Why-Does-Baptism-Matter
ஞானஸ்நானம் ஏன் அவசியம்?
26-08-2025
Why-Does-Baptism-Matter
ஞானஸ்நானம் ஏன் அவசியம்?
26-08-2025

கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்

Why-Is-Baptism-a-Means-of-Grace

ஏன் ஞானஸ்நானம் ஒரு கிருபையின் சாதனம்?

  • Rev. நிக்கோலஸ் டி. பாட்ஸிக் 

Why Is Baptism a Means of Grace? – Rev.Nicholas T. Batzig

முனைவர் ஜான் ஜெர்ஸ்ட்னர் அவர்களிடம் ஒரு கிறிஸ்தவ குடும்பம் தங்கள் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டனர். அந்த நிகழ்விற்கான நேரம் நெருங்கியபோது, குழந்தையின் தாய்,  ஞானஸ்நான ஆராதனைக்காக குழந்தைக்கு ஒரு வெள்ளை அங்கி கிடைக்கும்வரை அந்த சடங்கை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்டார். வெள்ளை அங்கியின் முக்கியத்துவம் என்ன என்று ஜெர்ஸ்ட்னர் அந்த தாயிடம் கேட்டார். அதற்கு அக்குழந்தையின் தாய், “குழந்தையின் தவறறியா  தன்மையைக் குறிக்க” என்று பதிலளித்தார். அதற்கு ஜெர்ஸ்ட்னர், “குழந்தை தவறு அறியாத தன்மையில்  இருக்கும்போது, நாம் ஏன் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் ?” என்று கேட்டார். இந்தச் சம்பவம் பொதுவாக மக்களிடம் ஞானஸ்நானத்தின் தன்மையைப் பற்றிய பரவலான குழப்பமான சூழ்நிலை நிலவுவதை  காட்டுகிறது.

ஞானஸ்நானத்தை ஒரு சடங்காக மட்டுமே பலர் பார்க்கின்றனர். வேறு சிலர் ஞானஸ்நானத்தின் இந்த வெளிப்படையான  செயலுக்கு அதிக வல்லமை  இருப்பதாகவும், அதன் மூலமாக இரட்சிக்கும் கிருபையை அவர்கள் அடைகின்றனர் எனவும் கருதுகிறார்கள். உண்மையென்னவென்றால், ஞானஸ்நானம் ஒரு எளிமையான மற்றும் சிக்கலான செயலாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. இது திரித்துவத்தின் பெயரில் செய்யப்படும் ஒரு வெளிப்பிரகாரமான சடங்கு சார்ந்த சுத்திகரிப்பாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் சீஷத்துவத்தின் அடையாளமாக கொடுக்கப்பட்டிருப்பதால்  இது எளிமையானது. ஆனால் அதன் தன்மை, அதன் பொருள் மற்றும் அது செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது  இது சற்று சிக்கலானதே. ஞானஸ்நானம் எவ்வாறு தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படுகிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள, நாம் முதலில் ஞானஸ்நானத்தின் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பழைய உடன்படிக்கையான கிருபையின் உடன்படிக்கைக்கு அடையாளமாக மற்றும் முத்திரையாக விருத்தசேதனம் கொடுக்கப்பட்டதை போலவே (ரோமர் 4:11), ஞானஸ்நானமும் கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் தேவனால் வாக்குபண்ணப்பட்ட நீதிக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது. இது வாக்கு பண்ணப்பட்ட  பரிசுத்த ஆவியினால் நிகழும் மறுபிறப்பு மற்றும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படுதல் போன்றவற்றிற்கு அடையாளமாகவும் செய்யப்படுகிற ஒன்றாகும். விசுவாசிகளுக்கும், அவர்களுடைய  பிள்ளைகளுக்கும் தேவன் தாமே வாக்குபண்ணின மேற்கண்ட சத்தியத்திற்கு முத்திரையாகவும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஞானஸ்நானம் என்பது தேவனுடைய உடன்படிக்கைக்கு முத்திரையாகவும் மற்றும் அவருடைய தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட அடையாளமாகவும் காணப்படுகிறது. இதுவே, ஞானஸ்நானத்தை கிருபையின் சாதனமாக நிலைநிறுத்துகிறது.

ஞானஸ்நானத்தை கிருபையின் ஒரு சாதனமாகக் நாம் கருதும்போது, அதை ஒரு தெய்வீக செயலாக  முதலில் அங்கீகரிக்க வேண்டும். புதிய உடன்படிக்கையில் திரியேக தேவன் இந்த அடையாளத்தையும், முத்திரையையும் தன்னுடைய ஜனங்களுக்கு பயன்படுத்துகிறார். முதலாவதாக மற்றும் மிக முக்கியமாக, அநேகர் ஞானஸ்நானத்தை, தாங்கள் செய்த ஒரு செயலின் அடையாளமாக (அதாவது, கிறிஸ்துவின் மீதான தங்களுடைய தனிப்பட்ட விசுவாசத்தின் ஒரு அடையாளமாக) தவறாகப் பார்க்கின்றனர். அதற்கேற்ப, பலர் ஞானஸ்நானத்தை “உள்ளான விசுவாசத்தின் வெளிப்படையான அடையாளம்” என்று குறிப்பிடுகின்றனர். விசுவாசிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து சீஷத்துவத்தின் அடையாளமாக ஞானஸ்நானத்தைப் பெற்றாலும் (மத்தேயு 28:18–20; 1 கொரி. 7:14), இந்த உடன்படிக்கையின்  அடையாளமானது மிகப் பிரதானமாக, முதலாவது நாம் செய்த ஒரு  காரியத்தை குறிக்கவில்லை. மாறாக, இது ஆவியானவர் மூலம் கிறிஸ்துவுக்குள் தேவன் வாக்குபண்ணின அவருடைய செயலை குறிக்கிற ஒன்றாகும். ஞானஸ்நானம் எவ்வாறு கிருபையின் சாதனமாகச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள இவ்விதமான உறுதியான சிந்தனைப் போக்கு இன்றியமையாதது.

 புதிய உடன்படிக்கையின் ஒரு கூட்ட மக்களை  சேர்ப்பதற்கான  அடையாளமாக ஞானஸ்நானம் காணப்படுகிறது. ஒவ்வொரு நபரும்  ஞானஸ்நானத்தின் அடையாளத்தைப் பெறும்போது, தேவன் அவர்களை வெளிப்படையான திருச்சபையின் அமைப்பிற்குள் கொண்டு வருகிறார். இதன் மூலம், அவர்கள் உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தை, திருவிருந்து மற்றும் திருச்சபையின் ஒழுங்கிற்கு கீழாக ஒன்றாக வாழும்படியாக, தேவனை ஆராதிக்கும் ஒரு கூட்டத்திற்குள் அங்கத்தினர்களாக மாற்றப்படுகிறார்கள். ஞானஸ்நானத்தைப் பெறுகிற அனைவரும் இந்த அடையாளத்திலும், முத்திரையிலும் இருக்கக்கூடிய கிருபையைப் பெற்றிருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. ஏனெனில் ஒருவர் ஞானஸ்நானத்திற்கான அடையாளத்தை பெற்றிருந்தும் அது கொடுக்கப்பட்ட நோக்கத்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. சீமோன் என்னும் மந்திரவாதியின் சம்பவத்திலிருந்து இது நமக்கு தெளிவாகிறது (அப். 8:9–24). இருப்பினும், புதிய உடன்படிக்கையோடு இணைந்துள்ள கர்த்தருடைய இராப்போஜன பந்தியை போலவே ஞானஸ்நானத்தையும் ஒரு வெளிப்பிரகாரமான அடையாளமாக நாம் கருதிவிடக்கூடாது. ஆகவே அது தகுதியுள்ளவர்களுக்கு—அதாவது, தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு—தேவனுடைய கிருபையை  உண்மையாகவே அளிக்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (28.6) கூறுவது போல,

ஞானஸ்நானத்தின் பயன்பாடானது, அது செய்யப்படும் குறிப்பிட்ட காலத்துக்குட்பட்டதல்ல; இருப்பினும், இதை கிரமமாக, சரியாக பயன்படுத்துவதன் மூலமாக,  வாக்கு பண்ணப்பட்ட கிருபையை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், தேவனுடைய சித்தத்தின்படி, அவர் நியமித்த நேரத்தில், அந்த கிருபைக்குத் தகுதியுள்ளவர்களுக்கு (வயது வந்தவர்களுக்கும் அல்லது குழந்தைகளுக்கும்) பரிசுத்த ஆவியினால் உண்மையாகவே வெளிப்படுத்தப்பட்டு, அதனுடைய பலன்களானது வழங்கப்படுகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் குழுவின் இறையியல் வல்லுநர்கள் ஞானஸ்நானத்தின் பயன்பாடு குறித்த இந்த கோட்பாட்டை உருவாக்கும்போது  சில முக்கிய  எச்சரிப்புகளையும்  கொடுத்துள்ளனர். முதலாவதாக, ஞானஸ்நானத்தின் பயன்பாடானது அது எடுக்கப்படும் நேரத்துக்குட்பட்டதல்ல  என்று அவர்கள் விளக்குகிறார்கள். அதேபோல் திருவிருந்துகளில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் தாங்களாகவே அந்த கிருபையை பெற்றுக் கொள்வதில்லை. இரண்டாவதாக, ஞானஸ்நானத்திற்குரிய சடங்குகளால் வரும் கிருபையும் பரிசுத்த ஆவியானவருடைய செயலின் மூலமாகவே நமக்கு கொடுக்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவரும் தம்முடைய இறையாண்மையின் அடிப்படையில், ஆத்தும மறுபிறப்பையும், வெளிச்சத்தையும் தராவிட்டால், தேவனுடைய வார்த்தை மற்றும் திரு நியமங்களால் வரும் பிரயோஜனத் தன்மையை ஒருவரும் பெற்றுக்கொள்ள முடியாது. மூன்றாவதாக, ஞானஸ்நானத்தின் பிரயோஜன தன்மையானது “அந்தக் கிருபைக்குரியவர்களுக்கு (வயது வந்தவர்களுக்கும் அல்லது குழந்தைகளுக்கும்) மட்டுமே” கொடுக்கப்படுகிறது. அதாவது தேவனுடைய கிருபையானது, அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே திருநியமங்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது என்று வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு கிருபையின் சாதனமாக, ஞானஸ்நானத்தினுடைய பிரயோஜனத் தன்மையை, பரிசுத்த ஆவியானவருடைய மறுபிறப்போடு, அவருடைய இறையாண்மையின் அடிப்படையில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். இது ஒரு தனிநபரின் வாழ்வில் “வயது வந்தவராக அல்லது குழந்தையாக” இருக்கும்போது நிகழலாம். இருப்பினும், அந்த மறுபிறப்பு, தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் இருதயங்களில், தேவனுடைய ஆவியானவருடைய இலவச மற்றும் தகுதியற்ற  செயலினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் கொடுக்கப்படுகிறது. ஒரு நபர் குழந்தையாக இருக்கும்போது  திரியேக தேவனுடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், அந்த ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் தங்களுடைய வளர்ந்த நிலையை அடையாத வரையிலும்  இரட்சிக்கும் விசுவாசத்தையோ அல்லது மனந்திரும்புதலுக்குள்ளோ இன்னும் வராதவர்களாகவே என்னப்படுவார்கள். மேலும் அவர்களுடைய ,,”மனந்திரும்புதலின் போதுதான் ஞானஸ்நானம் பயனுள்ளதாயிற்று” என்று சொல்லுவது  சரியானதாக இருக்கும்.  மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் காரணமாக அல்ல, மாறாக, அவர்களுடைய ஆத்துமாவிற்காக, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பலாபலன்களை உட்புகுத்தும் தேவனுடைய ஆவியின் கிருபையுள்ள செயலினாலேயே அவர்கள் ஞானஸ்நானத்தினுடைய பிரயோஜனத் தன்மையை அடைகிறார்கள்.

இந்தக் கட்டுரை கிறிஸ்தவ சீடத்துவத்தின் அடிப்படைகள் என்ற தொகுப்பின் ஒரு பகுதி.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

நிக் பாட்ஜிக்
நிக் பாட்ஜிக்
அருட்தந்தை நிக்கோலஸ் டி. பாட்ஜிக், தென் கரோலினாவின் சார்லஸ்டனில் உள்ள சர்ச் க்ரீக் பிரஸ்பைடிரியனின் மூத்த போதகர் ஆவார்.