
ஆமோஸ் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
18-03-2025
நீதிமொழிகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
25-03-2025யோபு புத்தகத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்

1. யோபு புத்தகம் ஒரு புறஜாதி முற்பிதாவை பற்றிய ஒரு பழங்கால புத்தகமாக திகழ்கிறது.
யோபு புத்தகம் பழைய ஏற்பாட்டின் எஸ்தர் மற்றும் சங்கீத புத்தகங்களுக்கு இடையில் இடம் பெற்றுள்ளது. இப்படி இடம் பெற்றிருப்பதால், சில சமயங்களில் யோபு யார், அவர் எப்போது வாழ்ந்தார் என்பது பற்றிய தவறான சிந்தனைக்கு நேராக நம்மை வழிவகுக்கிறது.
முதலாவதாக, யோபு ஒரு இஸ்ரவேலன் அல்ல என்பதை பெரும்பாலான வேத வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர் கானான் தேசத்தில் வாழாமல் ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்து இருந்தார் என்பதனாலேயே தான் (யோபு 1:1). புலம்பல் தீர்க்கதரிசன புத்தகம் ஏதோமை, ஊத்ஸ் தேசத்துடன் இணைத்துப் பேசுவதால், யோபு ஏதோம் தேசத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது (புலம். 4:21). யோபு ஒரு இஸ்ரவேலன் இல்லையென்றாலும், அவர் இஸ்ரவேலின் தேவனையே ஆராதித்து, அவரை சேவித்து வந்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுகிறது. யோபு இஸ்ரவேலுக்கு வெளியே வாழ்ந்ததினால், நீதிமொழிகள் புத்தகத்தை போலவே, யோபு புத்தகத்தின் அடிப்படை சத்தியங்களும் உலகளாவிய, பரந்த தன்மை உடையதாகவும், எல்லா மனிதர்களும் சந்திக்கக்கூடிய போராட்டங்களை (பாடுகள் போன்றவை) பற்றியும் அது விவரித்து பேசுகிறது.
இரண்டாவது யோபு புத்தகத்தை பற்றிய தவறான கருத்து என்னவென்றால், யோபு புத்தகத்தின் நிகழ்வுகளின் காலமும் எஸ்தர் புத்தகத்தின் (கிமு 486–485) நிகழ்வுகளின் காலமும் ஒத்துப் போகாமலிருப்பதே. மாறாக, யோபு புத்தகத்தின் காலமானது ஆபிரகாமின் காலகட்டத்துடனும், கோத்திரப் பிதாக்களின் காலகட்டத்துடனும் (தோராயமாக கி.மு. 2100–1800) ஒத்துப் போகிறது. உண்மையில், யோபு, ஆபிரகாமின் உடன்படிக்கைக்கு முந்தினவர் என்று பல வேத இறையியாளர்களும் நம்புகிறார்கள். முற்பிதாக்களின் காலகட்டத்தில் யோபு வாழ்ந்தார் என்ற கருத்தை ஆதரிக்கும் வண்ணமாக பல காரணங்களும் உள்ளன. முதலாவதாக, யோபுவின் புத்தகத்தில், தேவனுடைய நாமத்தை குறிக்கும் பெயர்களானது முற்பிதாக்களின் காலகட்டத்தை சேர்ந்த புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே உள்ளதை பார்க்கலாம். இரண்டாவதாக, யோபுவின் சொத்துக்களை பற்றின விளக்கமும் (அதாவது, கால்நடைகளின் எண்ணிக்கை, அடிமையான வேலைக்காரர்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்றவை) முற்பிதாக்களின் காலகட்டத்துடன் ஒத்துப்போவதை பார்க்கலாம். மூன்றாவதாக, யோபுவின் 140 ஆண்டுகள் ஆயுட்காலமானது (யோபு 42:16) முற்பிதாக்களின் ஆயுட்காலங்களுடன் ஒத்துப்போவதையும் பார்க்கலாம். நான்காவதாக, யோபு தனது குடும்பத்திற்கு அதிக ஜாக்கிரதையுடன் ஒரு ஆசாரியனாகவும் இருந்து செயல்படுகிறார், ஆதலால் அதனடிப்படையில் பார்க்கும்போது லேவியருடைய ஆசாரிய ஊழியம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் (யோபு 1:5).
2. யோபு புத்தகம் தேவன் தனது அனந்த ஞானத்தின்படி உயரிய நோக்கத்திற்காக நீதிமான்கள் துன்பப்படும்படி அனுமதிக்கிறார் என்று நமக்குக் கற்பிக்கிறது.
பெரும்பாலும், மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திற்கான ரகசியத்தை அறிந்து கொள்வதற்காக யோபு புத்தகம் உதவுவதாக அநேகர் நினைப்பதுண்டு. ஆனால் அது சரியான சிந்தனை போக்கல்ல. இருப்பினும், யோபு ஏன் உபத்திரவபட்டார் என்பதை அது நமக்கு விளக்குகிறது (யோபுவும் தன்னுடைய துன்பத்திற்கான காரணம் இன்னது என்பதை அறியாமலேயே இருந்தார்). யோபு தேவனை உண்மையாக ஆராதித்ததற்கான ஒரே காரணம் யோபினுடைய கையின் கிரியைகளை எல்லாம் தேவன் ஆசீர்வதித்ததால் மட்டுமே என்று சாத்தான் தேவனிடத்தில் வாதிட்டதினாலேயே யோபு உபத்திரவபட்டார் என்று நாம் அறியலாம். தேவன் தந்த இந்த ஆசீர்வாதங்களை நீக்கினால், யோபு தேவனுடைய நாமத்தை தூஷிக்கானோ பாரும் என்று சாத்தான் தேவனிடத்தில் சவால் விட்டதையும் பார்க்கிறோம். (யோபு 1:9–11). தேவன், தனது முழுமையான சர்வ ஏகாதிபத்தியத்தின்படி, சாத்தான் தன்னுடைய கருத்துக்களை பரிசோதித்து அறியவும், மேலும் அப்படி பரிசோதித்து தன்னுடைய கருத்துக்கள் தவறு என்று சாத்தான் தன்னை பற்றி அறிந்து கொள்ளும்படியாகவும், தேவன் மற்றும் யோபு ஆகிய இருவருடைய சிந்தனைகளும் சரியானவைகளே என்று மெய்ப்பித்து காட்டும்படியாகவும் எல்லாவற்றையும் தேவன் செயல்படுத்துகிறார். தேவன் தான் யாராக இருக்கிறாரோ அதுவே அவரை ஆராதிப்பதற்கு போதுமானது என்று தன்னையும் , மேலும் எவ்விதமாக உண்மையான தேவபக்தியுள்ள மனிதனாக யோபுவும் இருக்கிறான் என்பதையும் தேவன் மெய்ப்பித்துக் காட்டுகிறார்.
அதேவேளையில் யோபுவின் வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுத்தப்படும் சத்தியங்களை ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்த ஒரு பழங்கால மனிதனுக்கே பொருந்தும் என்று எண்ணி அதை மட்டுப்படுத்தி விடலாகாது. இது உலகளாவிய தேவனுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் உபத்திரங்களுக்கான தீர்வையும், மற்றும் தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியம், தேவ ஜனங்களுடைய நீதியான வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையில் ஏற்படும் உபத்திரங்கள், போன்ற எல்லாவற்றிற்கும் இடையேயான இரகசியத்தையும் அறிந்து கொள்ளவும், மேற்சொல்லப்பட்ட சத்தியங்களுக்கு எதிரான “மோசமான இறையியல் சத்தியங்களை” சீர்படுத்தப்படவும் பெரிதளவு துணைசெய்கிறது. எப்படியெனில் “பாவத்தினால் மட்டுமே எல்லா உபத்திரவங்கள்” என்கிற தவறான சிந்தனை போக்கை உடைத்தெறிவதன் மூலமாக யோபுவின் புத்தகம் இதைச் செய்கிறது. வீழ்ச்சியுற்ற உலகத்தில் நீதிமான்களுக்கும் உபத்திரவம் உண்டு என்பதையும் யோபு புத்தகம் நமக்குக் கற்பிக்கிறது. யோபு 1:1 பகுதியில் சொல்வதைப் போலவே, யோபு உத்தமனும், சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்த போதிலும், ஏனைய அதிகாரங்கள் யோபுவினுடைய முழுமையான உபத்திரவத்தை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
நீதிமானுக்கு வரும் உபத்திரவத்தை விளக்கிக் காட்டுவதன் மூலம், யோபு புத்தகம் “உபத்திரவகால இறையியல்” என்று குறிப்பிடப்படும் கோட்பாட்டை சரிப்படுத்தும்படியாக உதவி செய்கிறது. தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய பாவத்தினால் உபத்திரவபடுகிறார்கள் என்றும் அவர்களுடைய நீதியுள்ள வாழ்க்கையே அவர்களை ஆசீர்வாதத்திற்கு நேராக வழிநடத்துகிறது என்கிற ஒரு சத்தியத்தையே “உபத்திரவகால இறையியல்” முன்மொழிகிறது. யோபுவின் மூன்று சிநேகிதர்களும் இவ்விதமான இறையியல் நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் பார்க்கலாம். மேலும் தற்போதைய நவீனகால விசுவாசிகளான நாமும் கூட இவ்விதமாக உபதேசங்களினால் சோதிக்கப்படுவதற்கு ஏதுவுண்டு. ஆனால் மிகச்சிறப்பாக யோபு புத்தகம் அத்தகைய சிந்தனையில் உள்ள பொய்யை களைந்து, அத்தகைய உபத்திரவத்தை கடந்து போகிறவர்களும் கூட அதனுடைய நோக்கத்தை அறியாதிருக்கும் வேளையிலும், தேவன் நீதிமான்களுடைய வாழ்க்கையில் உபத்திரவத்தை, அவர்களுடைய நன்மைக்காக, தன்னுடைய இறையாண்மை கொண்ட ஞானத்தின்படியே அனுமதிக்கிறார் என்பதையும் அற்புதமாக விளக்கி காட்டுகிறது.
3. யோபு புத்தகம் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பணியை நமக்கு முன்னறிவிக்கிறது.
யோபு தனக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக ஒருவரும் இல்லை என்கிற அவரது விருப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம், இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பின் பணியை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். யோபுவினுடைய உபத்திரவம் நீளும் போது, யோபு தேவனிடம் கேள்வி கேட்க முனைகிறதையும், ஒரு கட்டத்தில் கோபமடைந்து, தங்கள் இருவர் மேலும் கைகளை வைக்கத்தக்க ஒரு மத்தியஸ்தன் இல்லையே என்றும் அங்கலாய்க்கிறதையும் பார்க்க முடிகிறது (யோபு 9:32–35). மெய்யாகவே, புதிய ஏற்பாடு அத்தகைய ஒரு மத்தியஸ்தரை இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் நமக்கு கொடுத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. (1 தீமோ. 2:5–6).
ஆனால் தேவனுடைய உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் நீதிமானும் மிகப்பெரிய உபத்திரங்களினூடே கடந்து செல்ல கூடும் என்கிற சத்தியத்தை அறிவிப்பதன் மூலமாக யோபு புத்தகம் கிறிஸ்துவினுடைய மீட்பின் பணியை நமக்கு பிரதானமாக முன்னறிவிக்கிறது. நாம் மேலே சிந்தித்த வண்ணமாக, தேவனையும் யோபுவையும் மெய்ப்பித்து காண்பிக்கும்படியாகவே, நீதிமானாகிய யோபு உபத்திரவத்திற்குள்ளாக கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. உண்மையாகவே, இயேசு கிறிஸ்துவும், தேவனுடைய உன்னதமான மீட்பின் நோக்கத்தை நிறைவேற்றி, அவருடைய ஜனங்களுக்கான இரட்சிப்பின் பணியை செய்து முடிக்கும்படியாய், பூரண நீதிமானாகிய அவர் தேவனுடைய கோபம் மற்றும் பாடுகள் என்னும் உபத்திரவத்தினூடே கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. யோபுவின் வாழ்க்கை சரித்திரம் சிலுவையின் மகத்துவத்தையே நமக்கு முன்னறிவிக்கிறது. மேலும் சிலுவையை பற்றிய சத்தியத்தில் மட்டும்தான் உபத்திரவத்தினுடைய அர்த்தத்தையும் நோக்கத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்பதே நிதர்சன உண்மை.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.