How-Is-Jesus-the-Bread-of-Life
இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?
15-07-2025
How-Is-Jesus-the-Bread-of-Life
இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?
15-07-2025

இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்?

How-Is-Jesus-the-Good-Shepherd

இயன் ஹேமில்டன்
(How Is Jesus the Good Shepherd?)

இந்த மகத்துவமான கேள்விக்கான பதில் இதுதான்: இயேசு நல்ல மேய்ப்பன் காரணம் அவரே அதை கூறியுள்ளார். யோவான் சுவிசேஷத்தில், “நானே நல்ல மேய்ப்பன்” என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 10:11). இந்த காரியத்தை அங்கேயே விட்டுவிட்டு, “உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்” என்று தம்மை குற்றம் சாட்டுபவர்களிடம் இயேசு கேட்கக்கூடிய கேள்வியில் நாம் திருப்தியடையலாம் (யோவான் 8:46). இயேசு சத்தியத்தைப் பேசியது மட்டுமல்லாமல், நான்தான் அந்த சத்தியம் என்றும் பேசினார் (யோவான் 14:6). இருப்பினும், ஆதாரங்கள் இல்லாத கூற்றுக்களை ஒருபோதும் இயேசு பேசவில்லை. யார் வேண்டுமானாலும் தங்களைப் பற்றி உயர்வான, ஆடம்பரமான கூற்றுக்களை முன்வைக்கலாம். ஆனால், அந்த கூற்றுகள் உண்மையானவைகளா அல்லது சுய கற்பனைகளா என்பதை உறுதிப்படுத்த அவைகள் சோதிக்கப்படவேண்டும். 

“நானே நல்ல மேய்ப்பன்” என்று இயேசு சொல்லும்போது,”நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11) என்ற அவரின் இந்த வார்த்தையின் மூலமாக அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என்றும் மற்றும் இவை அவரின் கூற்றுக்கு ஆதரவாகவும் உள்ளது. 

இயேசுவின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மேய்ப்பன் மற்றும் ஆடுகளின் மேய்ச்சல் மனப்பான்மை நன்கு தெரிந்திருந்தது. மேய்ப்பர்களும் ஆடுகளும், எங்கும் நிறைந்திருந்த இடத்தில்தான் இவர்கள் வாழ்ந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தேவன் விசுவாசிகளான தம்முடைய ஆடுகளை ஆழமாக கவனித்து, பராமரிக்கும் ஓர் மேய்ப்பனுக்கு ஒப்பிடப்படுகிறார் என்பதையும் வேத வசனங்களிலிருந்து அவர்கள் அறிந்தார்கள். சங்கீதம் 23, தேவன் ஓர் மேய்ப்பனாக, விலையேறப்பெற்ற தமது ஆடுகள் மீது செலுத்துகிற தமது பராமரிப்பை மிக தெளிவாகவும், நினைவுகூறும் வண்ணமாகவும் இச்சங்கீதம் நமக்கு காண்பிக்கிறது:

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். 

 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். 

சங்கீதம் 23:1-6

இந்த சங்கீதத்தை நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வாசித்தும், எனது நாற்பது வருட ஊழிய வாழ்க்கையில் சுமார் எழுநூறுக்கும் மேற்ப்பட்ட முறை அடக்க ஆராதனையிலும் இதை குறிப்பிட்டுள்ளேன். இந்த வசனங்கள் பராமரிப்பையும், இரக்கத்தையும், கவனிப்பையும், பாதுகாப்பையும், மற்றும் பரலோக மேய்ப்பன் தன் ஆடுகள் மீது கொண்டுள்ள மேன்மையான அன்பையும் அழகாக நமக்கு காண்பிக்கிறது. ஏன் தேவன் நல்ல மேய்ப்பர் என்பதை இந்த சங்கீதம் எடுத்துக்காட்டுகிறது. 

“நானே நல்ல மேய்ப்பன்” என்று இயேசு கூறும்பொழுது, ஓர் திடுக்கிடும் உண்மையை அவர் முன்வைக்கிறார். தாம் மாம்சத்தில் வந்த தேவன் என்றும், தனது ஆடுகளை நேசித்து, பராமரித்து பாதுகாக்கும் மேய்ப்பன் என்றும் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவர் உண்மையில் எவ்வாறு நல்ல மேய்ப்பராக உள்ளார் என்பதை மிகவும் குறிப்பிடத்தக்க வழிகளில் எடுத்துக்காட்டுகின்றது: “நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”

காணாமற்போன, நியாயத்தீர்ப்புக்கு தகுதியான ஆடுகள் தேவனின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும், அந்த ஆடுகள் அவரது ஐக்கியத்திலும், உறவிலும் மீட்டெடுக்கப்படவும், ஒருநாள் அந்த ஆடுகள் அவரது பிரசன்னத்தில் காணப்படவும், பரலோகத்தால் அனுப்பப்பட்ட இந்த மேய்ப்பன் அன்பினால் தம்மைத்தாமே பலியாக்கினார்.

தம்முடைய ஆடுகளின் நித்திய நன்மையை பாதுகாக்க தம்முடைய ஜீவனைக் கொடுத்தார் என்பதில் விட, தான் நல்ல மேய்ப்பன் என்ற சத்தியம் வேறெங்கும் அற்புதமாகவும், வியக்கப்படத்தக்கதாகவும் காண்பிக்கப்படவில்லை. 

ஒருமுறை மார்ட்டின் லூத்தர் இவ்வாறு கூறினார், “Crux probat omnia” அதாவது “சிலுவையே எல்லாவற்றிற்குமான பரிசோதனை.” அதாவது, கல்வாரியில் பாவத்தை சுமந்து, பாவ பரிகார பலியாக மரித்த கிறிஸ்துவின் மரணமே, பாவிகள் மீதான தேவ அன்பின் முழுமையான வெளிப்பாடாகும். நமது முதல் தலையான ஆதாமுக்குள் நாமனைவரும், வீழ்ச்சியுற்று, தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு, அவரது நீதி மற்றும் நியாயத்தீர்ப்புக்கு கீழாக கொண்டுவரப்பட்டுள்ளோம். தேவனுக்கும் நமக்கும் இடையே ஒப்புரவாகுதலை கொண்டுவர நாம் எதையும் செய்ய முற்றிலுமாக பெலனற்று உள்ளோம். ஆனால் நம்மால் எதைச் செய்ய பெலனற்று உள்ளோமோ, அதை செய்து முடிப்பதற்கு தேவன் தமது சொந்தக் குமாரனை அனுப்பி நமக்கு பதிலாக நமது பாவத்தின் மீதான நியாயத்தீர்ப்பை அவர் சுமந்து, மரித்து, நம்மை தேவனோடு ஒப்புரவாக்குவதற்காக மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்து வெற்றிச் சிறந்தார். 

எனவே, எவ்வாறு இயேசு நல்ல மேய்ப்பனாக உள்ளார்? காணாமற்போன, நியாயத்தீர்ப்புக்கு தகுதியான ஆடுகள் தேவனின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும், அந்த ஆடுகள் அவரது ஐக்கியத்திலும், உறவிலும் மீட்டெடுக்கப்படவும், ஒருநாள் அந்த ஆடுகள் அவரது பிரசன்னத்தில் காணப்படவும், பரலோகத்தால் அனுப்பப்பட்ட இந்த மேய்ப்பன் அன்பினால் தம்மைததாமே பலியாக்கினார்.

இங்கு நான் ஒரு கேள்வியை உங்களிடம் முன்வைக்கிறேன். இந்த நல்ல மேய்ப்பனிடம், மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் நீங்கள் வந்துள்ளீர்களா? தம்முடைய சொந்த குமாரனையே அவர் தப்புவிக்காமல் உங்களது இடத்திலும், உங்களுக்காகவும் மரிக்கும்படி சிலுவை மரணத்திற்கு அவரை ஒப்புக்கொடுத்ததற்காக பிதாவாகிய தேவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா? இயேசு சொல்கிறார்:

“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. 

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.”

யோவான் 10:27-30

சுவிசேஷத்தில் அவரது சத்தத்தை நீங்கள் கேட்டீர்களா? வெறுமனே உங்கள் வாயினால் அவரை அறிக்கை செய்வதில் மாத்திரமல்ல, மெய்யாகவே உங்களது வாழ்வில் அவருக்கு கீழ்ப்படிகிறீர்களா? அப்படியென்றால், அவரால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டவர்களாய், அவரது இரத்தத்தினால் மீட்கப்பட்ட ஆடுகளாய் அவரில் களிகூருங்கள்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

இயன் ஹாமில்டன்
இயன் ஹாமில்டன்
டாக்டர் இயன் ஹாமில்டன் இங்கிலாந்தின் நியூகேஸில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பிரஸ்பைடிரியன் இறையியல் கருத்தரங்கின் தலைவராகவும், தென் கரோலினாவின் கிரீன்வில்லில் உள்ள கிரீன்வில் பிரஸ்பைடிரியன் இறையியல் கருத்தரங்கில் துணைப் பேராசிரியராகவும் உள்ளார். அவர் சிலுவையிலிருந்து வரும் வார்த்தைகள், நமது பரலோக மேய்ப்பர், மற்றும் புதிய ஏற்பாட்டில் எபேசியர் பற்றிய விளக்கவுரை உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர்.