
ஒபதியா புத்தகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
13-03-2025
யோபு புத்தகத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்
20-03-2025ஆமோஸ் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
தீர்க்கதரிசன புத்தகங்களில் சிலவற்றை பற்றி நமக்கு குறைவாகவே தெரியும், ஆனால் ஆமோசின் புத்தகம் அவரின் சமகாலத்தவரான ஏசாயாவைப் போன்று சற்று வித்தியாசமானது. இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே, அவர் தெக்கோவா ஊரானும், அவரது ஊழியம் வடக்கு ராஜ்யமான இஸ்ரவேலுக்குரியது என்பதையும் ஆமோஸ் கூறுகிறார். யூதாவில் உசியாவும், இஸ்ரவேலில் எரொபெயமும் ராஜாக்களாக இருந்தபோது ஏற்பட்ட பூமி அதிர்ச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இச்செய்தி உரைக்கப்பட்டதாக இப்புத்தகத்தின் காலத்தை ஆமோஸ் குறிப்பிடுகிறார் (ஆமோஸ் 1:1). பூமி அதிர்ச்சி ஏற்பட்ட காலத்தை நம்மால் துல்லியமாக கூறமுடியவில்லையென்றாலும் , இப்புத்தகம் 760 கிமு வில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இப்புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள் உள்ளன.
1.ஒரு தீர்க்கதரிசி தேவனால் அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆமோஸ், வடக்கு இஸ்ரவேல் பகுதியிலிருந்து வரவில்லை, யூதாவின் தெற்கு பகுதியிலிருந்து வந்தார். “அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ. நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.”
(ஆமோஸ் 7:10-13). தேவனின் செய்தியோடு வடக்கு இஸ்ரவேலுக்கு செல்வதற்கு தேவன் வழிநடத்துகிற வரைக்கும் ஆமோஸ் ஓர் விவசாயியாகவே இருந்தான்.
தீர்க்கதரிசி பணி என்பது ஒரு தனிப்பட்ட குடும்பத்தை சார்ந்ததோ அல்லது மதம் சார்ந்த மக்கள் குழுவை அடிப்படையாக கொண்டதோ அல்ல. மாறாக இப்பணி தேவன் சார்பாக பேசுவதற்கு அழைக்கும் தேவனின் சர்வ இறையாண்மையின் அழைப்பைச் சார்ந்தது. காலத்தின் சூழ்நிலைக்கேற்ப தீர்க்கதரிசிகள் தேவனால் எழுப்பப்பட்டும், அவர்களின் மக்களோடு பேசுவதற்கு தேவனால் செய்திகளை பெற்றவர்களாயும் இருக்கிறார்கள். தேவன் செயல்படுவதற்கு முன், தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட செய்தியாளர்கள் அவருடைய வார்த்தையால் நிரப்பப்படுகிறார்கள். தேவனது ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகள் மூலமாக அவரின் சித்தத்தின் ஆலோசனை மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
2. தீர்க்கதரிசிகளின் பணியானது இஸ்ரவேல் மக்களோடு தேவன் செய்த உடன்படிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது.
தேவனின் வார்த்தையை அறிவித்து தேவன் எதிர்பார்க்கும் கீழ்படிதலை கொடுக்கும்படி மக்களுக்கு கூறுவதின் மூலம் தேவனுக்கும் அவரது உடன்படிக்கையின் மக்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இருப்பதே ஒரு தீர்க்கதரிசியின் பணியாகும். அவர்கள் தேவ ராஜ்யத்தின் பாதுகாவலர்கள், ராஜாக்களும் அதிகாரிகளும் தங்களின் ஒவ்வொரு கிரியைகளுக்கும் தேவனுக்கு கணக்கு கொடுக்கும்படி அவர்களை உக்கிராணக்காரர்களாக பாதுகாக்கவேண்டும். தேவன் தனது மக்களோடு ஏற்படுத்தின சிறப்பான பிணைப்பை பேணுவதற்கு அவர்கள் அர்ப்பணிக்கப்பட்டபடியினால், அவர்கள் உடன்படிக்கையின் உக்கிராணத்துவ மத்தியஸ்தர்கள் எனவும் அழைக்கப்படலாம்.
இஸ்ரவேலின் பிள்ளைகளை உடன்படிக்கையானது ஒரு தனித்துவமான உரிமை நிறைந்த உறவில் வைத்துள்ளது. ஆமோஸ் புத்தகத்தில் ஆரம்ப செய்தியானது இஸ்ரவேலை சுற்றியுள்ள பல நாடுகளை பற்றி பேசுகிறது (சிரியா, காசா, தீரு, ஏதோம், அம்மோன், மோவாப், மற்றும் யூதா, பார்க்க ஆமோஸ் 1:1-2:16). மேலும் கடைசியாக இந்த தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களோடு பேசும்பொழுது, தேவனின் வார்த்தையை பாவமுள்ள இந்த ஜாதிக்கு கொண்டுச் செல்கிறார்: ‘’பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துக் கொண்டேன்” (ஆமோஸ் 3:2). தேவனுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள இந்த மகத்துவமான உறவை பற்றி எபிரேய வார்த்தை அழுத்தமான வாக்கியமாக காண்பிக்கிறது: “ சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்”
(உபாகமம் 7:7).
தனித்துவமான உறவு தனித்துவமான பொறுப்புகளை அவசியமாக்குகிறது. மேன்மையான நிலைக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுவது என்பது தெரிந்துகொள்ளுதலோடு கடமைகளையும் ஏற்படுத்துகிறது. இஸ்ரேலுக்கு தானாக ஆசீர்வாதம் உண்டாகாது. மாறாக, இந்த மக்கள் தேவனின் நியாயத்தீர்ப்பின் ஆபத்தில் நிற்கிறார்கள், அவர்கள் அக்கிரமங்களுக்கான தண்டனையை அவர்களால் ஒருபோதும் தவிர்க்கமுடியாது” (ஆமோஸ் 3:2). வேதாகமத்தின் நியமம் என்னவென்றால், நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்தே துவங்குகிறது என்பதே (1பேதுரு 4:17). உடன்படிக்கையின் சிறப்புரிமையை, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிகின்ற அவசியத்திலிருந்து ஒருபோதும் பிரிக்கமுடியாது என்பதை ஆமோஸ் நமக்கு கற்பிக்கிறார்.
3. ஆமோசின் கடைசி காலத்தை பற்றிய காரியங்கள் அநேக அம்சங்களை கொண்டுள்ளது.
ஏறக்குறைய அனைத்து தீர்க்கதரிசிகளும் எதிர்காலத்திற்கான செய்திகளை கொண்டுள்ளனர். கர்த்தருடைய நாளை இந்த மக்கள், “கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமான” நாளாக பார்க்காமால் (ஆமோஸ் 5:20) வெளிச்சமும் பிரகாசமுமான நாளாக சித்தரித்தனர். அவர்களின் மகிழ்ச்சியான பண்டிகைகளும், பலிகளும் தேவனுக்கு எதிரான அவரின் கலகங்களை ஒருபோதும் தணிக்காது என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியாதாயிருந்தது. அவர்களின் விக்கிரகாரதானை உட்பட அனைத்து பாவங்களும் அவர்களை தமஸ்குவுக்கு அப்பாலே குடிபோகச்செய்யும் (ஆமோஸ் 5:26-27). வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து அவர்களை துரத்தும் இச்செயலானது தேவனின் மற்றொரு சர்வ இறையாண்மையுள்ள செயலாக இருந்தது. “நான் உங்களை…அப்பாலே குடியாட்டுவேன்” (ஆமோஸ் 5:27).
இருப்பினும், நேர்மறையான காரியங்களை அறிவிக்கும் கடைசி காலத்தைப் பற்றிய இரண்டு அம்சங்கள் இங்கு இருக்கின்றன. இவற்றில் முதாலாவது அம்சம் என்னவென்றால், விழுந்து போன தாவீதின் கூடாரத்தைப் பற்றிய வசனங்கள் (ஆமோஸ் 9:11-12). தாவீதின் குடும்பம் இஸ்ரவேல் மற்றும் யூதா வரலாற்றுகளில் மிக முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. நலிந்த நிலையில் காணப்பட்ட தாவீதின் கூடாரம் இறுதியில் சீரமைத்து மாற்றப்பட்டு புறஜாதிகளும் அதில் பங்குள்ளவர்களாகும்படியாக இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது. எருசலேமின் ஆலோசனை சங்கத்தில் யாக்கோபு வின் பிரசங்கத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவ்விளக்கத்திற்கு ஆதரவாயிருக்கிறது (அப் 15:16-17). புதிய ஏற்பாட்டின் திருச்சபையில் புறஜாதிகளின் இணைப்பானது , ஆமோசின் ஊழியத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட தேவ நோக்கத்தின் நிறைவேறுதலாக உள்ளது.
இரண்டாவது அம்சம் என்னவென்றால், தேவன் தனது மக்களை புதிய ஏதேனில் நிலைநாட்டப்போகிறார். முக்கியமான காரியம் என்னவென்றால், இஸ்ரவேலின் பாவங்கள் அங்கு இருந்தாலும், தேவன் அவர்களை தள்ளிவிடவில்லை. அவர் தமது மக்களின் நன்மைகளை மீண்டும் கொண்டுவருவார், சிதறடிக்கப்பட்ட தேவனுடைய மக்கள் அவரின் நித்திய ராஜ்யத்தில் ஒன்றுக்கூட்டப்படுவார்கள் என்ற கடைசி கால நிகழ்வே மாபெரும் நன்மையாகும். இப்புத்தகத்தில் இறுதி வார்த்தைகளானது, உடன்படிக்கையின் ஐக்கியத்தை மீண்டும் உறுதிப்படுத்தி அவர்களது தேவன், உடன்படிக்கையின் கர்த்தராக இருந்து, தமது சித்தத்தை அவர்களுக்காக நிறைவேற்றுவார் என உறுதியளிக்கிறது. (இங்கு உடன்படிக்கையின் தேவன் “யெகோவா” என்றிருப்பதை கவனிக்கவும்”) (ஆமோஸ் 9:11-15).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


