.
அதோடு, தேவனுடைய வார்த்தையை எடுத்துரைக்கும் தீர்க்கதரிசனப் பணியானது புறஜாதிகள் உட்பட, எல்லா சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைந்தது. ஆவியானவர் அவர்களுக்குத் தந்தருளின வரத்தின்படி அவர்கள் ஒருவருக்கொருவர் பலருடைய சொந்த மொழிகளில் தெளிவுடன் பேசினார்கள் (அப்போஸ்தலர் 2:4). தேவனுடைய ஜனங்களின் முழுமையான மீட்பு (யோவேல் 3:17-21) மற்றும் தேவனுடைய சத்துருக்களுக்கு எதிரான இறுதி நியாயத்தீர்ப்பு (யோவேல் 3:1-8) அந்த சமயத்திலேயே நிகழவில்லை. அதற்கு பதிலாக, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகம் முழுவதற்கும் அறிவிப்பதன் மூலம் தேவனுடைய இரட்சிப்பின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் விளைவாக, இயேசு கிறிஸ்துவில் நமது இரட்சிப்பின் அச்சாரத்தை நாம் அனுபவித்திருக்கிறோம். தேவனுடைய சத்துருக்களுக்கு எதிரான இறுதி நியாயத்தீர்ப்பையும், அவருடைய ஜனங்களின் முழுமையான மீட்பையும் கர்த்தருடைய நாளில் நிறைவேற்ற நமது இரட்சகர் இந்த உலகத்திற்கு மீண்டும் வரும்போது, நமது இரட்சிப்பின் முழுமைக்காக நாம் காத்திருக்கிறோம். அந்த நேரத்தில், அவருடைய முழுமையான பிரசன்னத்தையும், அதனுடன் வரும் அபரீதமான ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் நாம் நித்திய நித்தியமாக அனுபவிப்போம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


