
நீதிமொழிகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
25-03-2025
ஆபகூக் புத்தகம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
01-04-20251, 2, 3 யோவான் புத்தகங்களிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய காரியங்கள்

வேதாகமம் முழுவதுமாக அநேக ரத்தினங்கள் மறைந்து கிடக்கின்றன. அப்படி மறைக்கப்பட்ட ரத்தினங்களில் பல வேதாகமத்தின் சிறிய புத்தகங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. தேவனுடைய வார்த்தையை அதி தீவிரமாக படிக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூட அதன் “பெரிய புத்தகங்களிலேயே” (ஆதியாகமம், சங்கீதம், ஏசாயா, யோவானின் நற்செய்தி, ரோமர் மற்றும் எபேசியர் போன்றவை) நன்றாக பரீட்சையப்பட்டிருக்கிறார்கள். மாறாக யோவேல், ஆகாய், செப்பனியா மற்றும் யோவானின் மூன்று நிருபங்கள் போன்ற சிறு புத்தகங்களை பெரும்பாலானோர் நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
இந்த சுருக்கமான தியானத்தில், யோவானின் மூன்று நிருபங்களைப் பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.
1. இந்தப் புத்தகங்கள் மிக சிறிதாக இருந்தாலும், ஒவ்வொரு கிறிஸ்தவனின் ஆத்தும வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் இவைகள் முக்கிய பங்கு வகுக்கின்றன.
முந்தையகால கிறிஸ்தவர்களை போல இன்றைய தலைமுறையினரும் வேதத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு என்பதை என்னுடைய 40 ஆண்டுகால போதக ஊழியத்திற்கு பிற்பாடு நான் கற்றுக் கொண்டேன். வேதஅறிவு மற்றும் வேத வியாக்கியான பிரசங்கம் கடந்த காலங்களில் இருந்ததைப் போல இன்றைய காலங்களில் உயர்வாக காணப்படுவதில்லை. உண்மையான விசுவாசிகளின் பரவலான வேதபார்வையும் கூட இவ்வுலகத்தின் ஆவியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசையும்கூட வேத வியாக்கியான பிரசங்கத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தாமல் தலைப்பு சார்ந்த பிரசங்கங்களுக்கு (Topical Preaching) இட்டு செல்கிற பரிதாபமான நிலைமையையே பெரும்பாலும் இன்றைய நாட்களில் பார்க்கிறோம். மேற்சொல்லிய காரியங்கள் அனைத்தும், எல்லா சத்தியங்களையும் உள்ளடக்கிய வேதாகமத்தின் பரந்த மற்றும் ஆழமான தேவனுடைய வார்த்தையைப் பற்றிய அறிவின் மேன்மைகளை விசுவாசிகளிடமிருந்து பறித்துவிட்டன.
பவுல் தீமோத்தேயுவுக்கு, “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது” என்று நினைப்பூட்டி எழுதுகிறார் (2 தீமோ. 3:16–17). தேவஆவியினால் அருளப்பட்ட இந்த வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அது தீமோத்தேயுவினுடைய வாழ்க்கையையும், ஊழியத்தையும் வடிவமைக்க வேண்டும் என்பதற்காக, தேவனால் அழைக்கப்பட்ட இந்த வாலிபனுக்கு உன்னதமான இந்த சத்தியத்தை இங்கே பவுல் ஆழமாக சொல்லுகிறார். தீமோத்தேயுவிற்கு எது அவசியமாக காணப்பட்டதோ அது நமக்கும் மிக அவசியம். ஆகவே, நாம் வேத வார்த்தையின் நீதியில் பயிற்றுவிக்கப்பட்டு, முழுமையான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கும், ஒவ்வொரு நற்கிரியைகளுக்கும் தகுதியுள்ளவர்களாக காணப்படும்படியாகவும் , 1, 2, 3 யோவான் புத்தகங்களை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாயயிருக்கிறது.
2. யோவானின் இந்த மூன்று நிருபங்களும், திருச்சபையினுடைய பரிசுத்தம், சமாதானம் மற்றும் திருச்சபையின் ஊழியங்களை அச்சுறுத்தும் கள்ளப்போதனைகளின் கொள்கைகளுக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்றாகும்.
இவ்வகையான கள்ளப்போதனைகள் யோவானின் காலகட்டத்தில் காணப்பட்ட புதிதான ஒன்றல்ல. வரலாறுதோறும் கிறிஸ்துவின் திருச்சபையைத் சுவிசேஷத்திலிருந்து தடம்புரளச் செய்யவும், அதைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளவும், அதன் நற்செய்தியின் நம்பகத்தன்மையைப் பறிக்கவும் சாத்தான் இந்த தவறான போதனைகளை தொடர்ந்து திருச்சபைகளில் உயிரடைய செய்கிறான். ஆகவே யோவான் தனது முதல் நிருபத்தை இவ்விதமாக ஆரம்பிக்கிறார்.
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கிய பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவம் இல்லை என்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராய் இருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லை என்போமானால் நாம் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருப்போம் அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் 1:5–10)
“என்போமானால்” என்ற பதமானது இந்தப் பகுதியில் மூன்று முறை உபயோகப்படுத்தி இருப்பதை கவனியுங்கள். ” (1 யோவான் 1:6, 8, 10). இப்படி அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுவதற்கான அவசியம் என்ன? ஏனென்றால், திருச்சபையில் சிலர் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டு இருளில் நடக்கிறவர்களாயிருந்தார்கள். பின்னர் 1 யோவான் 2:19-ல், “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை;” என்று யோவான் எழுதுகிறார். ஒரு உண்மையுள்ள போதகனாக, யோவான் அவர்களை “ என் அன்பான பிள்ளைகளே”, என்றழைத்து, அவர்களுடைய பாதுகாவலனாக இருந்து, கள்ள போதனைகளுக்கு ஜாக்கிரதையாக இருக்குமாறு அவர்களை எச்சரிக்கிறார்“. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேணும் இருளில்லை” (1 யோவான் 1:5; 1 யோவான் 2:22; 4:1–3ஐயும் பார்க்கவும்).
2 மற்றும் 3 யோவானில், தனது அன்பான பிள்ளைகளை பாவத்திலிருந்து பாதுகாத்து, அவர்களை மேய்ப்பதில் அப்போஸ்தலனாகிய யோவான் காட்டிய அக்கறையை நாம் அதிகமாக பார்க்கலாம். 2 யோவான் 7-ல் அவர் இவ்விதமாக எழுதுகிறார் : “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேக வஞ்சகர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்தி கிறிஸ்துவமாயிருக்கிறான்.” 3 யோவான் 9-ல், யோவான் தனது அன்பான பிள்ளைகளே என்று கூறி, ஒரு குறிப்பிட்ட மனிதனைப் பற்றி “தியோத்திரேப்பு . . . முதன்மையாயிருக்க விரும்புகிறவன்.” என்று எச்சரிக்கிறார். தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையை அழிப்பதில் தவறான குணநலன்கள் எவ்வளவு ஆபத்தானதோ, அதைப்போலவே கள்ள போதனைகளும் மிகுந்த ஆபத்தானவை என்பதை யோவான் நன்றாக அறிந்திருந்தார்.
3. யோவானுடைய மூன்று நிரூபங்களும் சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய ஒவ்வொரு ஊழியனிடமும், ஏன் ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனிடமும் காணப்பட வேண்டிய அன்பு, மனதுருக்கம் மற்றும் தைரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
தேவனை கனப்படுத்தி மற்றும் மந்தையின் ஆடுகளை போஷித்து ஈடேறச்செய்யும் ஊழியமானது, ஆதி முதற்கொண்டே இருந்த சத்தியத்தை தெளிவாக மட்டுமல்ல மனதுருக்கம், தைரியம் மற்றும் மென்மையான இருதயத்தோடு பிரசங்கத்தின் மூலமாக எடுத்துரைப்பதே அதனுடைய ஆணிவேராயிருக்கிறது. யோவான் தனது வாசகர்களை பலமுறை “சிறு பிள்ளைகளே” என்று விரிவாக எடுத்துரைத்து அழைப்பது நம்மை மிகவும் வியப்படையச்செய்கிறது (1 யோவான் 2:1, 12, 28; 3:18; 4:4; 5:21). யோவானுடைய போதகம் திருச்சபை மக்கள் மீதான அன்பின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இப்படியாக தங்களுடைய இருதயங்களில் சபைமக்களை அன்புகூர்ந்து, தங்கள் ஜீவனைவிட அவர்களை நன்றாக போஷிக்க வேண்டுமென்கிற உணர்வோடிருக்கிற போதகர்களை சபைமக்கள் அறிந்து, உணர்ந்து கொண்டால் அது எவ்வளவு பெரிய வித்தியாசத்தை நம்முடைய திருச்சபைகளில் ஏற்படுத்தும்.
யோவானுடைய இந்த மூன்று நிரூபங்களும் சுவிசேஷத்தினுடைய ரத்தினங்களாக திகழ்கின்றன. எனவே நீங்கள் தொடர்ந்து இவற்றை படித்து ஆழமாக சிந்தித்து, கூடுமானமட்டும் அவைகளை மனனம் செய்வீர்களானால் இவைகள் உங்களை தேவனுடைய கிருபையில் தொடர்ந்து வளர்ந்து பெருகும்படி செய்யும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.